பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 7 விக்கட்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியது. இதனையடுத்து மஹேல ஜயவர்தன வெற்றி சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார்.
சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாலும் இரண்டு அணிகளும் தத்தமது முதலாவது இன்னிங்ஸ்களில் தலா 450க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததாலும் இப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்றே நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது கருதப்பட்டது.
ஆனால் போட்டியின் கடைசி நாளான இன்று பாகிஸ்தானின் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையை ஊடறுத்த ரங்கன ஹேரத் ஆறு விக்கட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த வெற்றியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் இரட்டைச் சதம் குவித்த குமார் சங்கக்கார, 9 ஓட்டங்களால் சதத்தைத் தவறவிட்ட ஏஞ்சலோ மெத்ய+ஸ், அரைச் சதம் குவித்த கௌஷால் சில்வா, தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பங்களிப்பும் இருப்பதை மறுக்கலாகாது.
போட்டியின் நான்காம் நாளன்று தனது முதலாவது இன்னிங்ஸை 533 ஓட்டங்களுக்கு 9 விக்கட்கள் என்ற நிலையில் நிறுத்திக்கொண்ட இலங்கை அணி, அன்றைய தினம் ஆட்ட நேர முடிவின்போது பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டைக் கைப்பற்றியிருந்தது.
போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சார்பாக முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்த ய+னிஸ் கான் பிரகாசிப்பார் என பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரங்கன ஹேரத் அவரது விக்கட்டை நேரடியாகப் பதம் பார்ததன் மூலம் பாகிஸ்தான் அணி ஆட்டம் காணத் தொடங்கியது.
இன்றைய பகல்போசன இடைவேளையின்போது 4 விக்கட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான், தேநீர் இடைவேளைக்கு சற்றுப் பின்னர் சகல விக்கட்களையும் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் மிகத் துல்லியமாக செயல்பட்ட ரங்கன ஹேரத் 11 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 30.2 ஓவர்கள் பந்துவீசி 48 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களைக் கைப்பற்றி பாகிஸ்தானியரை அதிரவைத்தார்.
ரங்கன ஹேரத்துக்கு பக்கபலமாக பந்துவீசிய டில்ருவன் பெரேரா 68 ஒட்டங்களுக்கு 2 விக்கட்களைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்த்தாடுவதை விடுத்து தடுத்தாட விளைந்ததன் காரணமாகவே விக்கட்களை இழந்தனர்.
எட்டாம் இலக்க வீரர் சார்ஃப்ராஸ் அஹமத் நிதானத்துடனும் உறுதியுடனும் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றார்.
இவரை விட அஸ்ஹர் அலி 41 ஓட்டங்களையும் மிஸ்பா உல் ஹக் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
99 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைவதற்கு சீரற்ற கால நிலையும் போதிய வெளிச்சமின்மையும் தடையாக வந்து விடுமோ என எண்ணிய இலங்கை அணியினர் சிரேஷ்ட வீரர் மஹேல ஜயவர்தனவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இரண்டாவது இன்னிங்ஸில் களமிறக்கியது.
ஆரம்ப வீரர்களான மஹேல 26 ஓட்டங்களையும் உப்புல் தரங்க 12 ஓட்டங்களையும் தொடர்ந்து குமார் சங்கக்கார 21 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். எனினும் ஏஞ்சலோ மெத்ய+ஸ் (25 ஆ.இ.), கித்ருவன் வித்தானகே (11 ஆ.இ.) ஆகிய இருவரும் 4.4 ஓவர்கள் மீதமிருக்க இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.
ரங்கன ஹேரத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது கடைசியுமான டெஸ்ட் போட்டி எஸ். எஸ். சி. மைதானத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்மாகவுள்ளதுடன் மஹேல ஜயவர்தனவின் பிரியாவிடை டெஸ்டாகவும் அமையவுள்ளது.vk

0 comments :
Post a Comment