அளுத்கம. தர்காநகர் மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தினால் தீவைக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட வீடுகளும் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைக்கும் பணிகள் நேற்று முன் தினம் முதல் ஆரம்பமானது.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க முழுமையான புனரமைப்பு பணிகளை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதுடன் இதற்கென இராணுவத்தின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற சுமார் 700 ற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் புனரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
முழுமையான மற்றும் பகுதியளவில் என இரண்டு வகைகளாக பாதிக்கப்பட்ட 94 வீடுகள். 137 வியாபார நிலையங்கள் அடையாளங் காணப்பட்டு புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தவர்களினதும் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுமே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவற்றில் முழுமையாக பாதிக்கப்பட்ட 27 வீடுகள் மற்றும் 47 வியாபார நிலையங்களும். பகுதியளவில் பாதிக்கப்பட்ட 67 வீடுகள் மற்றும் 90 வியாபார நிலையங்களும் அடங்குவதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.
இந்த புனரமைப்பு பணிகளுக்கு அரசாங்கம், திறைசேரி. மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த அவர். பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி துரிதமாக இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள இராணுவம் திட்டமிட்டுள்ளது என்றார்.
இதேவேளை மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல தலைமையில் நேற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தீ வைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்று பார்வை யிட்டதுடன் முதற் கட்டமாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதேவேளை, சேதமாக்கப்பட்ட வீடுகளை ஒரு மாதகாலத்திற்குள் மீள புனரமைத்து அவர்களை அவ்வீடுகளில் வசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார்.
இராணுவத்தினர் மீள் புனரமைப்பு பணிகளை முழுமையாகப் பொறுப்பேற்று ள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் தர்கா நகரில் தெரிவித்தார். தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது.
சேதமுற்ற வீடுகளை புனரமைக்க இராணுவத்தினர் மேற்கொள்ளும் முயற்சிக்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வீடுகளை மீள் புனரமைக்க 200 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
நாட்டில் 30 வருட காலமாக இருந்த பெரிய தீயை அணைத்தோம்.
இதன் பின்னர் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். இப்படியான நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவது கவலைக் குரியதாகும்.
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக உலக முஸ்லிம் நாடுகள் வாக்களித்தன. இந்தியாவும் எமக்கு அப்போது கைவிரித்துவிட்டது. அரபு நாடுகள் ஆதரவளித்தன.
பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையின் போது பாக்கிஸ்தானின் பங்களிப்பு மறக்க முடியாதது.
மேற்குலகம் இலங்கைக்கு எதிராக செயல்படும் ஒருகால கட்டத்தில் அளுத்கம சம்பவம் இடம்பெற்றமை கவலையளிக் கிறது. மேல் மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபயமெதவல மீள் புனரமைப்புப் பணிபற்றி இங்கு விளக்கமளித்தார்.
இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட வீடுகளை 24 மணி நேரமும் அங்கு தங்கி நின்று மீள் புனரமைப்பு வேலைகளை மேற்கொள்வர். வீட்டு உரிமையாளர் எம்மோடு ஒத்துழைக்க வேண்டும்.
கட்டிட உபகரணங்களை இந்த ஊரில் உள்ள கடைகளிலேயே நாம் கொள்வனவு செய்வோம். வன்செயலின் பின்னர் பொறுமை காத்த இப்பகுதி மக்களுக்கு அவர் நன்றி கூறினார்.
களுத்துறை மாவட்டச் செயலாளர் யு.டி.சந்தன ஜயலால் பேசும் போது மதங்களுக்கிடையிலான, இனங்களுக் கிடையிலான இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டி பல வேலைத் திட்டம் இப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.




0 comments :
Post a Comment