இன்றைய இஸ்ரேல் குண்டு வீச்சில் மேலும் 30 பாலஸ்தீனியர்கள் மரணம்; பலி 1712 ஆக உயர்வு


காஸா பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். இந்த சண்டையை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சண்டை தொடங்கியது.

கடந்த 30-ம் தேதி இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்திருந்த ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நாட்டின் பீரங்கிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

முன்னறிவிப்பு இன்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இரு தரப்பினரும் தாக்குதல்களை கைவிட்டு உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதனையேற்று, இஸ்ரேல் படைகளும் ஹமாஸ் போராளிகளும் நேற்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு சம்மதித்தனர். இந்த போர் நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு வரை அமலில் இருக்கும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி ஆகியோர் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்த இடைக்காலத்தை காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும், இறந்தவர்களின் பிரேதங்களை அடக்கம் செய்யவும் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என கருதப்பட்டது. ஆனால், போர் நிறுத்தத்துக்காக குறிப்பிடப்பட்டிருந்த நேற்று காலை 8 மணி முதல் ஒரு மணி நேரம் காஸா பகுதியில் அமைதி நிலவியது. அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேலின் டாங்கி படைகளூம், போர் விமானங்களும் காஸா பகுதி மீது மீண்டும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கின.

காஸாவின் ரஃபா பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 65 பாலஸ்தீனியர்கள், கான் யூனிஸ் பகுதி தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் என சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் போராளிகள் அறிவித்திருந்தனர். போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு மட்டும் நேற்று இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் 51 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், இதனால் இஸ்ரேல் வீரர்களின் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட போர் நிறுத்தத்தை மீறியதாக ஹமாஸ் படையினருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட இஸ்ரேல் வீரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், காஸா பகுதி மீது இன்றும் இஸ்ரேலின் டாங்கி படைகளூம், போர் விமானங்களும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இஸ்ரேல் வீரரை தேடி கண்டுபிடித்து மீட்பதற்காக காஸாவுக்கு உட்பட்ட ரஃபா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய நேற்றைய தாக்குதலில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

இதற்கிடையில், ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறி வந்த ராணுவ வீரர் ஹமாஸ் வீரர்களுடனான மோதலில் வீர மரணம் அடைந்ததாக அறிவித்த இஸ்ரேல் ரஃபா பகுதியை குறி வைத்து இன்றும் தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 30 பேர் பலியானதாக ஹமாஸ் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் மருத்துவ சிகிச்சை பெற உதவிடும் வகையில் காஸாவை ஒட்டியுள்ள ரஃபா எல்லைப் பகுதியை திறந்து வைத்துள்ளதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய தாக்குதலையும் சேர்த்து காஸா பகுதியில் இதுவரை 1712 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் எனவும் சர்வதேச போர் கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தவிர, சுமார் 9 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் காயமடைந்து போதிய மருத்துவ சிகிச்சைக்கும் வழியின்றி அவதிப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள எங்களுடைய சமுகவலைதள பட்டன்களை அழுத்தி பின் தொடருங்களேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :