பௌத்த மதம் கற்கும் முஸ்லிம் மாணவர்களும், மௌலவி ஆசிரிய நியமன இழுத்தடிப்பும்.

மது நாட்டின் பாடசாலைகளில் சமய பாடம் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவன் தனது மொழியில் கட்டாயம் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என்பது போல் தனது சமய பாடத்திலும் அவன் சரியான முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இச்சமய பாடத்தை பொறுத்த வரை முஸ்லிம் மாணவர்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இது விடயத்தில் மிகப்பெரும் அநியாயம் தொடராக நடந்து கொண்டிருப்பதை முஸ்லிம் சமூகம் கண்டும் காணாதது போல் இருக்கிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் படி சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சா. தரப்பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் சித்தியடையவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதே போன்று பல பாடசாலைகளில் சுகாதார, கணித ஆசிரியர்கள் இஸ்லாம் பாடத்தை மாணவர்களுக்கு போதிக்கும் கேலிக்கூத்தும் நடை பெற்று வருகிறது.

இதை விட அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா? இஸ்லாம் பாடத்தை முஸ்லிமல்லாத ஆசிரியர்களும் சில பாடசாலைகளில் கற்பிக்கிறார்கள் என்பதுதான். அது மட்டுமல்ல இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகராகக்கூட இந்து மத பாடத்துக்குரியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவை அனைத்தையும் விட மிக அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் பல பாடசாலைகளில் இஸ்லாம் கற்பிக்க மௌலவிமார்கள் இல்லை என்பதால் பல முஸ்லம் மாணவ மாணவிகள் பௌத்த, கிறிஸ்தவ பாடங்களை கற்கிறார்கள் என்பதுதான்.

பொதுவாக அந்தந்த சமய பாடங்களுக்கு அந்தந்த சமய ஆசிரிய ஆலோசகரே நியமிக்கப்படுவதுண்டு. இஸ்லாம் சமய பாடத்துக்கு ஆசிரிய ஆலோசகர் இல்லாததன் காரணமாக இந்து மத பாடத்துக்குரியவருக்கு இப்பொறுப்பு கொழும்பு போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மௌலவி அல்லாதவர்கள் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர்களாக நியமிக்கும் கேலிக்கூத்தையும் கல்வி அமைச்சு செய்து வருகிறது. 

இவ்வாறு இஸ்லாம் பாட ஆசிரியர்கள் தட்டுப்பாட்டுக்கு காரணம் மிக நீண்ட காலமாக மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமை என்பது பலரும் அறிந்த விடயம்.

மௌலவி ஆசிரியர் நியமன வரலாறு

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் போது அன்றிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடசாலைகளில் அறபு, மற்றும் இஸ்லாம் பாடம் போதிக்கவென ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்து இதற்கு மிக பொருத்தமானவர்கள் மௌலவி பட்டம் பெற்ற மௌலவிகளே என்பதால் அரச அனுமதியுடன் மௌலவி ஆசிரிய நியமனம் கிடைக்க வழி செய்தார்கள். 

1935ம் ஆண்டளவில் இந்நியமனம் கிடைக்கப்பெற்றது. ஆரம்ப கால அறபு மதுரசாக்களான காலி பஹ்ஜத்துல் இப்றாஹீமியா, மஹரகமை கபூரியா போன்ற மதுரசாக்களில் மௌலவி பட்டம் பெற்றோர் இதற்கென நியமிக்கப்பட்டார்கள். 

அவர்களுக்குரிய தகுதியாக மதுரசா தராதர பத்திரம் மட்டுமே பார்க்கப்பட்டது. அதாவது அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அறபு மதுரசா மௌலவிகள் இதற்காக நியமிக்கப்பட்டார்கள். இதன் விளைவாக அரசாங்கத்தில் பதியாத மதுரசாக்கள் தாமும் பதிய வேண்டிய நிர்ப்பந்தம் எற்பட்டதோடு பின்னாளில் க. பொ த உயர் தரத்திலும் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் போன்ற பாடங்கள் சேர்க்கப்பட்டு முஸ்லிம் மாணவர்களின் சமய அறிவு விருத்திக்கு வித்திடப்பட்டது.

இந்த மௌலவி ஆசிரிய நியமனம் 1975ம் ஆண்டு அன்றைய கல்வி அமைச்சர் மர்ஹும் பதியுதீன் மஹ்மூதினால் பரவலாக வழங்கப்பட்டது. அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடம் மற்றும் அறபு மொழி போதிக்க மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

இதன் காரணமாக பல காலம் இஸ்லாம் பாடத்துக்குரிய மௌலவி ஆசிரியர் தட்டுப்பாடு நீங்கியது. அதன் பின் 1978ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படவில்லை. இதற்குக்காரணம் இதன் தேவை குறைவாக இருந்ததும், நமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தூக்கமுமே காரணமாகும்.

பின்னர் 1992ம் ஆண்டு மிகச்சிலருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டது. அதுவும் முன்னர் இல்லாத நிபந்தனைகளான க. பொ த சித்தியடைந்திருக்க வேண்டும், அல்ஆலிம் சித்தி என்ற புதிய நிபந்தனைகள் காரணமாக பலராலும் இந்நியமனத்தை பெற முடியாமல் போயிற்று. சாதாரணமாக எந்தப்பாடத்துக்காயினும் ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுவதாயின் அவர் க பொத சா- தரம், உயர் தரம் என்பவற்றுடன் குறிப்பிட்ட பாடத்தில் திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும். 

ஆனால் ஒரு மௌலவி ஆசிரியருக்கு க. பொத, மௌலவி தராதர பத்திரம், அல்ஆலிம் என பல நிபந்தனைகள் இடப்பட்டு அதன் பின் போட்டிப்பரீட்சை என பாரிய தடைக்கற்களை தாண்டியே அவர் மௌலவி ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். இது கல்வி அமைச்சினால் மௌலவிமாருக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

அல்ஆலிம் பரீட்சை எதற்காக?

அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் காலத்தில் மௌலவி ஆசிரியர் நியமனம் பரவலாக வழங்கப்பட்ட போது ஒரு பிரச்சினை எழுந்தது. அதாவது சில இலங்கை மௌலவிமார் இந்தியாவில் கல்வி கற்று இந்திய மதுரசா தராதர பத்திரத்தை வைத்திருந்தனர்.

 இவர்களையும் மௌலவி ஆசிரிய நியமனத்துக்கு உள்வாங்கப்பட வேண்டும் என்ற பெருந்தன்மை காரணமாகவே அல்ஆலிம் பரீட்சை கொண்டு வரப்பட்டது. அதாவது இலங்கை அறபுக்கல்லூரியின் தராதரப்பத்திரம் இல்லாவிடில் அவர் அல் ஆலிம் பரீட்சையில் சித்தியடைந்திருந்தால் அவருக்கும் நியமனம் வழங்கப்படும் என்பதே கல்வி அமைச்சின் நிபந்தனையாக கொள்ளப்பட்டது. 

அல்ஆலிம் பரீட்சை என்பது அரசாங்க பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படுவது என்பதால் இது மிகவும் தரமிக்க ஒன்றாக இருந்தது.

ஆனால் 1992 ம் ஆண்டு மௌலவி ஆசிரிய நியமனம் பெறுவதற்கு இலங்கை மதுரசாவின் மௌலவி தராதர பத்திரத்துடன் க பொ த, மற்றும் அல்ஆலிம் தேவை என புதிய சட்டங்களை கொண்டு வந்து மௌலவி ஆசிரியர் நியமனத்தை குறைத்தனர்.

 இந்த நிகழ்வகளின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் எம் எச் எம் அஷ்ரப் தலைமையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், பல மாகாணசபை உறுப்பினர்;களுடனும் இருந்தது என்பதையும், அல்ஹாஜ் ஏ. எச். எம் அஸ்வர் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சராகவும் இருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இப்படியிருந்தும் மௌலவி ஆசிரிய நியமனத்துக்காக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு குறைக்கப்பட்ட அநியாயத்தை இவர்கள் எவருமே தட்டிக்கேட்கவில்லை என்பது ஒரு வரலாற்று சோகமாகும்.

இதன் பின் 1994ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசின் ஒத்துழைப்புடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 1994ம் ஆண்டு மௌலவி ஆசிரிய நியமனத்துக்கான போட்டிப்பரீட்சைக்காக அரசாங்கத்தால் கோரப்பட்டது. ஆஹா! முஸ்லிம் காங்கிசா கொப்பா என சந்தோசமடைந்த பல ஆயிரம் மௌலவிமார் (நான் உட்பட) ரூபா 150 செலுத்தி இந்நியமனத்துக்காக விண்ணப்பித்தார்கள். 

அரசாங்கம் அந்த 150 ரூபா வீதம் பல்லாயிரம் மௌலவிமாரின் பணத்தை சுறுட்டி சாப்பிட்டு விட்டதே தவிர போட்டிப்பரீட்சை நடைபெறவுமில்லை, நியமனம் வழங்கப்படவுமில்லை. இதற்கு நாம் மலை போல் நம்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் துணை போனது என்பதை இன்று வரை ஜீரணிக்க முடியவில்லை. இந்த அநியாயங்களே மௌலவிமார் தலைமையிலான அரசியல் கட்சி அவசியம் என்ற சிந்தனையை என்னுள் வலுச் சேர்த்தது.
பின்னர் 1997; ஆண்டும் இதே போல் போட்டிப்பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஏழை மௌலவிமாரின் பணத்தை அரசாங்கம் மீண்டும் சுருட்டிக்கொண்டது தவிர எதுவும் நடக்கவில்லை. 1994 முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாட்சி ஆட்சியில் இருந்தது.

 இவ்வேளைகளில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியிலிருந்த ஏ. எச் எம். அஸ்வர் மட்டும் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார் என்ற உண்மையை நாம் மறக்க முடியாது. அவரது கட்சி ஆட்சியின் போது மௌனமாக இருந்தவர் எதிர்;கட்சியில் இருந்த போது குரல் கொடுத்தார் என்பது கொஞ்சம் பாராட்டுக்குரிய விடயம்.

மௌலவி ஆசிரிய நியமனத்தின் அவசியம் பற்றி ஓர் எழுத்தாளன் என்ற வகையில் அன்று என்னால் ஊடகங்களில் எழுத மட்டுமே முடிந்தது. அதே போல் இந்நியமனத்தை எப்படியும் வழங்கச்செய்ய வேண்டும் என்பதற்காக ஜம்இ;ய்யத்துல் உலமாவின் முன்னாள் செயலாளர் மௌலவி எம் ஜே எம் றியாழ் (இன்றைய எமது முஸ்லிம் மக்கள் கட்சியின் செயலாளர் மௌலவி பதுர்தீனின் சகோதரர்) பெரு முயற்சி எடுத்தார்.

 அத்துடன் இஸ்லாமிய ஆசிரிய சங்கம், முஸ்லிம் கல்வி மாநாடு போன்றவையும் இது பற்றி பத்திரிகை அறிக்கைகள் விட்டன என்பதையும் நாம் மறக்க முடியாது. ஆனாலும் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படவில்லை.
இந்த நிலைக்கு யார் காரணம்?

இவ்வாறான நிலைக்கு யார் காரணம் என்பதை மிக இலகுவாக புரிந்து கொள்ளலாம். சமூக அக்கறையற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும், மௌலவிமாரின் அலட்சியப்போக்குமே பிரதான காரணமாகும். முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் மேடைகளில் கிறாஅத், மற்றம் துஆ ஓதுவதற்கு மௌலவிமாரை கறிவேப்பிலையாக பாவித்தார்களே தவிர மௌலவி ஆசிரிய நியமனத்தை வழங்குவது மௌலவிமாருக்கு மட்டுமல்ல முஸ்லிம் மாணவர்களுக்கும் தேவையானது என்பதை புரிந்து கொள்ளவே இல்லை. 

இஸ்லாம் தெரியாத மூடர்களே முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளாக இருந்ததன் விளைவுகளில் இதுவும் ஒன்று.
இவ்வாறு மௌலவிமாரின் உரிமைகள் முஸ்லிம் அரசியல்வாதிகளால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதனாலும், முஸ்லிம் அரசியல் வெறுமனே சிலரின் சுய நலத்துக்கான ஏமாற்று அரசியலாக இருந்ததாலும் மௌலவிமாரின் அரசியல் தலைமைத்துவம் மூலம் மட்டுமே மௌலவி ஆசரிய நியமனம் உட்பட அனைத்து உரிமைகளையும் பெற முடியும் என்பதை நாம் உணர்ந்தோம்.

உலமாக்கள் தலைமையிலான கட்சியின் உருவாக்கமும் மௌலவி ஆசிரிய நியமனத்துக்கான போராட்டமும்
இத்தகைய காரணங்கள் காரணமாக 2005ம்ஆண்டு உலமா கட்சி உருவாக்கப்பட்டது. அதன் கூட்டங்களில் கலந்து கொண்ட கட்சியின் உயர்பீட மௌலவிமார் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படாதிருப்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியதால் இது பற்றி கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அன்றைய ஜனாதிபதி சந்திர்pக்கா பண்டார நாயக்காவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. 

அதனை தொடர்ந்து இந்நியமனத்தை வழங்குமாறு அவர் பணிப்புரை விடுத்தார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் எமது கட்சி ஒரு சாதாரண கட்சிதானே தவிர அதற்கு பிரதேச சபையிலோ பாராளுமன்றத்திலோ பிரதிநிதிகள் இல்லை என்பதை சந்திரிக்காவும், அரச ஊழியர்களும் தெரிந்து வைத்திருக்கக்கூடும். 

இதன் காரணமாக வெறும் கண்துடைப்புக்காக நியமனத்தை வழங்குமாறு சொல்லியிருக்க்கூடும் என்பதை உணர்ந்தோம். எனவேதான் எமது கட்சியை வளர்த்தாக வேண்டும் என்ற உத்வேகம் எமக்குள் வீறாப்பு கொண்டது.

சில மாதங்களில் 2005 ஜனாதிபதி தேர்தல் வந்தது. இதன் போது மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை தரும் வேட்பாளருக்கே முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்தோம். அதே போல் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சிக்கும் முஸ்லிம் கவுன்சிலுக்கும் இந்நியமனம் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினோம். இந்நியமனத்தை அரசியலாக்குவதன் மூலமே இதனை பெற முடியும் என்பதை தெளிவாக தெரிந்த நாம் அவ்வாறே அரசியலாக்கினோம்.

இது சம்பந்தமாக மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதை தொடர்ந்து அதனை நாம் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினோம். அதனை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவும் தான் ஆட்சிக்கு வந்தால் 700 பேருக்கு நியமனம் வழங்குவேன் என அறிவித்தார். உடனே அமைச்சர் பௌசி அவர்கள் ஒரு வருடத்துக்குள் அயிரம் பேருக்கு நாம் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்குவோம் என அதிரடியாக தெரிவித்தார். 

இவ்வாறு அரசியல் மேடைகளில் பேசுபொருளாக நாம் இந்த நியமனத்தை அரசியல் மயப்படுத்திய போதுதான் எமக்கு மிகவும் தெளிவாக ஒரு விடயம் தெரிந்தது. அதாவது என்றோ நாம் மௌலவிமாரின் தலைமையில் அரசியல் கட்சியை ஆரம்பித்திருந்தால் என்றோ இந்த நியமனத்தை வென்றிருக்க முடியும். வீணாய்ப்போன முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் நம்பியது மடமை என புரிந்தது. இன்னும் பல மௌலவிமாருக்கு இன்று வரை இந்த உண்மை புரியவில்லை என்பது வேறு விடயம்.

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து இது விடயம் பழைய குருடி கதவைத்திறடி என்றாகி விட்டது. ஜனாதிபதி தேர்தலில் நான் பல லட்சக்கணக்கில் எனது சொந்தப்பணத்தை செலவு செய்து மஹிந்த ராஜபக்ஷவக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தும் மௌலவி ஆசிரிய நியமனம் பற்றிய அரசின் மௌனம் பெரும் சினத்தை ஏற்படுத்தியது.

 தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவளித்தமைக்காக எனக்கு எந்தவொரு பதவியும் தேவையில்லை, மாறாக எமது மௌலவிமாருக்கு நியமனத்தை வழங்குங்கள் என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன். அத்தோடு இது விடயத்தில் எமது அறிக்கைகள் கடுமையாக வெளி வந்து கொண்டிருந்தன.

 இது அரச சார்பு அரசியல்வாதிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அல்ஹாஜ் அஸ்வர், அலவி மௌலானா போன்றோர் இது விடயத்தில் அக்கறை எடுத்ததன் பயனாக மௌலவி ஆசிரிய நியமனத்தை உடனடியாக வழங்கும்படி ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு பணிப்பரை விடுத்தார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.

பொறுமையை இழந்த நாம் அரசுக்கு ஆதரவான கட்சியாக இருந்த நிலையில் மௌலவி ஆசிரிய நியமனத்துக்கான கவன ஈர்பு;பு ஆர்ப்பாட்ட பேரணியை 2007ம் ஆண்டு கல்முனையில் நடத்தினோம். இதுதான் இலங்கை வரலாற்றில் மௌலவிமர்hகள் கலந்து கொண்ட முதலாவது ஆர்ப்பாட்டமாகும். இது அரசுக்கு அதிர்ச்சியை அளித்ததுடன் உடனடியாக நான் புலன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். அதன் போது சகல உண்மைகளையும் அவர்களிடம் விளக்கினேன்.

அதனை தொடர்ந்து கண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அன்றைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை சந்திக்ம் வாய்ப்பு கிடைத்தது. அவர் மௌலவி ஆசிரிய நியமனம் என்பது ஏதோ புதிதாக வழங்கப்படும் ஒன்று என நினைத்திருந்தார். இதற்கு அவரை குற்றம் சொல்லி பயனில்லை. 

நமது தூக்க மாத்திரை உறுப்பினர்கள் இது பற்றி பாராளுமன்றத்தில் பேசாததனால் அவருக்கு அந்நியமனம் பற்றிய வரலாறு தெரிந்திருக்கவில்லை. இந்த இடத்தில் எனது தந்தை வை. அப்துல் மஜீத் ஒரு மௌலவி ஆசிரியர் என்றும் ஓய்வு பெற்ற பின் 1990ம் ஆண்டு புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்பதையும் அவருக்கு சொன்ன போதுதான் மௌலவி ஆசிரிய நியமனம் என்பது மிக பழமையானது என்பதை அவர் புரிந்து கொண்டார்.
என்ன இருந்தாலும் அன்றைய கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த எனது கருத்துக்களை மிக அமைதியாகவும் அக்கறையுடனம் உள் வாங்கியதை பாராட்டத்தான் வேண்டும். நான் கண்ட சிங்கள அமைச்சர்களில் அவர் மிகவும் நல்லவர், இனவாதம் இல்லாதவர். இது விடயத்தில் ஹெல உறுமய தடை இருப்பதாகவும் எப்படியும் தான் முயற்சிப்பதாகவும் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து பாடசாலைகளில் எத்தனை மௌலவி ஆசிரியருக்கான புறப்பாடு உள்ளது என்ற தகவல்கள் கல்வி அமைச்சால் சேகரிக்கப்பட்டது. 

இதற்காக சகல பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் அனுப்பப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் அனைத்து பாடசாலைகளும் ஒத்துழைத்தனவா என்பது எனக்குத்தெரியவில்லை. காரணம் இது பற்றி கல்வி அமைச்சுக்குள் தலையிடும் அரசியல் அதிகாரம் எனக்கிருக்கவில்லை. ஆயினும் கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவை நாடிய போது சுமார் 635 மௌலவிமாருக்கான புறப்பாடு உள்ளதாக கூறினர். 

இது 2007ம் ஆண்டு பெற்ற தரவுத்தகவல்கள். இப்போது பல மௌலவி ஆசிரியர்மார் மரணித்தும், ஓய்வு பெற்றும் உள்ளதால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புறப்பாடு உள்ளது என்பது எனது கணிப்பு.


அதே போல் இக்கால கட்டத்தில் ஐக்கிய முஸ்லிம் உம்மாவினால் கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் அதன் உப தலைவர் என்ற வகையில் மௌலவி ஆசிரிய நியமனம் இழுத்தடிக்கப்படுவது பற்றி நான் பிரஸ்தாபித்தேன். அதனைத்தொடர்ந்து உடனடியாக பெசில் ராஜபக்ஷ தலைமையல் முஸ்லிம் அமைப்புகளுடனான சந்திப்பு நடந்தது. இதில் ஐக்கிய முஸ்லிம் உம்மா சார்பாக நானும் கலந்து கொண்டேன். அங்கு வைத்தும் இந்நியமனம் வழங்கப்படுமென பெசில் ராஜபக்ஷ உறுதியளித்தார். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

இந்த சூழ் நிலையில் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் போது இத்தேர்தலுக்கு எமது கட்சியின் ஆதரவும் தேவை என எம்மை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பெசில் ராஜபக்ஷ எம்மிடம் வேண்டினார். ஆகக்குறைந்தது பத்து பேருக்காவது மௌலவி ஆசிரிய நியமனத்தை வழங்க வேண்டும் எனக்கூறினேன். அதனை அவர் ஏற்றக்கொண்டதோடு மௌலவி ஆசிரிய நியமனத்துக்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியானது. 

நானும் எனது சொந்தப்பணத்தையும், சொந்த வாகனத்தையும் பாவித்து அரசுக்கு ஆதரவாக தேர்தலில் களமிறங்கி செயற்பட்டேன். இதன் போது கல்முனையில் எனக்கு முஸ்லிம் காங்கிரஸ்காரர்களினால் மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இதனை அறிந்த பெசில் என்னோடு தொடர்பு கொண்டு பொலிசில் முறைப்பாடு செய்யும்படி வேண்டிக்கொண்டதற்கிணங்க முறைப்பாடும் செய்யப்பட்டது. தேர்தலில் அரசு பெரு வெற்றி கண்டது.

தேர்தலை தொடர்ந்து முஸ்லிம் முதலமைச்சர் நியமிக்கப்படாமல் வாக்குறுதி மீறப்பட்டதால் நாம் அரசுடன் முரண்பட்டோம். இதன் காரணமாக மௌலவி ஆசிரிய நியமனமும் கிடப்பில் போடப்பட்டது.

அதன் பின் 2009ம் ஆண்டு வட மேல் மாகாண சபை தேர்தல் வந்தது. இதன் பொது மீண்டும் அரசுடன் பேச்சு வார்த்தை செய்து இத்தேர்தலில் நாம் அரசுக்கு ஆதரவாக களமிறங்குவதாயின் மௌலவி ஆசிரிய நியமனத்துக்கான போட்டிப்பரீட்சை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என கோரினோம். அதன்படி போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டது. ஆனால் நியமனம் வழங்கப்படவில்லை.

 மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதைக் கண்ட நானும் விகரமாதித்தன் போல் சளைக்காமல் அடுத்த தேர்தலை எதிர் பார்த்து அதில் முயற்சி செய்தேன்.

2010 ஜனாதிபதி தேர்தல் எட்டிப்பார்த்தது. இதனை சந்தர்ப்பமாக வைத்து நாம் ஜனாதிபதியுடன் பேசியதை தொடர்ந்து மௌலவி ஆசரியருக்கான தெரிவு ஆரம்பமாகியது. 2700 பேர் இதற்கான போட்டிப்பரீட்சையில் கலந்து கொண்டும் 20 வீதமானோரே சித்தியடைந்திருந்தனர். இதற்குக்காரணம் மௌலவிமாருக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற முறையிலான வினாத்தாள்களாகும். இதில் பைலட் பிரேம்நாத் என்ற சினிமாப்படம் பற்றியும் ஒரு கேள்வி இருந்தது.

 இத்தகைய தவறுக்கு பரீட்சைத் திணைக்களமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். இந்த அநியாயத்தைப்பற்றி நாம் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத்திணைக்களத்திடமும் முறையிட்டோம். எம்மால் முறையிடுவது தவிர இது பற்றி பாராளுமன்றத்தில் பேசும் அதிகாரம் எமக்கில்லை. இது பற்றி நீதி மன்றுக்கு சென்று வழக்காட எமது முஸ்லிம் சட்டத்தரணிகளில் ஒருவராவது முன்வரவுமில்லை. ஆனாலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் ஒரு கேள்வியை கேட்டேன்.

அதாவது ஆங்கில ஆசிரியர்களை நியமிக்கும் போது அவர்களுக்கான போட்டிப்பரீட்சை எந்த மொழியில் நடை பெறுகிறது என. அவர் சொன்னார் ஆங்pல மொழியில். அப்படியாயின் அறபு படிப்பிக்கும் மௌலவிமாருக்கு ஏன் தமிழில் பரீட்சை நடைபெறகிறது எனக்கேட்ட போது தடுமாறினார். இதனை பரீட்சை திணைக்களததுக்கு அறிவியுங்கள் என்றார். மக்கள் செல்வாக்குள்ள அரசியல் கட்சியாக நம் இருந்திருந்தால் எமது அறிவுப்புக்கு பரீட்சை திணைக்களம் உரிய நடவடிக்கை எடுத்திருக்கும்.

இங்கு ஒரு புதுமையான போட்டிப்பரீட்சையே நடக்கிறது. மௌலவி ஆசிரிய நியமனத்துக்கான போட்டிப்பரீட்சையின் போது இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகள் தமிழிலும் அறபு மொழியிலும் இருக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை. அதன் மூலமே திறமையுள்ள மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட முடியும்.

2010ம் ஆண்டு இரு கட்டங்களாக 151 மௌலவிமாருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றதாகும். அதன் பின் இந்நியமனம் வழங்கப்படவே இல்லை. 2009ம் ஆண்டு இதற்கான போட்டிப்பரீட்சையில் கலந்து கொண்டவர்களில் சித்தியடைந்த சிலருக்குக்கூட இந்நியமனம் வழங்கப்படவில்லை என்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

அதே வேளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அழகியல் கலை ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப்பரீட்சையில் 80 வீதமானோர் சித்தியடையாததன் காரணமாக விசேட அமைச்சரவை பத்திரம் மூலம் சித்தியடையாதோரும் நியமனம் பெற்றனர். காரணம் அவர்களில் 98 வீதமானோர் சிங்களவர்கள்.

அத்துடன் இது விடயத்தில் சிங்கள சமுதாயமும், அவர்களின் அரசியல்வாதிகளும் அக்கறையுடன் செயற்பட்டனர். முஸ்லிம் சமூகத்தினதும், மௌலவிமாரினதும், அரசியல் பதவி பெற்றவர்களினதும் ஆழ்ந்த உறக்கம் காரணமாக மௌலவிமாருக்கு மட்டும் பாரிய அநீதி நடைபெற்றது.

இதற்கு என்ன தீர்வு?

எம்மைக்கேட்டால் எமது அனுபவத்தின் படி மௌலவி ஆசிரிய நியமனம் என்பது அரசியல் சார்ந்த விடயம் என்பதால் முழு மௌலவிமாரும் அரசியல் மயப்படுத்தப்பட்டு எமது அரசியல் முனைப்பில் இணைந்து செயற்படுவதன் மூலமே இந்நியமனத்தை மீண்டும் பெறலாம் என்பதுதான் எமக்குத் தெரிந்த ஒரே வழி.

இந்த வழியில் அர்ப்பணிப்புடன் எம்முடன் ஒத்துழைக்க உலமா சபையும், மௌலவிமாரும், பெற்றோரும், இஸலாத்தின் மீது அக்கறையள்ள புத்திஜீகள், இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள் முன் வர வேண்டும். அப்போது இத்தகைய அநியாயங்களுக்கு நிச்சயம் தீர்வு காண முடியும். இல்லாவிடில் இன்னும் பத்து வருடங்களில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் உள்ள முஸ்லிம் மாணவர்கள் பௌத்த, கத்தோலிக்க சமய பாடங்களையே கற்று சமய பாடத்தில் சித்தியடைய வேண்டிய நிலை வரும். எமது இந்த எச்சரிக்கை எவரது காதிலாவது விழுமா?

மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் மக்கள் கட்சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :