பிரதம செய்தி ஆசிரியர் நடராசா காலமானார்

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் செல்லையா நடராசா சனிக்கிழமை இரவு காலமானார். இவர் சுடர்ஒளி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

1960ம் ஆண்டளவில் வீரகேசரி பத்திரிகையில் சேர்ந்து கொண்ட திரு.நடராசா அப்பத்திரிகையில் உதவி ஆசிரியராக தொழிலை ஆரம்பித்து படிப்படியாக செய்தி ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

ஆங்கில மொழி அறிவு பெற்றிருந்த திரு.நடராசா, ஒரு செய்தியைப் பார்த்த வுடனேயே அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு அதற்கு உரிய இடத்தை பத்திரிகையில் கொடுப்பார்.

திரு. நடராசா வீரகேசரியில் புதிதாக பத்திரிகைத் துறைக்கு சேர்ந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு நல்லாசானாக இருந்தார். புதியவர்கள் விடும் பிழைகளை சுட்டிக்காட்டி அவற்றை இவ்விதம் தான் எழுத வேண்டுமென்றும் அவர் கற்றுக் கொடுப்பார்.

தினகரன் பத்திரிகையில் பணிபுரியும் நான் 1962ம் ஆண்டில் வீரகேசரியில் ஒரு நிருபராக சேர்ந்து கொண்ட போது எனது வளர்ச்சிக்கு காலஞ்சென்ற திரு.டேவிட் ராஜூவும், திரு.நடராசாவும் எனக்கு பேருதவியாக இருந்தார்கள்.

வசந்தம் தொலைக்காட்சியில் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாளாந்தம் சுமார் 5 நிமிட அரசியல் விமர்சனம் ஒன்றை செய்வதற்கு நியமிக்கப்பட்ட போது அந்த நிகழ்ச்சிக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நான் திரு.நடராசாவிடம் ஆலோசனை கேட்ட போது அவர் திறனாய்வு என்ற பெயர் பொருத்தமாக இருக்குமென்று கூறினார்.

79 வயதான திரு. நடராசா ஆணைப்பந்தி, கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த பல்லாண்டுகளாக அவர் ரத்தொழுவ தேசிய வீடமைப்பு திட்டத்தில் வாழ்ந்து வந்தார். அன்னார் காலஞ்சென்ற செல்லையா லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாக்கியம் சிவசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின் அன்பு கணவரும், ராஜ்மோகன், வதனா, மீனா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். திலகவதி, கமலநாதன், சிவதீர்த்தனின் அன்பு மாமனாரும், லதாஞ்சலி, பரணி, பிருந்தாஞ்ஞனி, துஷ்யந்தினி, பிரஷோதயா ஆகியோரின் பாசமிகு பாட்டனாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 8கி 11ஞி, ரத்தொழுவ தேசிய வீடமைப்பு திட்டத்திலுள்ள இல்லத்தில் இருந்து எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு லியனகேமுல்லயிலுள்ள மயானத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :