( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாகப் பணியாற்றி வந்த 56 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (06)நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சி.பைசால் காசீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினரும்,ஹசன் அலி எம்.பியின் செயலாளருமான எம்.ரி.ஜப்பார் அலி, உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார் அலி, உதவி மாவட்டப் பதிவாளர் இஸட்.நசூறுத்தீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்த 56 பட்டதாரிப்பயிலுனர்களும் 2013.06.07ந் திகதி முதல் செயற்படும் படியாக நிரந்தர நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொருளாதார அமைச்சு, பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, விவசாய அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு, உற்பத்தித் திறன் மேம்பாட்டு அமைச்சு, பதிவாளர் நாயகத் திணைக்களம் போன்றவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி கருத்துத் தெரிவிக்கையில் ' இன்று நியமனம் பெற்றிருக்கும் உங்களிடம் இச்சமூகத்திற்குச் சேவை செய்யக் கூடிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இலஞ்சம்,ஊழல் இல்லாத நேர்மையான சேவையை நீங்கள் வழங்க வேண்டும். மறுமையில் இது பற்றி விசாரிக்கப்படுவீர்கள்' எனத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் உரை நிகழ்துகையில் 'பட்டதாரிகள் தொழில் இல்லாமல் கஷ்டப்படும் இவ்வேளையில் இந்த நியமனங்களை வழங்குவதற்கு வழிகாட்டிய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.





0 comments :
Post a Comment