இப்போது மிக மோசமான முறையில் எமது மதத்தை காக்க வேண்டிய தேவை - பிரசன்னா



த.நவோஜ்-

முன்பு நாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடினோம். ஆனால் தற்போது அதனை விட மோசமான ஒரு நிலையில் எமது மதத்தினை பாதுகாப்பதற்காகவும், எமது மக்களின் தொழில் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தொழில்களை பெற்றுக் கொள்வதற்காகவும் போராடவேண்டிய ஒரு சூழலில் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு, திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் மன்றத் தலைவர் ந.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றபோது சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநரசபை ஆணையாளர் மா.உதயகுமார், மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி.எழில்வாணி பத்மகுமார், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சறோஜினி வாலசுந்தரம், பாலமீன்மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சி.என்.தர்மசேன, மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்க உறுப்பினர்களான ச.சிவபாதசுந்தரம், த.கிரிதராஜா, பாலமீன்மடு, திராய்மடு கிராம அதிகாரிகள், ஆலய தலைவர்கள், பாடசாலை அதிபர்;கள், விளையாட்டு கழக தலைவர்கள், கிராம பொதுமக்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பிரசன்னா இந்திரகுமார் மேலும் தெரிவிக்கையில்!

'மதம் என்பது மனிதன் ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை. அறநெறிகள் ஊடாக மனித விழுமியங்களை வளர்த்தெடுக்க வேண்டும். இன்று நாம் எமது மதத்தின் இனத்தின் சார்பாக எங்களுடைய ஒவ்வொரு நிகழ்வுகளையும் முன்நோக்கிச் செல்லக் கூடிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

ஏனெனில் இங்கு எங்கு பார்த்தாலும் எமது கலாச்சாரங்களை கட்டுப்படுத்துவதற்குரிய பின்புலங்கள் இல்லாமல் எமது இளைஞர் யுவதிகள் கலாச்சார சீர்கேடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

முன்பு ஒரு காலத்தில் எமது கலாச்சாரம் எவ்வாறு இருந்தது. எமது பெற்றோருக்கு நாம் பயப்படுவோம். எமது உறவுகளுக்கு பயப்படுவோம். நாம் தவறு செய்யும் போது எமக்கு பயம் ஏற்படும். ஆனால் இன்று அப்படியல்ல. மேல்நாட்டு ஆதிக்கத்தில் நாம் எங்களுடைய கலாச்சாரங்களை சீரழியச் செய்கின்றோம்.

இந்த மேடையில் பல தெய்வங்கள் இருக்கின்றனர். எமது இந்து மதத்தில் பெற்றோர்கள் தான் கண்கண்ட தெய்வம் என்று குறிப்பிடப்படுகின்றது. எமது மாவட்டத்தில் மட்டுமல்ல சகல இடங்களிலும் எமது இந்து மதம் சீரழிக்கப்பட்டு துண்டாடப்படுகின்றது.

எமது மதத்தில் பற்பல வழிபாட்டுக் கிளைகள் உருவாக்கப்படுகின்றன. பல கலாச்சார சீர்கேடுகளுக்கு இவ்வாறான கிளைகளே காரணமாகவும் இருக்கின்றன. எமது மதமும் தமிழும் ஒன்றாக பிண்ணிப்பிணைந்த ஒன்று இதனை நாம் மறுக்க முடியாது.

முன்பு நாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடினோம். ஆனால் தற்போது அதனை விட மோசமான ஒரு நிலையில் எமது தமிழ் மக்களில் விடுதலைக்காகவும், எமது மதத்தினை பாதுகாப்பதற்காகவும், எமது மக்களின் தொழில் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தொழில்களை பெற்றுக் கொள்வதற்காகவும் போராடவேண்டிய ஒரு சூழலில் இருக்கின்றோம்.

அண்மையில் மாகாண சபையில் எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முகாமைத்துவ உதவியாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனங்களின் போது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இதற்காக குரல் கொடுத்தவர்கள் நாம் முதன் முதலில் இதனை எதிர்த்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

இதற்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஆளும் தரப்பில் உள்ள அரச அடிவருடிகளாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஒருவர் கூட இதனை எதிர்த்தோ, மறுத்தோ குரல் கொடுக்கவில்லை. ஆனால் அவர்களின் பேச்சுக்கள் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருக்குலையச் செய்வதுமாகவே இருக்கின்றது.

அவர்கள் எம்மைக் குறை கூறுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றார்களே தவிர இது போன்று எமது தமிழ் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என எண்ணுவது குறைவு. அவர்களால் இந்த அராங்கத்தினை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.

ஆனால் நாங்கள் அப்படியல்ல எமது மக்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போதெல்லாம் முன்நின்று குரல் கொடுப்பவர்கள். எமக்கு எமது இனம் மதம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும். எமது ஆலங்கள் ஊடாக எமது விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனுடாக எமது சிறார்களின் கல்வி நிலைகளை சமயங்கள் ஆலயங்கள் ஊடாக வளர்க்க வேண்டும். எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 கல்வி வலயங்கள் இருக்கின்றன அதில் ஒன்று எமது இஸ்லாமிய சகோதரர்களின் கல்வி வலயம் அந்த வலயத்தில் பெறப்பட்ட பெறுபேறுகளை பார்க்கும் போது எமது நான்கு வலயங்களையும் சேர்க்கும் போது பெறப்பட்ட பெறுபேறுகளுக்கு ஒத்ததாகவே இருக்கின்றன. இதனை நாம் நன்கு உணர வேண்டும்.

எமது கல்வி நிலை எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்று கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக எமது சமுகத்தில் கல்வி நிலை பின்தள்ளப்பட்டது. அதனை நாம் மீண்டும் முன் கொண்டுவர வேண்டும். அதற்கு எமது ஆலயங்கள் இந்து அமைப்புகள் முன்வரவேண்டும். எனவே இவ்வாறான மத செயற்பாடுகள் மூலமே எமது இனத்தின் விழுமியங்களும் கட்டிக்காக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்'.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :