நூலறிமுகம் நூல் : பூ பூத்த பாலைவனம்

நூலறிமுகம்
நூல் : பூ பூத்த பாலைவனம்
நூலாசிரியர் : ட்டாளைச்சேனை தஸ்லீம் ஷியாத்
வெளியீடு : கலாசார அபிவிருத்தி மையம்

நூலறிமுகம் : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்

கவிதை என்கிற வரையறைக்குள் பல்வேறு கருத்தாளமிக்க விடயங்கள் காணப்பட்டாலும் கவிதைக்கும் சில வரையறைகள் இருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சிலர் பொதுமேடைகளிலும், பள்ளிப் படிகளிலும், பத்திரிகைகளிலும் எதையோ கிறுக்கிவிட்டு கவிதையாளர்களாக நம்மத்தியில் அறிமுகமாகி உள்ளவர்களும், அறிமுகமாக துடித்துகொண்டிருப்பவர்களும், தங்களுக்கு தாங்களே பட்டப்பெயர்களை சூட்டிக்கொண்டு கவிஞர்களாக, எழுத்தாளர்களாக பவனி வந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், இலைமறைகாயாக சிலர் விதிவிலக்காகவும் காணப்படுகின்றனர். அவர்களுள் அட்டாளைச்சேனை தஸ்லீம் ஷியாத் ஒரு வித்தியாசமான ஆக்கப்படைப்பாளராக காணப்படுகின்றார்.

அந்த வகையில் கவிதை உலகில் தன் ஆழுமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த தஸ்லீம் ஷியாத். தன்னுடைய 'பூ புத்த பாலைவனம்' எனும் கவிதைத் தொகுதியின் ஊடாக கவிதையுலகில் தன் படைப்பிலக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இத் தொகுதியில் 29 தலைப்புக்களில் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், சமூகத்திற்கான தன்பணியினையும் தத்ரூபமான முறையில் தந்துள்ளார் கவிஞர் தஸ்லீம் ஷியாத்.

தமது எண்ணக்கருக்களை கவிதையாக வடிக்கின்றபோது அக்கவிதையானது பழக்கத்தில் உள்ள நிலையிலிருந்து சிறிதளவோ முற்றிலுமோ மாறுபட்டுத் தோன்றுகின்றபோது அது புதுமையாகும். வழிவழியாக மரபு கெடாது யாப்பிலக்கணத்தோடு பொருந்தி வரும் கவிதைகளிலிருந்து மாறுபடும் கவிதைப் படைப்புதான் உண்மையான புதுக்கவிதை என்போரும் உண்டு. புதுக்கவிதைகள் உருவத்தால் மட்டுமன்றி, உள்ளடக்கம், உத்திமுறைகள் ஆகியவற்றாலும் புதுமையுடையனவாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் ஷியாத்தின் கவிதைகளும் வித்தியாசமான கோணத்திலிருந்து வித்தியாசமாகத் தந்துள்ளார்.

'அன்பு மகன்' எனும் தலைப்பில்; 'இன்று உலகம் கண்டு வியக்கும் வண்ணம் பூலோக பூமியில் புதிதாய் பூத்த ஒற்றை ரோஜாவாய் என் இதய பூமியில் பூத்தாய் என் அன்பு மகன்' என்று தன் மகனின் வருகை பற்றியும், 'அடையாள அட்டை' எனும் தலைப்பில் 'வாக்குச் சாவடிக்கு அடையாளத்தை உறுதிப்படுத்த வாக்காளன் எடுத்துச் செல்லும் அடையாள அட்டையாய் நான்..' மேலும் யுத்தகால மனித அவலங்களின் ஓரங்கமாக நடந்தேறிய மறக்கமுடியாத மூதூர் சம்பத்தை முன்னிலைப்படுத்திய ஒரு கவிதையில் கவிஞர் 'மண்ணிற்கு சண்டை செய்யும் இரு பூணைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறோம் கண் விடுக்காத எலிகளாய்...' என்கிறார். கவிஞரின் அபாரமான கற்பனை.

புரிந்து கொள் எனும் தலைப்பில் ஒரு காதல் கவிதையிது. புரிந்து கொள் நீ மட்டும் ரோஜாவாக பூத்தால் போதாது நானும் உன்னருகில் முள்ளாக இருந்தால் தான் நீ அழகாய் இருப்பாய்' என்கிற வரிகள் நெருக்கத்தின் நெருடல்களை அள்ளிவீசுகின்றன. மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களது நினைவுக்காக எழுதப்பட்ட 'மலரவேண்டும் நீ மறுபடியும்' எனும் தலைப்பில் கவிஞரின் அபாரமான கவித்துவம் உண்மையில் மெய்சிலிர்க்கச் செய்கிறது. அதாவது 'சமூகத்தை முட்பாதங்களால் உதைத்தபோது பூவினால் ஒத்தடம் கொடுத்து காப்பாற்றிய உத்தமன் நீ..., குழந்தைகளை பிரிந்து தாய்மார்கள் அழுத காலத்தைவிட கன்றைப் பிரிந்து பசுக்கள் கதறிய காலத்தை விட உன்னை இழந்து அழுகிறார்கள் காலம் பூராக என்கிறார் கவிஞர் தஸ்லீம் ஷியாத்.

நியாயமா எனும் கவிதையில் சமுகத்தின் விடுதலைநோக்கிய கவிதை வரிகளும், காதல் ததும்பும் அன்புப்பரிமாற்றங்களுடன் கலந்துவிட்ட சோடிக் கவிதைகள், தேர்தல் காலத்தை நினைவுறுத்தும் பொய்யர்கள் எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கவிவரிகளும், பூ பூத்த பாலைவனம் எனும் தலைப்பில் 'வசந்தம் காணாமல் வரண்டு கிடந்தது என் மனசு பாலைவன மாதிரி அதில் ஒரு பூவாக புன்னகை புரிந்து வந்தாய் நீ என் வாழ்க்கை துணையாகி நீ வந்ததும் வந்தது என் வாழ்வில் புது வசந்தம்' என்கிற கவிவரிகளுடாக வாழ்க்கைத் தத்துவத்தை ஊடறுத்து நிலைநிறுத்தி நிறுவுகின்றார் கவிஞர்.

இந்நூலின் வெளியீட்டுரையை கலாசார அபிவிருத்தி மையத்தினரும், அணிந்துரையை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி எம்.ஏ.எம். றமீஸ் வழங்கியுள்ளார். தன்னுடைய அணிந்துரையின் ஒரு கட்டத்தில் 'தஸ்லீம் ஷியாத்தின் கவிதை பற்றிய ஆர்வம் தவிர்க்க முடியாததும் கவனத்திற்குரியதுமாகும். ஆனால் கவிதை மிகச் சிறந்த படிப்புக்களில் ஒன்று. ஒரு சொல், ஒரு வரி, நான்கு வரிகள் மூலமே அது பெரிய ஒரு செய்தியைச் சொல்லி விடும். ஆழமான அதிர்வுகளையும் பொருளையும் வியாக்கியானத்தையும் தந்துவிடும். எதிர்காலத்தில் இன்னும் இவர் கவிதைகள் பல படைக்க வேண்டும். வாழ்த்துக்கள்' என்கிறார் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள்.

உள்ளத்தில் இருந்து உதிரும் பூக்கள் எனும் தலைப்பில் நூலாசிரியரான கவிஞர் ஷியாத் தனது எழுத்துலகில் கால்பதிக்க உதவியர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து, காதல் தோல்வியில் முடிவடையும் போது அதனால் ஏற்படுகின்ற வலிகளையும், பிரிகின்றபோது ஏற்படுகின்ற சோகமிக்க வலிகளையும் கவிதைகளாக பூத்திருக்கின்ற என்று கூறுகின்றார்.

கவிஞர் அன்புடீனின் பின் அட்டை வாழ்த்துரையில்
'பழம் நழுவி பாலில் விழுந்ததைப்போல்
கல்வியூர் அட்டாளைச்சேனையில் பிறந்து
கலையூர் பாலமுனையில் வாழ்கிறார் தஸ்லீம் ஷியாத்
தென் கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பட்டதாரி ஆசிரியர் இவர்
ஆசிரியர் பணியை தொழிலாகக் கருதாது
சேவையாகக் கருதி கடமையின் கண்ணியம் பேணுபவர்....
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி
அகரத்தைக் கடந்துவிட்ட இவரது கவிதைகள் வளர்ந்து பறந்து
தொடும் இனிச்சிகரம்' என்று இந்நூலுக்கு இறக்கை கட்டி பறக்க விட்டுள்ளார் ஆசுகவி அன்புடீன்.

தன் அன்பு மகன் அப்ஷின் அஹமட்டுக்கு சமர்ப்பணமாகும் இந்நூல், மொத்தத்தில் சிறந்ததொரு கவித்துவமிக்க தொகுதியிது. கவிஞர் தஸ்லீம் ஷியாத்தின் இரண்டாவது கவிதைத் தொகுதியாக வெளிவரும் பூ பூத்த பாலைவனம் வாசிக்கவும், காதல் கொள்ளவும், வலிகளின் வேதனைகளை சுகிக்கவும், சமூகத்தின் விடியலை சுவாசிக்கவும் பாலைவனத்தில் பூக்கவைத்துள்ளார். இப் பூ நிரந்தரமாய்ப் பூத்திட நாமும் வாழ்துவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :