நியாஸ் மெளலவியும் நவீன நினைவுகளும்! இர்பான் இக்பால்


ஊடகவியலாளர் இர்பான் இக்பால்
ன்ன காரணம் என்று தெரியவில்லை ஆனால் திடீரென நியாஸ் மெளலவி ஞாபகத்தில் வந்து நிற்கிறார்.

நோன்பு வந்தால் நடு வீதியில் உதைப்பந்தாட்டம் விளையாடியே தீருவோம் என்று கங்கணம் கட்டி நின்று அதைத் தட்டிக் கேட்க வந்தவர் தலையை வெட்டியெறியும் அளவுக்கு உச்ச கட்ட சக்திமிக்க சமுதாயமாக கொழும்பில் எம் சமூகம் தலையோங்கியிருந்த காலம் நோக்கி என் நினைவுகள் நகர்கின்றன.

எங்கு பார்த்தாலும் பிரேமதாஸ எதில் பார்த்தாலும் பிரேமதாஸ எப்படிப்பார்த்தாலும் பிரேமதாஸ என்று தேசியத் தொலைக்காட்சி ரூபவாஹினி முதல் சாலைகள், சுவர்கள் ,கடைகள்,பெட்டிக்கடைகள், கொத்துரொட்டிப் பெட்டகங்கள், மரங்கள் எல்லாம் அன்றைய காலத்தில் அதிலும் குறிப்பாக மத்திய கொழும்பில் பச்சை நிறந்தான். முஸ்லிம்களுக்கும் பச்சை நிறம் என்றால் ரொம்பப் பிடிக்கும், அன்றைய பச்சைக் கட்சியின் நிகரில்லாத் தலைவன் பிரேமதாஸவிற்கு முஸ்லிம்களை நிறையவே பிடிக்கும்.

நாளெல்லாம் ஓடி வேர்த்து விறுவிறுத்து மார்ட்டின் சேட் நனைய நனையக் கஷ்டப்படும் அன்றாட முஸ்லிம் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கூலி வேலை செய்தாலும் தன் மானம் விட்டுக்கொடுக்காதவனாய், உயிரே போனாலும் தன் மார்க்கத்தை விட்டுக் கொடுக்காதவனாய், கிடைக்கும் வருவாயில் வாழக் கிடைத்த வாழ்க்கையை வாழ்வதும், கொச்சைத் தமிழும் சிங்களமும் கலந்து நாலடி வீட்டிற்குள் இருந்தாலும் நாற்பது பேருக்குச் சாப்பாடு போடும் பரந்த மனமுள்ள முஸ்லிமனாவன், அந்தச் சாதாரண முஸ்லிமானவன் என் கண்முன்னே எப்போதும் நின்று கொண்டிருக்கிறான்.

பஜ்ருக்கு பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) நாலா பக்கமும் கேட்கும், அன்றைய நாளை ஆரம்பிக்க, நம்பிக்கையுடன் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, வெள்ளையாடையுடன், தொப்பியும் கையில் தஸ்பியுமாய் பள்ளிக்கு வரும் தாடி வைத்த சராசரி வாப்பா (தந்தை) வையும் அவர் கைபிடித்து வரும் மகனையும் கண்டு களித்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

நாள் ஆரம்பித்ததும், வேர்வை சட்டைக் காலரை அழுக்காக்கி விடாமல் கழுத்தைச் சுற்றிக் கைலேஞ்சு (கைக்குட்டை) சுற்றி, போகும் வழியில் "கொல கெந்த" (இலைக் கஞ்சி) குடித்து, இருக்கும் அஞ்சையும் பத்தையும் முடித்துப் பின் ஆரம்பித்து அன்றைய நாளில் மஃரிபுக்கு முன் (சூரியன் அஸ்தமிக்கும் நேரம்) வீடு சேர்ந்து, பிள்ளைகளையும் பார்த்து, தொழுகைக்கு விரைந்து பின் வீடு வந்து, டிவி பார்த்து நாட்டுச் செய்தியறிந்து அதை நாலு பேரோடு அளவளாவி, இஷா (இரவு நேரத் தொழுகை) தொழுது, உறங்கியெழும் அந்தச் சாதாரண முஸ்லிமின் வாழ்க்கையின் இன்பத்தை வெளியிலிருந்து ரசிக்க முடியும், துன்பங்களையும் துயரங்களையும் சிரிப்பாலும் கோபத்தாலும் அவன் கையாளும் ராஜ தந்திரத்தை மெச்சவும் முடியும்.

அதிலும் வியாழக்கிழமை வந்து விட்டால், எல்லாம் விரைவாகி விடும். அன்றாட வேலைகளையெல்லாம் அவசரமாக்கிக் கொண்டு அவன் மஃரிபானதும் கிளம்பி விடுவான், படித்தவர் படிக்காதவர், ஏழை,பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்று எல்லோரும் ஆயத்தமாகி விடுவார்கள். வண்ண வண்ண ஆடைகள், எல்லோரிடமும் ஏதோவொரு வெளிச்சம், ஆன்மீகக் கடமையை நிறைவேற்றும் ஒரு திருப்தி என்று ஒவ்வொரு மனிதரின் பக்குவத்துக்கேற்ப அவரவர் விளக்கங்களைக் கேட்டிருக்கிறேன், அது அவர்களுக்கு நிறைவைத் தந்த விடயங்கள் எனவே அவற்றை நானும் ரசித்திருக்கிறேன்.

அதிலும் குறிப்பாக ஒரு சில வியாழக்கிழமைகளில் ஏகப்பட்ட பதட்டம் இருக்கும். என்ன ? நியாஸ் மெளலவி, அதற்கேன் அவ்வளவு பதட்டம்? இடம் கிடைக்காது, நியாஸ் மெளலவி பயான் (பிரசங்கம்) கேட்க வேண்டுமென்றால் நேரங்காலத்தோடு போக வேண்டும் இல்லாவிட்டால் இடமே இருக்காது எனும் பல பேரின் அவாவைக் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவன், கேட்டு வளர்ந்தவன் எனும் ரீதியில் அந்த மனிதன் மேல் எனக்கும் ஒரு ஆர்வமிருந்தது.

எட்டிப் போய் தட்டினால் அவர் வீடு இருக்கும், ஆனாலும் அவரை அப்படியெல்லாம் பார்ப்பதில் பலருக்குத் திருப்தியில்லை, அவர் எங்கே பயான் செய்வாரோ அங்கே செல்வதில் பல்லாயிரம் மக்களுக்குத் திருப்தி. அவர் பயான் பள்ளியில் எல்லாம் செய்ய முடியாது, இடம் போதாது என்று ஒரு ஏரியாவையே முடக்கி, தெருவில் மேடை போட்டு அவர் பயான் செய்வார், அவர் சொல்வதையெல்லாம் ரசித்து ரசித்துக் கேட்ட மனிதர்களின் சந்தோஷத்தை நான் பார்த்திருக்கிறேன், மற்ற ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்) பேசத் தயங்கிய விடயங்களை அவர் பேசியது காரணமா? இல்லை அவர் "பச்சையாக" (வெளிப்படையாக) பாவித்த வார்த்தைகளும் விளக்கங்களும் காரணமா என்றெல்லாம் தெரியாது ஆனால் பயான் முடிந்ததும் கூடியிருந்தவர்கள் பெரும்பாலும் மார்க்கத்தையும் விளங்கி, நேரத்தையும் பிரயோசனப்படுத்திய ஒரு திருப்தியில் இருப்பார்கள். இதையெல்லாம் நான் கண்டு ரசித்திருக்கிறேன், சில வேளைகளில் வியந்தும் இருக்கிறேன்.

காலம் கடந்தது, ஐரோப்பிய நாடொன்றில் ஒரு நாள் என் நண்பர்களில் சிலர் நியாஸ் மெளலவி வந்திருக்கிறாராம் எனும் செய்தியைச் சொன்ன போது, அந்த நினைவுகள் என்னை மீண்டும் வந்து சூழத்தொடங்கின.

ஒரு தமிழ் மொழி ஊடகத்தின் செயற்பாட்டுத் திட்ட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையது. ஹஜ்ஜுப் பெருநாளுமானதால் ஊடக உரிமையாளர் இஸ்லாமியப் பேச்சாளர்கள் யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று கேட்க, பளிச்சென்று முன் வந்து நின்றார் நியாஸ் மெளலவி. எங்கே தங்கியிருக்கிறார் என்பது ஏற்கனவே எனக்குத் தெரிந்ததால், உடனடியாக அங்கே தொடர்பு கொண்டு, நியாஸ் மெளலவிக்கு விடயத்தைச் சொல்லி அடுத்த அரை மணி நேரத்தில் அவரிருக்கும் இடத்திற்கு வாகனத்தை அனுப்பி, இதோ 1 மணி நேரத்திற்குள் நாங்கள் எல்லோரும் கலையகத்தை (ஸ்டுடியோ) நோக்கிப் பயணிக்கிறோம்.

கூப்பிடு தொலைவில் வாழ்ந்தவர்கள் நாங்கள், ஆனாலும் அவரோடு அதற்கு முன் நான் நெருங்கிப் பழகியதில்லை, இப்போதும் எமது அறிமுகத்தை விட பங்கேற்கப் போகும் நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்து விளக்கிக்கொண்டிருக்க கலையகமும் வந்து விட்டது.

உள்ளே சென்றால், அப்போது இவர் இருந்த தோற்றத்துக்குத் தனி மரியாதை இருந்தது என்று தான் சொல்ல வேண்டும், அங்கிருந்த பணியாளர்கள் (வேற்று மதத்தவர்கள்) கூட மரியாதை நிமித்தம் எழுந்து நின்றார்கள், எனக்கும் உள் மனதில் சந்தோஷமாக இருந்தது, ஒளிபரப்புக் கலையகத்துக்குள் நான் காலடி எடுத்து வைக்கும் போது என் திட்டங்கள் எல்லாம் மாறின, திடீரென நியாஸ் மெளலவியிடம்: ஹஸரத், நீங்களே தனியாகத் திரையில் வாருங்கள், இது உங்கள் களம் என திடீரென நான் சொல்ல, நீங்கள் சொன்னா சரி என்று கூறிக்கொண்டு அவரும் போய் அமர்ந்து கொண்டார்.

இப்போது என் திட்டங்கள் மாறியதால் கலையகப் கட்டுப்பாட்டுப் பணியாளர்களிடம், என்னிடம் விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் அனைவரும் வெளியேறி விட்டார்கள்.

 கண்ணாடியறைக்குள் நான் மட்டும் தான் என்பதை நியாஸ் மெளலவிக்குத் தெரிவித்து இது உங்கள் களம் , சைகையைத் தொடர்ந்து ஆரம்பியுங்கள் என்று தெரிவித்து விட்டு அவருக்கான திரை நேரத்தை ஆரம்பித்தது தான், அதற்குப் பின் அன்றைய அவரது தொலைக்காட்சி "பயானின்" விளம்பர இடைவேளையைக் கூட நான் அனுமதிக்க வில்லை, ஏனெனில் அந்தளவு அவர் பேசிய விடயங்களோடு உருக்கமாகப் பிணைந்திருந்தார், அதைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை, அதனால் உடனடியாக நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு என் முடிவையும் தெரிவிக்க, அவர்களும் ஆட்சேபிக்கவில்லை.

நிகழ்ச்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம், முதலில் என் வீடு, நான் இறங்கிக்கொள்ள எத்தனிக்கும் போது, "இவ்வளவு நெருக்கமான குடும்பம் தெரியாமல் இருந்திருக்கிறதே, இதற்கு மேலும் வீட்டுக்கு வந்து ஒரு கப் கோப்பி குடிக்காமல் போனால் நல்லாருக்குமா" என்று அவர் கேட்ட போது என் தயக்கம் தீர்ந்ததைச் சொல்லலாமோ இல்லையோ, சில காலங்களின் பின்னர், நான் பார்த்துப் பழகிய ஒரு மனிதர் என்பதை விட என்னைச் சுற்றியிருந்த சமூகம் மெச்சித் தழுவிய ஒரு ஆலிமை மிகக் கேவலமாக சித்தரித்த சில துணுக்குகள் மற்றும் முகநூல் (Facebook) கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளைப் பார்த்த போது, அவரைப்பற்றித் தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன ஞாபகத்தில் வந்ததோ இல்லையோ, அன்றைய பிரேமதாசாவின் பச்சைக் கொடி பறக்கப் பறக்க, பச்சை நிற ஆட்டோக்கள் எங்கும் "நியாஸ் மெளலவிக்கே உங்கள் ஓட்டு" , நியாஸ் மெளலவியை வெற்றி பெறச் செய்வோம் என்றெல்லாம் தெருவெல்லாம் உணர்ச்சி பொங்க கூவித்திரிந்த அதே சமுதாயம் என் ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.

மக்களின் மனிதராக பள்ளிவாசல் வரையறைக்குள் இருந்த ஒரு மனிதனைத் தெருவில் மேடை போடவும் வைத்து, பிரேமதாஸவே நேரடியாகக் கேட்டு அரசியலில் அரங்கிலும் இறக்கி வைத்து, ஏறத்தாழ ஒரு சமூகத்தின் சின்னமாகவே சித்தரிக்கப்பட்ட ஒரு ஆலிம் நாளடைவில் மிகச்சாதாரணமான இன்னோர் குடிமகனால் அவதூறு செய்யப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு சித்தரிக்கப்படும் நிலை வரைக்கும் வர வைத்தது எது என்று என் மனம் கேள்வி கேட்க ஆரம்பித்தது.

இந்த நினைவுகளோடு இன்றைய மஹிந்த அரசாங்கம் என் மனதுக்குள் புகுந்து கொண்ட சூட்சுமம் எனக்குப் புரியவில்லை, ஆனால் இன்றைய நிலையில் இன்னுமொரு ஆலிம் என் முன்னால் வந்து நிற்கிறார்.

புலிக் கொட்டம் தலையோங்கியிருந்த காலத்தில், புலியின் கோட்டைக்குள் இருந்து கொண்டே அவர்களின் "அலை வரிசையிலேயே" இவரது "குரலில்" இஸ்லாமிய நிகழ்ச்சிகளை வாராவாரம் நான் செய்து கொண்டிருந்த காலம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

பர்தா அணிவது பெண்களுக்கு ஒழுக்கமானது என்று இவர் அன்றைய தினம் வழங்கியிருந்த "பயான்", தீவிர புலி ஆதரவாளர்களைக் கோபப்படுத்தி அப்படியானால் பர்தா அணியாதவர்கள் எல்லாம் ஒழுக்கமற்றவர்களா என்று நான்கு நாட்களுக்கு மேல் என்னோடு வாதித்த நினைவுகளும், அப்போதும் இஸ்லாமிய நிகழ்ச்சியை இடைவிடாது நாங்கள் நடத்திய அந்த நாட்களும் என் நினைவுக்குள் வருகிறது.

காலத்தின் கட்டாயத்தினால் நியாஸ் மெளலவி போன்றே கூப்பிடு தொலைவில் இவரோடும் வாழும் சூழ்நிலை எனக்கு உருவானது தற்செயலா இல்லையா என்பது தெரியவில்லை, ஆனால் அதுவும் அப்படியே நடந்தது. எனினும், அவரும் அங்கே தங்கியிருப்பதில்லை, நானும் அங்கே தங்குவதில்லை என்பதால் எப்போதாவது சந்தித்தால் தான் உண்டு.

அப்படிச் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில் ஏறத்தாழ நான் பார்த்து வளர்ந்த நியாஸ் மெளலவியின் சூழ்நிலை இவரையும் பின் தொடர்வது கண்டாலும் இது தற்செயலாக இருக்கும் என்று தவிர்த்து விட்டேன் என்பதுதான் உண்மை, இது பத்து வருடங்களுக்கு முற்பட்ட அனுபவம்.

சந்தர்ப்பம் கிடைத்த போது அவரோடு நான் அளவளாவிக்கொண்ட விடயங்கள், நமது சமூகம் அன்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருந்த அவர் சார்ந்த விடயம் ஒன்றின் மீதான திருப்தியின்மை என்று பல விடயங்களை அவர் கவனத்திற்கு அப்போதே எடுத்துச் சொல்லியிலிருந்தாலும், பின் நாளின் இவர் வளர்ச்சியினை ஒதுங்கியிருந்து பார்ப்பதைத் தவிர வேறு தெரிவு இல்லாத சூழ்நிலை, அதுவும் நான் பார்த்த அதே நியாஸ் மெளலவியின் சூழ்நிலை இவரையும் தொடர்ந்து செல்வதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஆயிரம் கேள்விகள் ஆனால் அவற்றை அவரை நோக்கி வீசினாலும் அவற்றைக் கேட்கவோ அல்லது சரியான முறையில் விளக்கம் தரவோ கூடிய வகையில் அவரது நேரம் அவருக்கே சொந்தமில்லாமல் வளர்ந்து விட்டது என்பதை அறிந்ததனால் மெளனமாக இருப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனாலும் அவரைக் காலம் இழுத்துச் செல்லும் திசையைக் கொண்டிருந்த அவதானத்தால் அவ்வப்போது அவரைத் தொடர்பு கொண்டு முயற்சிகளும் செய்திருந்தேன்.

தம்புள்ளை விவகாரம் சூடு பிடித்த போது, இதற்கு மேலும் பொறுமையாக இருப்பதில் பலனில்லை என்று என் மனச்சாட்சியும் உறுத்தியது. நியாஸ் மெளலவியின் இடைப்பட்ட காலத்தினைத் தொடரக்கூடிய வாழ்க்கை சூழ்நிலை எனக்கும் இருக்கவில்லை ஆயினும் இப்போது நான் காணும் விடயங்களை என் அனுபவத்தைக் கொண்டு பார்க்கையில் மீண்டும் ஒரு நியாஸ் மெளலவியின் சூழ்நிலை உருவாகி வருகிறதா எனும் ஐயம் உருவாகியிருக்கிறது.

அவரின் அடுத்த கட்டம் அரசியலா? எனும் கேள்வி என் மனதுக்குள் சில நாட்களாக எழ ஆரம்பித்து விட்டது. விரும்பியோ விரும்பாமலோ அரசியல் குண நலன்களும் ஆளுமையும் அவரை சூழ்ந்து வருவதாக எனக்குள் ஒரு உணர்வு பேசி வருகிறது. சிலவேளை அது கட்டாயத் திணிப்பாகக் கூட இருக்கலாம்.

தம்புள்ளை விவகாரம், சவுதியில் பேச்சு என்று ஆரம்பித்து ஹலால் வரை நகர்ந்து சென்ற அசைவுகளையும், இன்று என் சமூகம் பிரிந்து நின்று பெருநாள் கொண்டாடிய வலியையும்,அவ்வப்போது அவருடனான என் உரையாடல்கள், அவற்றைக் கொண்டு எழுந்த அனுமானங்கள் போன்றவற்றை ஒரு வேளை முன்னெச்சரிக்கையுடன் பார்க்கும் போது என் பார்வையில் அப்படித் தோன்றுகிறதா என்று புரியவில்லை, ஆனால் இன்னொரு நியாஸ் மெளலவியின் இறுதி "வடிவம்" வேண்டாமே என்று எண்ணத் தோன்றுகிறது.

இயங்குகின்ற வடிவம் வேண்டுமானால் மாறிக்கொண்டு வரலாம் ஆனால் அன்றைய நியாஸ் மெளலவியின் சமூகமே இன்றும் இருக்கிறது, பிரேமதாஸ இல்லை ஆனால் அதை விட சக்தி மிக்க ராஜபக்ச குடும்பம் இருக்கிறது, பெரும்பாலான அசைவுகள் "ஏற்கனவே" நிர்ணயிக்கப்பட்டுப் பின் விளக்கம் கொடுக்கப்படுகிறது. எனவே, என் ஆழ் மனது அடிக்கடி இதை ஞாபகப்படுத்துகிறது.

நவீன நினைவுகள் நம் எதிர்கால சந்ததிகளுக்கு நல்லதாகவும், நியாயமானதாகவும் போய்ச் சேர இறைவன் அருள் புரிவானாக !
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :