சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் பல இடங்களைப் பார்வையிட்டார்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். நீண்ட காலம் சிறையில் இருந்து விடுதலை பெற்ற அவர் யாழ்ப்பாணத்திற்கு முதற்தடவையாக விஜயம் செய்திருப்பது முக்கியமான விடயம்.

எனினும் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடு, தமிழ் இளைஞர்கள் மீது அவர் நடத்திய கொடூரம் இவை எதனையும் தமிழ் மக்கள் மறந்து விடமாட்டார்கள் என்பதை சரத் பொன்சேகா மறந்து விடக்கூடாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­வை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிட்ட போது, தமிழ் மக்கள் பொன்சேகாவை ஆதரித்தனர்.

இவ்வாறான ஆதரிப்பு தங்களுக்கு நடந்த கொடூரத்தை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கானதே அன்றி சரத் பொன்சேகா தமிழ் மக்களின் மீட்பர் என்பதற்காக அல்ல என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்ததுவது பொருத்தமுடையது ஆகும்.

இந்த நாடு பெளத்த சிங்கள மக்களுக்கு உரியது. வேண்டுமாயின் தமிழ் மக்கள் இங்கு வாழலாம் என்று கூறியவர் சரத் பொன்சேகா.

இலங்கை பெளத்த சிங்கள நாடு என்று இராணுவத்தளபதியாக இருந்த ஒருவர் கூறியிருப்பாராயின் அவர் இராணுவத்தளபதியாக இருந்த போது எத்துணை இனவாதத்துடன் செயற்பட்டு இருப்பார் என்பதை அளவிடுவதற்கு வேறு ஆதாரங்கள் தேவைப்பட மாட்டாது.

எதுவாயினும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சரத் பொன்சேகா, தமிழ்த் தாய்மார் விடும் கண்ணீருக்கு கணக்கு காட்டவேண்டியவர்களில் ஒருவர்.

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை என்றார் வள்ளுவர்.

சீனாவிடம்- இந்தியாவிடம்- பிரிட்டனிடம் என எந்த நாட்டிடமும் நீங்கள் ஆயுதங்கள் வாங்கலாம். அதனைப் போருக்குப் பயன்படுத்தலாம், வெற்றியும் பெறலாம். ஜனாதிபதிக்கு முன்பாக நின்று வெற்றியின் செய்தியையும் அறிவிக்கலாம்.

ஆனால் தங்கள் பிள்ளைகளை இழந்து- பறிகொடுத்து விட்டு நாளும் பொழுதும் அழுது கண்ணீர் விட்டு கதறுகின்ற தாய்மார்களின் ஓலம் இந்த நாட்டை அழிக்கவல்ல மிகப்பெரிய ஆயுதம் என்பதை எவரும் மறக்கக் கூடாது.

அதிலும் குறிப்பாக சரத் பொன்சேகா இதனை மறந்து விடலாகாது.

ஏனெனில் போர் வெற்றிக்குப் பின்னர் அவர் சிறையில் இருந்து வரிசையில் நின்று தட்டேந்தி உணவு பெற்றதை ஒரு காலமும் மறக்க மாட்டார் என்பதால்,

செய்ததை- அதற்குக் கிடைத்ததை நினைபபதும், கிடைத்த பட்டம் பறிக்கப்பட்டதை ஞாபகம் செய்வதிலும் சரத் பொன்சேகாவிற்கு அதிக கஷ்டம் இருக்கமாட்டாது என்பதால்,

அவர் தமிழ் மக்களுக்கு செய்ததை மறக்காமல் பிராயச்சித்தம் செய்தாகவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :