நாட்டில் இராணுவ ஆட்சி முறை ஒன்று ஏற்படுவது ஜனநாயகத்திற்கு பாரிய சவாலாக அமையும். இன்று வடக்கில் இராணுவ அடக்குமுறையினை ஏற்படுத்தி தமிழ் மக்களை பழிவாங்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். வட மாகாண ஆளுநரின் மீள் நியமனம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எதிர்ப்பு நியாயமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடமாகாண ஆளுநர் நியமனமானது தவறானது என அரசாங்கத்தில் இருக்கும் இடது சாரிக்கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
நாட்டில் இராணுவ ஆட்சியொன்று ஏற்படுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி எப்போதுமே எதிர்ப்பு தெரிவிக்கும். நாட்டின் இராணுவ ஆதிக்கம் அதிகரித்தமை தொடர்பில் கடந்த காலங்களிலும் நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இன்று வடக்கு மாகாணம் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் கோரிக்கைகள் இராணுவ சப்பாத்துக்களினால் மிதிக்கப்பட்டு விட்டது. வடக்கு மட்டுமன்றி நாடு முழுவதிலும் இராணுவ அதிகாரம் பரப்பப்பட்டு வருகின்றது. இவ்வாறு அரசாங்கம் செயற்படுவது எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளை அரசாங்கமே உருவாக்கும் வகையில் அமைந்து விடும்.
சர்வதேச விசாரணை மூலம் இன்று இலங்கை தண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று வரையில் அரசாங்கம் சர்வதேச குற்றச்சாட்டுக்குள் சிக்காது இப்போது ஓரளவேனும் தப்பி இருக்கின்றதெனில் அதற்கு ஐக்கிய தேசியக்கட்சியே காரணமாகும். நாம் அன்று சர்வதேச ஒப்பந்தங்களை ஏற்று ரோம்பிரகடனத்தில் கைச்சாத்திட்டிருந்தால் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருப்பார். ஆயினும் நாம் அன்று எடுத்த புத்திசாலித்தனமான செயற்பாடுகள் இன்று அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் குற்றங்களைக்கூட காப்பாற்றுகின்றது.
எனினும் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் சரியாகப்பயன்படுத்தி நாட்டில் ஐக்கியத்தினை ஏற்படுத்தாது மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது நாட்டிற்கே பாதிப்பாக அமையும்.
வடக்கில் இன்று இராணுவ அடக்கு முறைகளை கையாண்டு சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் செயலை அரசாங்கம் செய்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஏன் வடக்கில் இராணுவ அதிகாரம்? வடக்கிற்கு இன்று சிவில் நிர்வாகிகளே அவசியம். தமிழ் மக்களுக்கு சிவில் பாதுகாப்பினை வழங்க வேண்டுமே தவிர இராணுவ நிர்வாகம் அவசியமில்லை. பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்காது அவர்களின் உரிமைகளை பறித்து அவர்களை பழிவாங்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளை பறிப்பது மீண்டும் அவர்களை ஆயுதமேந்த வைக்கும் செயலாகும். இதை அரசாங்கம் மீண்டும் எதிர்பார்க்கின்றதா? உண்மையிலேயே நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் தமிழ் மக்களை சுயமாக செயற்பட விட வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் வட மாகாண ஆளுநரின் மீள் நியமனம் தொடர்பில் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோருவது நியாயமானதாகவே உள்ளது. அரசாங்கம் இதை விளங்கிக்கொண்டு இணக்கப்பாட்டிற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment