மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், இப்போது, அந்நாட்டின் பல நகரங்களை, ஐ.எஸ்.ஐ.எஸ்., கைப்பற்றியுள்ளனர். இதனால், ஷியா பிரிவு முஸ்லிம், பிரதமர் நுாரி அல் - மாலிகி தலைமையிலான அரசுக்கு, தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. ஈராக்கிலும், சிரியாவிலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகுதிகளை இணைத்து, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.,அல் - பாக்தாதி, கடந்த 19ல் பிறப்பித்த உத்தரவுப் படி, 'ஈராக்கில் உள்ள கிறிஸ்தவர்கள், தாங்களாக முன்வந்து இஸ்லாமியர்களாக மாற வேண்டும்; இல்லையேல், 'ஜிஷியா' வரி கொடுக்க வேண்டும்; இல்லையேல், கொல்லப்படுவர்' என, மிரட்டப்பட்டுள்ளனர்.
இதனால், ஏராளமான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களாக மாறியுள்ளனர். பலர், தங்கள் வழிபாட்டுத் தலங்களை பூட்டி விட்டு, பத்திரமான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். இதனால், பல சர்ச்சுகளில், வழிபாடு நடைபெறவில்லை.இதுகுறித்து, பாக்தாத் நகரில் உள்ள ஆங்கிலிகன் சர்ச்களின் பிஷப், கெனான் ஆண்ட்ரூ வைட், ''ஐ.எஸ்.ஐ.எஸ்., கை ஓங்கிய பிறகு, ஈராக்கில், கிறிஸ்தவ மதம் அழிந்து வருகிறது; அழிவை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது,'' என்றார்.
கடந்த 2003ல், ஈராக்கில், 10 லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர்; அவர்களின் எண்ணிக்கை, இப்போது, ஐந்து லட்சத்திற்கும் வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக, ஆண்டுக்கு ஆண்டு மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில், ஈராக்கில் கிறிஸ்தவ மக்கள்தொகை குறைந்து வருகிறது.

0 comments :
Post a Comment