மேல்மாகாண களுத்துறை மாவட்ட வேட்பாளர் நப்ளி நசீருடனான நேர்காணல்.

ப்லி நஸீர் சிறு வயது முதல் இன்று வரை சமூக சேவையாற்றி பல்வேறு வழிகளில் ஈடுபாடு காட்டி தம் சமூக மேம்பாட்டுக்காக இவர் தன்னுடைய காலை ஊன்றிப் பதித்துள்ளார்.

இவர் பானந்தறை ஸ்ரீ சுமங்கல கல்லூரியில் முதலாம் தரம் முதல் க.பொ.த. உயர்தரம் இங்கு கற்றார். திறந்த பல்லைக்கழகழத்தில் வர்த்தக முகாமைத்துவ டிப்ளோமா கற்றை நெறியைப் பூர்த்தி செய்து விட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரத்தினவியல் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்தவர் . அப்பல்கலைக்கழகத்திலேயே இவர் இரத்தினவியல் மாணவ சங்கத்தின் உப செயலாளராகவும் கடமையாற்றினார்.

2004 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிட்டவர். இதில் இவர் தோல்வியுற்றாலும் விருப்பவாக்குகளின் அடிப்படையில் மூன்றாம் இடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 

 தம்முடைய பிரதேசத்தில் விளையாட்டுக் கழகம் ஒன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் அதனை இஸ்தாபித்து அதன் செயலாளராகவும் சேவையாற்றியவர். 2010,2011 ஆம் ஆண்டுகளில் வை. எம். எம். ஏயின் அட்டுலுகம கிளைத் தலைவராக இருந்துள்ளார். இலங்கை இரத்தினவியல் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் செயற்பட்ட இவர் யூ. என். ஓ.வின் கீழ் இயங்கும் சாவதேச தொண்டு நிறுவனத்தின் பொருளாதர அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளராக சேவையாற்றி வருகின்றார். 

 இவ்வாறு சமூக ,அரசியல் துறைகளில் நீண்ட கால அனுபவப் புலமையைப் பெற்றவர் .இவர் ஒரு தனியான இடத்தை அரசியல் உலகில இடம் பிடித்துள்ளார் என்பதற்குச் சான்றாக இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர் என்ற பதவி குறிப்பிடத்தக்களவு உறுதுணையாக இருக்கின்றது. 

இவர் தன்னுடைய உயர்ந்த நல்ல மனப்பாங்கின் காரணமாக இவர் பாடசாலைப் பருவத்தில் பௌத்த சங்கங்களில் மிக உயர்ந்த பதிவிகளை வகித்து சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இன ஐக்கியத்தின் ஒரு பாலமாக விளங்கும் இவர் பல்Nறு சமூக இயக்க நடவடிக்கையில் அதிக ஈடுபாடையவர். 

இம்முறை மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சியில் போட்டியிடுகின்றார். இவர் முஸ்லிம் முரசுப் பத்திரிகைக்காக வழங்கி செவ்வி

செவ்வி : - ஆத்திக் அலி

நீங்கள் அரசியல் துறையில் ஈடுபாடு காட்டுவதற்கான காரணம் என்ன?

நான் பாடசாலைப் பருவக் காலத்திலிருந்தே ஏதாவது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே எனக்கு ஏற்பட்டது. நான் பாடசாலை செல்லும் பவருத்தில் தேர்தல் காலங்கள் வரும் போது என்னைப் பார்த்து ஊர் பெரியபோர்கள் கேட்பார்கள் தேர்தலில் போட்டியிட விருப்பமா? நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் , எந்தக் கட்சி வெல்லும் ? எவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கு நான் பதில் சொன்னால் இல்லை இந்தக் கட்சிதான் வெல்லும் இன்னார்தான் வெல்வார்கள். நாங்கள் ஊர் மக்கள் இவரைத்தான் வெற்றிபெறச் செய்வோம் என இவ்வாறு பல கேள்விக் கணைகளுடன் அதற்கான பதிலுரைகளும் என்னுடைய காதில் எதிரொலித்தன. 

இந்த அரசியல் நலனிலிருந்து கல்வி, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்று ஒப்பீட்டளவு அதிகமான வேலைகளை தமது சமூகம் சார்ந்ததாக முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும்பான்மையினக் கட்சியலிருந்து நடப்பது என்பது ஒரு கேள்விக் குறியாகவே இருக்கிறது. இது காலம் கழிந்து போன கதை. இன்று பெரும்பான்மையின தேசியக் கட்சிலிருந்து தம் சமூகம் சார்பாக ஒரு பிரதிநித்துவத்தைக் கூட நிச்சயமாகப் பெற்றுக் கொள்ள முடியாது. மாறாக தம் சமூகத்திற்கு தேவையான போதியளவு சேவை செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாக மாத்திரமே செய்ய முடியும்.
 கடந்த தேர்தல் களநிலரங்கள் எடுத்துக் காட்டக் கூடியதாக உள்ளன.

இந்நிலையில்தான் எங்களூர் மக்கள் இது தொடர்பாக தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அவர்கள் எந்த விடத்தையும் எது நல்லது கெட்டது சிந்தித்து பார்த்து ஆராய்ந்து ஒன்று பட்டு ஒரு நல்ல தீர்மான முடிவை எடுப்பார்கள். அதன்படி உரிய இலக்கை அடைந்துள்ளனர். அந்த வகையில் அட்டுலுகம பிரதேசத்தில்தான் களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதிகமான முஸ்லிம் வாக்குகள் உள்ளனர் இதற்கேற்ப 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக என்னைக் களமிறங்கக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் அமான் ஆசிரியர் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஹசன் பாரி, நஸீம் ஹாஜியார் ஆகியோர் என்னை வேண்டிக் கொண்டனர். 

ஊரவர்கள் ஒன்று பட்டு பெரும் எண்ணிக்கையான வாக்கை எங்கள் கட்சிக்கு வழங்கினர் குறிப்பாக 95 விகிதமான ஊர் மக்களுடைய வாக்குகள் எங்களுடைய சட்சிக்காக அளிக்கப்பட்டன. இதில் நானும் வெற்றி பெறாவிட்டாலும் எமது கட்சி சார்பாக ஒரு பிரதிநிதி கிடைக்கப்பெற்றுள்ளது அனூடாக எமது சமூகத்துக்கு பாரியளவு நன்மைகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான நிலையில் 2009 ஆம் ஆண்டு மறு தேர்தல் ஒன்றுக்கு நான் முகம் கொடுக்க நேர்ந்தது. இவ்வேளையில் ஊரில் நல்ல காரியம் ஒன்று நடைபெற இருந்து. இதன் காரணமாக முழு ஊரவர்கள் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலில் களமிறங்க வேண்டாம் என எனக்கு அன்புக் கட்டளை விடுத்தார்கள். அதன்படி 2009 ஆம் ஆண்டளவில் நடைபெற இருந்த தேர்தல் நான் போட்டியிட முன்வரவில்லை. இம்முறை 2014 ஆம் ஆண்டுக்கான மாகாண சபைத் தேர்தலில் என்னைப் போட்டியிடுமாறு ஊர் மக்கள் ஒன்றாகச் சேந்து கேட்டுள்ளார்கள். அந்த வகையில் ஊர் மக்களின் பொதுவான் வேண்டுகோளின் பிரகாரம் இம்முறை இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

 தங்களுடைய பிரதேசத்திற்கு ஒரு அரசியல் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்வதற்காக அதிக முனைப்புக் காட்டுகின்றார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் அட்டுலுகம மக்கள் ஒன்று பட்டால் ஒரு அரசியல் பிரதிநிதியை தங்களூருக்கு கொண்டு வரமுடியும் என்று. எனவே அந்த வகையில் ஊர் மக்களுடைய நோக்கங்கள் நிறைவேற்றிக் கொள்வதுடன் களுத்துறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினுடைய சமூக , கல்வி, பொருளாதர நலனை நோக்காக் கொண்டு நான் இம்முறை தேர்தலில் களமிறங்குவதற்கான முக்கிய காரணமாகும்.

உங்களுடைய சமூக பங்களிப்புக்கள் பற்றி கூறுவீர்களா?

என்னுடைய சமூப் பங்களிப்பு அரசியல் ரீதியாக சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லா விட்டாலும் கூட நான் பணிபுரியும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் மூலமாக குறிப்பிடத்தக்களவு பணிகள் புரிந்துள்ளேன். சுனாமி அனர்த்தத்தின் போது வல்கம பிரதேசத்தில் வீடுகளை இழந்த 25 குடும்பங்களுக்கு லயன்ஸ் கழகத்துடன் இணைந்து புதிய வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு துணையாக இருந்துள்ளேன். அது மாத்திரமல்ல நான் எமது சமூகம் சார்பாக தனிப்பட்ட ரீதியில் பெருந்தெகையான சமூகப் பங்களிப்புக்களைச் செய்துள்ளேன். ஆனால் அது வெளிப்படையாக அல்ல. 

எனினும் என்னுடைய சமூக சேவை பரந்தளவு மட்டத்தில் முன்னெடுத்தச் செல்வதற்கு முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் பிரதிநித்தவம் அவசியமாக இருக்கிறது. 

 களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மூன்று அல்லது நான்கு முஸ்லிம் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் களுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தினுடைய கூடுதலான தேவைப்பாடுகளை நிறைவு செய்து கொள்ள முடியும். பாடசாலைகள் பள்ளிவாசல்கள். குர் மத்ரஸர் அஹதிய்யாப் பாடசாலை, முன்பள்ளிப் பாடசாலை என பல்வேறு அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும். இதற்கான அடித்தளம் எமமு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாக இடபட்டுள்ளது. 

ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கட்சி வழங்கியுள்ளது. பாராமன்ற உறுப்பினர் அஸ்லம் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்தும் பல்வேறு அரச வளப் பங்கீடுகள் இந்தப் பிரதேச மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நாம் இன்று எதிர்நோக்கும் எல்லா பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அரசியல் பிரதிநித்துவம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்ற ஒரு கட்டாயமான நிலை இருக்கிறது. மாகாண சபை மூலம் குறைந்தளவு மூன்று அரசியல் பிரதிநித்துவங்கள் கிடைக்குமாயின் அமைச்சர் என்ற பதவி அந்தஸ்தோ அல்லது எமது சலுகைகைள பெற்றுக் கொள்ள முடியுமோ என்ற உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விட முஸ்லிம்களுடைய இருப்புக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதமாக அமையும் என்பதே புலப்படக் கூடிய உண்மை.

இவ்வகையில் களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 85000 பேர் அளவில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குகளை பெரும்பான்மையின தேசியக் கட்சிகளுக்கு வழங்குவதன் மூலம் எந்தவிதமான பிரயோசமுனமில்லை. அது குப்பைத் தொட்டிலுக்குள் போடுவதற்கு சமனாகும். வெறுமனே இந்தக் கட்சிகளுடைய ஆசை வார்;தைகளுக்கும் அதிகாரப் பலத்திற்கும் அஞ்சி வாக்களிப்பதை விடுத்து இன்று காலத்தைப் பொறுத்தவரையில் மேல் மாகாண சபையில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பலம் பொருந்திய உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டியுள்து. இதற்கான தயார் படுத்தலையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் செய்து கொண்டிருக்கிறது.

இதற்காகவே அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ் மீது அச்சத்துடன் உள்ளது. தமிழ் கூட்டமைப்பு மற்றும் மலைய தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்று பட்டு தங்களுடைய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளவதற்காக பகீரத பிரத்தனங்களில் ஈடுபட்டு அதனைச் சாதித்துக் கொண்டிருக்கின்றதோ அவ்வாறே எமது பிரதிநிதித்துவங்களை வென்றெடுக்க கடுமையாக நாங்கள் உழைக்க வேண்டும். 

இந்தச் சந்தர்ப்பங்களை கைநலுவ விட்டுப் போட்டு பின்னர் கைசேதப்பட வேண்டியவர்களாக வேண்டி ஒரு துர்ப்பாக்கிய நிலையில் வந்துவிடுவோம் எனவே எங்களுடைய வாக்குப் பலம் மிகவும் சக்தி மிக்கது. இந்த வாக்குகளை பெரும்பான்மையின தேசிய கட்சிகளுக்கு வழங்கி வாக்குகளை சிதறடிக்காமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயமான பொறுப்பு ஒவ்வொரு களுத்ததுறை மாவட்ட முஸ்லிம்களுக்கும் உள்ளன. 

 இந்த மிக முக்கியமான விடயங்களை எமது முஸ்லிம் சமூகத்திற்கு சொல்லி விழிப்புணர்வூட்டி எமது கட்சிக்காக பெற்றுக் கொடுப்பது என்பதும் நான் சமூகத்திற்கு செய்யும் பெரும் பேருதவியாகும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்கின்றேன்.

நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான சமகால் பிரச்சினை தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்.

உண்மையிலேயே சிங்கள மக்கள் நல்லவர்கள். ஒரு சில தீய சக்திகள் முஸ்லிமம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் சதி நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் தவறாக இடைபோடக் கூடாது. நான் கல்வி கற்றது சிங்கள மொழிப் பாடசாலையில் ஆகும். 

அவர்களுடைய பௌத்த சங்கங்களில் கூட ஒரு முக்கிய உயர் பதவிகளை வகித்துள்ளேன். அதேபோல கூடுதலாக நான் சிங்கள மக்களுடனேயே நட்புறவைக் கொண்டுள்ளேன். அவர்களிடம் எந்தவிதமான இனப்பாடுகளோ மனக்குரோதங்களோ இல்லை. அவர்கள் பழகுதற்கு மிக இனிமையானவர்கள். மிக நல்லவர்கள். 

ஒரு சில தீய சக்திகள் மேற்கொள்ளும் சதித்திட்டங்களுக்கு ஒரு சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான நடடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக எங்களுடைய கட்சி எந்தவிதமான அலட்டலுமின்றி மிக நிதானத்துடன் சிந்தித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது . இதில் முக்கியமாக நான் கூறிக் கொள்வது என்னவென்றால் உரிய நேரத்தில் தேவையான நடடிக்கையை எங்களது கட்சி திட்டமிட்டுச் செய்துள்ளது. இதனைத் தாங்கி கொள்ள முடியாமல்தான் சில பேரினவாதக் கட்சிக்காரர்கள் கத்திக் கொண்டு இருக்கின்றனர். 

இதனை எங்கள் கட்சி அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு செயற்படுகிறது. இதனை வேறு எந்த கட்சி சார்பானவர்களாலும் செய்ய முடியாது.

நீங்கள் வெற்றிபெற்றால் நீங்கள் எதிர்காலத்தில் செய்யக் கூடிய பங்களிப்பு என்ன?

களுத்துறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கல்வி ரீதியாக எமது சமூகத்தை மேலும் மேலும் முன்னேற்ற வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. வியாபாரத்துறையில் எமது பிரதேச மக்கள் ஒரு முன்னேற்றகரமான எழுச்சியைப் பெற்றிருந்த போதிலும் அதிலிருந்து படிப்படியாக வீழ்ச்சிகளைக் கண்டு வருகின்றனர் இந்த சமூகத்தை கல்வியால் உயர்வடையச் செய்தவன் மூலம்தான் தங்களுடைய அறிவுபூர்வமாகச் சிந்தித்து அவர்கள் தம்மமை வளர்த்துக் கொள்ள முற்படுவர்.

இத்தகையதொரு செயற்திட்டத்தை களுத்துறை மாவட்டத்தில் முன்னெடுத்தச் செல்வதற்க வீட்டுச் சூழலை தயார் படுத்த வேண்டி இருக்கிறது. இதில் சிறுவர் முதல் பெரியோர் வரை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படல் வேண்டும்.

எனவே இன்றைய இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது அறிவு சார் செல்நெறியில் மிகவும் பின்தங்கிய போக்கினையே கொண்டிருக்கின்றனர். இதற்காக எமது மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அனைத்தப் பாடசாலைகளும் முறையான வளங்களுடன் இயங்குவதற்கான மூலோபாயங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி செய்வேன். 

அத்துடன் எமது மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகள், பெரியோர்கள் ஆகிய அனைவரும் பயன்பெறக் கூடிய சுயதொழில் கற்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பொருளாதார ரீதியாக மேன்மையடையச் செய்தல் முன்பள்ளிப்பாடசாலைகள் திறன்பட நடத்திச் செல்வதற்கு வழிவகுத்தலுடன் ஒழுக்க விழுமியங்களை சிறு பராயத்திலிருந்தே கற்றுக் கொடுப்பதற்கான போதனைகளை ஆசிரியர்மார்களுக்கு வழங்குதல், விளையாட்டுத் துறையை ஊக்குவித்தல், சுகாதார நிலையை மேம்படுத்தல், விவசாயத்துறையை ஊக்குவித்தல், மீன்பிடித்துறை மேலும் விருத்தி செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெக்கவுள்ளேன்.

எனவே களுத்துறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தில் 11 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் என்னை எமது சமூகத்தின் தேவை நலன் கருதி அமோக வாக்குகளால் வெற்றிபெறச் செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :