ஏறாவூர் நகர சபையில் மோசடி இடம் பெற்றவருகின்றது அதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.பெறோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (29.4.2013) ஏறாவூர் நகர சபை கூட்டத்தில் அவர் இது தொடர்பாக அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே நகர சபை உறுப்பினர் பெறோஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முன் வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஏறாவூர் ஆற்றங்கரைப் பிரதேசத்தில் எமது நகரசபை எல்லைக்குள் சேருகின்ற கழிவுகளை அகற்றியமைக்காக ரூபா 503,311 செலவிடப்பட்டுள்ளது. இச்செலவானது சபையினுடைய எவ்வித முன்னறிவித்தல் இன்றியும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு இல்லாமலும் தொழிநுட்ப உத்தியோகத்தரின் மேற்பார்வை இல்லாமலும் இந்நிதி கையாடப்பட்டுள்ளது.
ஏனவே இந்நிதி கையாடப்பட்டாதாக சந்தேகம் நிலவுவதால் இதற்கான சகல ஆவணங்களையும் நிதிக் குழுக் கூட்டத்தில் கேட்டபோது எவ்வித ஆவணமும் இன்றி காசோலை வழங்கப்பட்டுள்ளது. எனவே முறைகேடாக வழங்கப்பட்ட இப்பணத்தினை செலுத்த வேண்டாமென இச்சபையை நான் கேட்டுக் கொள்கின்றேன்.
தயட்ட கிருள கண்காட்சிக்காக காட்சிப்படுத்த செய்யப்பட்ட சிறுவர் பூங்கா மாதிரிக்காக சுமார் ரூபா 95,000 ரூபாவும் செலவினங்களுக்காக ரூபா 50,000 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.
இச்செலவானது சபையினுடைய அனுமதி இல்லாமலும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு இல்லாமலும் உரிய நடைமுறைகளை பின்பற்றாமலும் செலவு செய்யப்பட்டுள்ளதால் இச்செலவுத் தொகையை அனுமதிக்க முடியாது என்று நிதிக்குழு சபைக்கு சிபாரிசு செய்கின்றது. இதற்கான விளக்கத்தினை தவிசாளர் அவர்கள் சபைக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இந்நிதியை மீள் அறவிடுவதற்கும் ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கும் சபைக்கு பரிந்துரைக்கின்றேன்.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரைக்கும் மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கான எந்த அபிவிருத்திகளும் இந்த சபையினுடைய நிதியின் மூலம் இடம்பெறவில்லை. சபையினுடைய நன்மை கருதி நிலையான வைப்புக்களும் இல்லை. இதன் காரணமாக சபையினுடைய எதிர்கால நடவடிக்கைகள் பாரிய பின்னடைவை எதிர் நோக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
எனவே இது போன்ற காரணங்களினால் மேற்கூறப்பட்ட மோசடிகளை கட்டுப்படுத்தும் முகமாக இச்செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்ற சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என இச்சபையை கேட்டுக் கொள்கின்றேன்.
எமது ஏறாவூர் நகர சபையினுடைய தற்போதைய நிலைமையானது வரவை மீறியதான செலவு காணப்படுகின்றது. திட்டமிடப்படாத வகையில் வெளியுள்ள கவர்ச்சிக்காக மாத்திரம் அனைத்து வேலைகளும் இடம் பெறுகின்றன.
எமது நகர சபையினுடைய மார்ச் மாத செலவினங்களை ஆராயும் நிதிக்குழுக் கூட்டம் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்றது. இக் கூட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் அவைகள் ஒன்றுக்குமே பதில் கிடைக்கவில்லை.
கொள்முதல் தொடக்கம் அபிவிருத்தி வேலைகள் வரைக்கும் எவ்விதமான முகாமைத்துவச் சிந்தனைகளுமின்றி வெளிப்படைத்தன்மை அற்றவிதத்தில் செயற்படுத்தப்படுகின்றார்கள்.
எமது சபையினால் தவிசாளர் அவர்களின் வாகனத்திற்கு எரிபொருள் மாதாமொன்றுக்கு சுமார் 450 – 500 லீற்றர் வரை பயன்படுத்தப்படுகின்றது. ஒரு அரச நிறுவனத்தினுடைய உயர் அதிகாரிக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற எரிபொருள் மட்டமானது 140 லீற்றர் ஆகும்.
அதற்கு மேலதிகமான தேவை ஏற்பட்டால் அதற்கான காரணத்துடன் கடிதங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் எனக்கேட்டு இப்பிரேனையை முன்மொழிகின்றேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment