இணக்க சபைகளுடன்,விஷேட இணக்க சபைகளும் ஏற்படுத்தப்படும்-அமைச்சர் ஹக்கீம்


நீதிமன்ற கட்டமைப்புக்கு வெளியே தற்பொழுதுள்ள இணக்க சபைகளுடன், வேறொரு விதமான விஷேட இணக்க சபைகளையும்; ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் முன்னர் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பொழுது, அவர்கள் முகம்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான காணிப் பிணக்குகளுக்கு உகந்த தீர்வுகளை காண்பதற்கு வாய்ப்பாக இவ்வாறான உத்தேச விஷேட இணக்க சபைகள் அமையுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

நீதியமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இணக்க சபை தின நிகழ்வு வியாழக்கிழமை (18) கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற பொழுது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

இந் நிகழ்வில் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, இணக்க சபை ஆணைக்குழுவின் தலைவர் இளைப்பாறிய நீதியரசர் ஹெக்டர் யாபா, ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தினேஷா டி சில்வா, அமைச்சின் மேலதிகச் செயலாளர் லக்ஷ்மி குணசேகர, சிரேஷ்ட உதவிச் செயலாளர் அனூஷா முனசிங்க, ஆணைக்குழுவின்; உதவிச் செயலாளர் வாசனா குணரட்ன, இணக்க சபை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சோமசுந்தரம், திருமதி ஜூரங்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடெங்கிலும் இருந்து இணக்கசபைகளின் தலைவர்கள் இதில் பங்குபற்றினர். கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்தவையாவன,

பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வை காண்பது இணக்க சபைகளின் பங்களிப்பு மகத்தானது. நீதிமன்ற கட்டமைப்புக்கு வெளியே பிணக்குகளுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதில் இணக்க சபைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதற்காக நீதியமைச்சினால் ஒரு தினம் ஒதுக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது.

நீதிமன்றங்களுக்குச் சென்றால் மக்கள் நடுநடுங்குகின்றனர். அவ்வாறான சூழ்நிலைதான் பொதுவாக நீதிமன்றங்களில் நிலவுகின்றது. பீதியுடனும், ஒருவிதமான தயக்கத்துடனும் தான் வழக்காளிகள் நீதிமன்றத்திற்குள் செல்கின்றனர். ஆனால், இணக்க சபைகளில் அவ்வாறல்ல. அங்கு பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கு வருபவர்கள் நட்பு ரீதியாக அணுகப்படுகின்றனர். 

அங்கு இணக்கத் தீர்வும், சமரசமும் செய்து வைக்கப்படுகின்றது.
நீதிமன்றங்களில் எந்தத் தராதரத்தில் கடமையாற்றினாலும் அவர்களது மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அண்மையில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வொன்றின் போது இலங்கையில் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் நீதிமன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

தற்பொழுது இணக்க சபைகள் நாடு முழுவதிலும் செயல்பட்டு வருகின்றன. சில பிரதேச செயலக சபை எல்லைகளைத் தவிர தற்பொழுது நாட்டின் எல்லா பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இணக்க சபைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.


வெளிநாடுகளில் கூட இந்த இணக்க சபை முறைமையை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்காக அவை எமது அனுபவ ரீதியான உதவியை நாடியுள்ளன. எங்களிடம் இருந்து அதற்கான பயிற்சியாளர்களை அந்நாடுகள் வேண்டி நிற்கின்றன.


இந்த இணக்க சபைகளுடன், வேறொரு விதமான விஷேட இணக்க சபைகளையும்; ஏற்படுத்துவதற்கு நாம் உத்தேசித்துள்ளோம். அதாவது யுத்தம் முடிவடைந்த சூழ்நிலையில் முன்னர் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பொழுது, அவர்கள் முகம்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான காணிப் பிணக்குகளை நாம் இனங்கண்டுள்ளோம். 

அந்தப் பிரச்சினைளுக்கு தீர்வு காண்பதற்கு நீதிமன்றங்களை நம்பியிருப்பதால் இலகுவில் முடிந்து விடாது நீண்டகாலதாமதம் ஏற்படும். ஆகவே தான் காணிப்பிரச்சினைகளுக்கு உகந்த தீர்வை காண்பதற்கு அவற்றுக்கென விஷேடமான இணக்க சபைகளை அமைக்கும் தீர்மானமாகும்.
இணக்க சபைகள் என்பது சாதாரண பொது மக்கள் மத்தியிலிருந்து, அரசியல் கலப்பற்றவர்களையும், சமூக அந்தஸ்து மிக்கவர்களையும் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளப்படும் தொண்டர் அடிப்படையிலான ஒரு சேவை.

மேல் நீதிமன்றங்களில் காணப்படும் ஜூரர் சபைகள் என்னும் நடுவர் சபைகளின் அவசியம் தேவைதானா என்றொரு கேள்வி எழுந்துள்ளது. வழக்குகளுக்கு நடுவராக கடமையாற்றுவதற்கு தெரிவு செய்யப்படும் ஜூரர்கள் தொடர்ந்து அவற்றுக்கு சமூகம் அளிக்க நேர்வதால், அவர்கள் இன்றி விசாரண செய்வது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதால் பெரும்பாலும் சட்டத்தரணிகள் அதனை விரும்புவதில்லை.

இவ்வாறான பல பிரச்சினைகள் உள்ளன. குற்றவியல் சட்டக்கோவை போன்றவற்றில் புதியவற்றைச் சேர்க்க வேண்டிய தேவை அடிக்கடி ஏற்படுகின்றது.

இணக்க சபைகளின் ஊடாக நாட்டிலே புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இணக்க சபைகளின் வித்தியாசமான பரிமாணங்களை புரிந்துகொண்டு புதிய நடைமுறைகளைப்பற்றி ஆராய்வது பெரிதும் பயனளிக்கும்.

பாரம்பரிய நீதிமன்ற முறைமையில் காணப்படும் பல குறைபாடுகள் இணக்க சபைகளில் காணப்படுதில்லை.

இந்த நாடளாவிய இணக்க சபை வலைப்பின்னலில் பணியாற்றும் வாய்ப்பு அதன் உறுப்பினர்களான உங்களுக்கு வாய்த்திருப்பது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும். இதில் நம்பகத்தன்மை இன்றியமையாதது. அதனையே இங்கு சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோவும் வலியுறுத்தினார்.

பத்து வருடங்களாக இணக்க சபைகளில் கடமையாற்றுவோருக்கு அகில இலங்கை சமாதான நீதவான் பதவி வழங்கிவருகிறோம். அந்தக் காலப்பகுதியை மேலும் குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்றார்.
 டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
நீதியமைச்சின் ஊடகச் செயலாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :