தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சந்தேகம் நிலவுகின்றது. எனவே, இந்த சந்தேகத்தை போக்குவதற்காக அரசாங்கமும் தமிழ்க் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதில் தவறில்லை என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அரசும் கூட்டமைப்பும் பேச்சு நடத்தலாம். இது தொடர்பில் இரண்டு தரப்பினரும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாமல் இருக்கின்றமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின்போது தமிழ்க் கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு கொண்டுவர உதவுமாறு கேட்டிருந்தார்.
ஏற்கனவே எட்டப்பட்டுள்ள உடன்பாட்டின் பிரகாரம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்திவிட்டு அதில் ஏற்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவது குறித்து ஆராயலாம் என்று கூட்டமைப்பு கூறிவருகின்றது.
இந்நிலையில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் தேசிய பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் நான் ஆரம்ப காலத்திலிருந்து வலியுறுத்திவருகின்றேன்.
இந்நிலையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த யதார்த்தகரமான இடமாக பாராளுமன்றத் தெரிவுக்குழு காணபபடுகின்றது. எனினும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறமாட்டோம் என்று கூட்டமைப்பு கூறிவருகின்றது.
இந்நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் போக்கினால் மட்டுமே அந்தக் கட்சியை தெரிவுக்குழுவுக்குள் கொண்டுவர முடியும். அவ்வாறு தமிழ்க் கூட்டமைப்பின் சந்தேகத்தை போக்வுவதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தலாம். இதனை தவிர வேறு வழியில்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது.
கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் போக்கவும் அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.
எனவே கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரும் முன்னர் அரசாங்கமும் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்பதை வலியுறுத்துகின்றோம். எவ்வாறெனினும் தேசியப் பிரச்சினைக்கு யதார்த்தகரமான தீர்வைக் காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே பொருத்தமான சிறந்த இடம் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
எனினும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரப்போவதில்லை என்று கூட்டமைப்பு கூறிக்கொண்டிருப்பதால் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் புரிந்துணர்வை உருவாக்கவும் அரசும் கூட்டமைப்பும் பேச்சு நடத்தலாம். இது தொடர்பில் அரசாங்கம் கூட்டமைப்பும் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
.jpg)
0 comments :
Post a Comment