எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு 25.07.2014 வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு சபா மண்டபத்தில் முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது. இங்கு நடைபெற்ற உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களை தொகுத்து தருகின்றோம்.
உள்ளுராட்சி சபைகளுக்கான ஊழியர்களை நிரந்தர நியமனத்துக்குள் உள்வாங்கும் விடையத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சரான முதலமைச்சரின் செயலாளரின் பிரதிநிதியின் தலைமைத்துவத்தின் கீழே நடாத்தப்பட்ட நேர்முகப்பரிட்சையில் கொடுக்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
நேற்று (25.07.2014) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு இடம்பெற்றபோது, மாநகரசபையின் உறுப்பினர் இஸட். கே.எச். ரகுமான் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து உரையாற்றிய முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
இந்த விடயத்தில் முதல்வரோ அல்லது உறுப்பினரோ அல்லது வேறு யாருடைய தலையீடுகளோ இடம்பெறவில்லை.
குறித்த நியமனங்கள் விடையத்தில் யாருக்காவது அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக கருதினால் அவர்கள் மேன்முறையீடு செய்வதற்கோ அல்லது நீதிமன்றம் செல்வதற்கோ முடியும் என்றும் தெரிவித்தார். இங்கு அரசியல் தலையீடுகளோ வேறு ஏதும் தலையீடுகளோ இடம்பெறவில்லையென அழுத்தமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
சாய்ந்தமருதில் உள்ள மாநகரசபையின் சுகாதார மத்திய நிலையத்தை மிகவும் அழகாக செய்து கொண்டுவருவதாகவும் அதற்கு பிரதி முதல்வர் அவர்களது அனுமதியுடன் உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் அவர்களை முதல்வரின் பிரதிநிதியாக நியமித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். இன்றைய சபை அமர்வின் போது வெற்றிடமாக இருந்த பிரதி முதல்வர் பதவிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் அவர்களது கன்னியுரையும் இடம்பெற்றது. அவரது உரையின் போது தனக்கு வழங்கப்பட்டுள்ள அமானிதத்தை சிறந்தமுறையில் கொண்டு செல்லவுள்ளதாகவும் அதற்கு சபை ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சபையில் பிரதி முதல்வராக பதவியேற்று எம்.ஐ.எம். பிர்தௌஸ் தனது கன்னி உரை நிகழ்த்தும்போது, முதலில் எனக்கு இந்த பதவியை தந்த கட்சித் தலைமை மற்றும் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி கூறுகின்றேன். எனக்கு தரப்பட்டிருக்கின்ற அமானிதத்தை நான் மிகச் சிறப்பாக மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலம் பாதுகாப்பேன். அரசியல்வாதிகளுக்கு பலராலும் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு சேவை செய்யாது தன்னலமியாக செயற்படுகின்றான் என்பதாகும். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இந்த அரசியலில் எனது பொறுப்பை உணர்ந்தே தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறேன். ஆதனால் மக்கள் கூறுவதுபோன்று அரசியல் சாக்கடையல்ல. சிலர் அவ்வாறு நடந்துகொண்டாலும் அரசியல் என்பது ஒரு புனிதமான பணியாகும். இதனை தூய எண்ணத்துடன் பொறுப்பேற்று களங்கமில்லாமல் செயலாற்றினால் எந்த விமர்சனத்தையும் நாம் பெறமாட்டோம். ஆந்த அடிப்டையில் எமது முதல்வர்,சகல உறுப்பினர்களுடனும் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளேன் என்றார்.
இங்கு உரையாற்றிய கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் ஏ.அமிர்தலிங்கம் அவர்கள் பிரதிமுதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பிரதி முதல்வருக்கு கடமைகளை பகிர்ந்தளிக்கும் பட்சத்தில் சபையின் நடவடிக்கைகள் இலகுவாக செல்ல வாய்ப்புள்ளதாகவும் அதற்க்கான ஏற்பாடுகளை சபை முதல்வர் அவர்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சபை நடவடிக்கையின் போது உறுப்பினர் ஏ.ஆர். அமீர் சபையில் உரையாற்றுகையில் நீதி நியாயம் இஸ்லாமிய கிலாபத் ஆட்சி ஜனநாயகம் பற்றி எல்லாம் பேசுவோர் தாங்கள் இவ்வாறானதொரு வகையில் நியமிக்கப்பட்டிருக்கிறோமா? என சிந்திக்க வேண்டும். இந்த நியமனவிடயத்தில் நான் எந்தக்கருத்தையும் குறிப்பிட மாட்டேன். குல்முனை மாநகர சபையின் ஆட்சியை நாம் பார்க்கும்போது தொடர்ந்தும் 4 வருடங்கள் யாரும் பதவியில் இருந்த வரலாறு இல்லை. அந்தத் தொடரில்தான் இந்த பிரதி முதல்வர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு தொடரான நிலைமையாக போயுள்ள நிலையில் நாம் இதைப்பற்றி அலட்டிக்கொள்ள முடியாது. எல்லாம் படைத்தவனின் நாட்டப்படியே நடக்கும் என்பது எமது நம்பிக்கையாகும் என்று குறிப்பிட்டார்.
உறுப்பினர் ஏ.ஏ.பஸீரால் கடந்த சபை அமர்வுகளின் போது முன்வைக்கப்பட்ட சாய்ந்தமருது எல்லையில் உள்ள வரவேற்பு வளைவுக்கு வாசகங்கள் பொறிப்பது தொடர்பில் முதல்வர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயம் பற்றி பலரும் பல்வேறு விமர்சனங்களை எம்மீது பொழிகின்றனர். அதனைத் தவிர்க்க மிக விரைவில் வரவேற்பு வளைவிற்கு வாசகங்கள் பொறிப்பது தொடர்பாக கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்றும், கல்முனை மாநகரசபை எல்லைக்குள் அள்ளப்படும் திண்மக்களிவுகளை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்குள் இட்டு அதன் மேல் மண்ணிட்டு நிரப்பிக்கொள்ள முடியுமானால் அதனுடாக எமது மாநகர சபைப் பணம் மீதப்படுத்தப்படும். ஆதன மூலம் வேறு அபிவிருத்தி வேலைகளை நாம் மேற்கொள்ள முடியும் என்றும் பல்வேறுபட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உரையாற்றும்போது, பிரதி முதல்வராக பிர்தௌஸ் நியமிக்கப்பட்டமையை வரவேற்கின்றேன். இன்றைய நிகழ்வு கன்னி உரை என்பது நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோதும் சகல உறுப்பினர்களின் அனுமதியோடுதான் அவரது கன்னி உரையாற்றப்பட்டது என நினைக்கின்றேன். ஏற்கனவே பல விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாதபோதும் இச்சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த காலங்களில் பிரதி முதல்வர் பதவி என்ற எத்தனையோ கற்பனைகள் எதிர்பார்ப்புக்கள் இருந்த காலத்தில் நானும் கூட சட்டத்தரணி றக்கீப் நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்தேன். அதேபோன்று சாய்ந்தமருதுக்கு கிடைக்கும் என்றிருந்தால் நண்பர் பஷீருக்கு கிடைக்கும் என்றிருந்தேன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அக்கட்சியின் சரியான ஒரு தீர்மானமாகக் கூட இருக்கலாம். ஆனால் தற்போதைய முதல்வர் நியமிக்கப்பட கூடாது. முன்பிருந்த ஸிராஸ் மீராசாஹிபே தொடர்ந்தும் இருக்க வேண்டும். என்று கூறியவர்களுள் தற்போதைய பிரதி முதல்வரும் ஒருவர். புதிய முதல்வர் நியமிக்கப்பட்டதனாலேயே இன்று பிர்தௌஸ் பிரதி முதல்வரானார். ஏன்பதை புரிந்து அவர் எம்முடன் இணைந்து நியாயமாக செயற்பட முன்வர வேண்டும் என்றார்.
இந்த கல்முனை மாநகர சபை வரலாற்றிலே மிகவும் ஊழல் மோசடி நிறைந்த மாநகர சபையாகவே கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும் பல முதல்வர்கள் இங்கு வந்து காலங்கள் முடிந்தாலும், எமது தற்போதைய முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்கள் நல்ல முறையில் இந்நிர்வாகத்தை கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. ஆனால் உண்மையிலே எமது முதல்வரைப் பொறுத்தவரையில் அவர் சிறந்த ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்தாலும் கூட அவர்களுக்கு இங்கு நடக்கின்ற சில விடயங்களை கண்டும் காணாததுபோலா ? அல்லது திட்டமிட்டா ? என்னவென்று எனக்குத் தெரியவில்லை.
உறுப்பினர் இஸட் ஏ.எச். றஹ்மான் உரையாற்றுகையில் அன்மையில் நேர்முகப்பரீட்சை நடந்திருக்கின்றது. அதில் சில திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் நடந்திருக்கின்றது. அது விடயமாக பலரும் என்னுடன் பேசியிருக்கின்றார்கள். அந்த நியமனங்கள் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். சேவை மூப்புடன் தராதரமும் உள்ளவர்கள் இருக்கத்தக்கதாக, சிலர் 10, 08 நாட்கள் அல்லது ஒரு மாதம் கையொப்பமிட்டவர்கள் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்பட திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் நடைபெறுவதாக நான்; அறிந்துள்ளேன். இவ்வாறான விடயங்களில் உங்கள் நேர்மையை முதல்வர் வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


0 comments :
Post a Comment