அதிகாரப் பகிர்வினூடாக தமிழ் மக்களின் உரிமைகளை கோருவது தனி நாட்டுக்கோரிக்கையில் ஒரு அங்கமேயாகும். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வார்த்தைகளில் உண்மையில்லை என தெரிவிக்கும் அரசாங்க பங்காளிக்கட்சிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் நகர்வு நாட்டில் பிரிவினைக்கான பாதையினை உருவாக்குகின்றது எனவும் குற்றம் சுமத்துகின்றன.
இறையாண்மையோடு வாழும் உரிமைகளைத் தான் கோருகின்றோம். நாட்டை பிரிக்கும் எண்ணம் இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் அரசாங்க பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய தேசிய சுதந்திர முன்னணி தலைவர்களிடம் வினவிய போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஜாதிக ஹெல உறுமய
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இணைச் செயலாளரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவிக்கையில்;
தமிழ் தேசியக்கூட்டமைப்பு எப்போதுமே பிரிவினைவாதக் கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று வடக்கில் தனி உரிமைகளையும் தனி கூட்டுக் கோரிக்கைகளையும் கேட்டு நாட்டின் ஜனநாயகத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் எதிராக செயற்படுவது தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டுமேயாகும். யுத்த கால கட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் துணை நின்று பயங்கரவாதத்தை ஆதரித்தவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கையான விடயமாகும். இதை ஒருபோதும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அதேபோல் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்று தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் பேசுகின்றார். ஆனால் தமிழ் மக்கள் மீனவர் சமூகம் இன்று வடக்கில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றது. இந்திய தலையீடு தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கின்றது என்பது ஏன் கூட்டமைப்பிற்கு விளங்கவில்லை.
வடக்கின் தனி உரிமைகளை கோருவதும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதும் கூட்டமைப்பின் நாடகம் மட்டுமேயாகும். இதில் எவ்வித உண்மைகளும் இல்லை. அதேபோல் அதிகாரப்பகிர்வின் மூலம் வடக்கை பிரித்தெடுக்கும் முயற்சியினை இன்று சம்பந்தன் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் செய்கின்றனர். இதற்கு சர்வதேச சக்திகளும் துணை நிற்கின்றன. இதனை அரசாங்கம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இவர்களின் வார்த்தைகளில் மயங்குமாயின் இறுதியில் இலங்கைக்குள் இரு நாடுகள் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி
இது தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கான உரிமைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் சகல மக்களுக்குமான உரிமைகள் சுதந்திரமாகவும் எவ்வித தடைகளுமின்றியும் அனுபவிக்க முடிகின்றது. அவ்வாறு இருப்பதன் காரணத்தினாலேயே வடக்கில் ஜனநாயக ரீதியில் ஒரு தேர்தல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு யுத்தத்திற்குப் பின்னர் பல நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இவை அனைத்திற்கும் மேலானதொரு உரிமை கேட்பதானது தமிழீழம் ஒன்றினை உருவாக்குவதற்காகவே. வடக்கிற்கான சட்ட உரிமைகளையும் நீதிசார் உரிமைகளையும் கோருவது வடக்கில் தமக்கெனவொரு ஆட்சியினை அமைக்கும் நோக்கிலேயே. இன்று அதிகாரப் பகிர்வினூடாக வடக்கின் முழு அதிகாரங்கள் கோரப்படுவதானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரிவினைவாத நாட்டுக் கோரிக்கையின் ஓர் அம்சமாகும். இதை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பு இன்று மேடைகளில் ஒற்றுமை பற்றியும் இணக்கப்பாடு தொடர்பிலும் பேசுகின்றனர். ஆனால் இவர்களின் வார்த்தையில் உண்மை இல்லை. அன்று ஆயுதம் மூலம் பெற முயன்ற தனி நாட்டினை இன்று அரசியலின் ஊடாக பெற முயற்சிக்கின்றனர். அதை அரசாங்கம் நம்பினால் அது அரசாங்கத்தின் இறுதிக்காலமாகவே அமைந்து விடும். கூட்டமைப்பினர் இன்று புலம்பெயர் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து தமது அரசியல் தந்திரத்தின் மூலமாக நாட்டில் பிரிவினைக்கான பாதையினை ஆழமாக பதித்து விட்டனர். அன்று விடுதலைப்புலிகள் சென்ற பாதையும் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு செல்லும் பாதையும் ஒன்று. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
வி

0 comments :
Post a Comment