கல்வியில் வறுமை ஏற்படுத்தும் தாக்கம்?



மனிதன் என்று வந்துவிட்டால் அங்கு செல்வமும் வறுமையும் வந்துவிடும். இன்று உலகின் உதயத்திலும்கூட வறுமையே விஸ்வரூபம் எடுத்துள்ளமை மிகப் பெரியதோர் பிரச்சினை எனலாம். ஆபிரிக்காவின் பலநாடுகளும், ஆசியாவின் பலநாடுகளிலும் இன்று வறுமையின் கோரப்பிடி தாண்டவமாடினாலும் பொதுவாகவே உலக நாடுகள் பலவற்றில் ஏதோர் வடிவில் வறுமை என்ற பதத்திற்குரியோர் இனங்காணப்பட்டே வருகின்றனர். உலக சனத்தொகை சுமார் 7பில்லியனை அண்மித்துள்ள நிலையில் உலகின் வறுமை நிலையும் ஓங்கிவருகின்றன. அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளைக் கைக்கொள்வதற்கு பெரும் பிரயத்தனங்கள் உலக அரசுகள் எடுத்து வருவதையும் நாம் காணலாம். சனத்தொகை வளர்ச்சிப்போக்கு அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் அதிகரித்துக்காணப்படுவதானது இடப்பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, தொழில் பிரச்சினை போன்றனவும் இதன் காரணமாக ஏற்படுவது வறுமைக்கு அடிப்படையாக அமைவதால் பல்வேறு சுற்றாடல், சூழலியல் பிரச்சினைகளும் ஏற்பட்டு காலநிலையின் மாற்றத்திற்குக்கூட வழிவகை செய்யும் அளவுக்கு இன்று வறுமை தலைவிரித்தாடுகிறது என்றால் மிகையாகாது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகை ஆட்டுவித்த பொருளாதார மந்தநிலை காரணமாக வறுமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையை நாம் காணலாம். அதிலிருந்து முற்றாக மீட்சி பெறுவதற்கான வழிவகைகளை இன்னும் உலகம் முழுமையாக தேடிக்கொண்டிருக்கும் நிலையில் நாடுகள் முழுமையான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகை மற்றும் திட்டங்களைத் தீட்டினாலும் சில வேளைகளில் இயற்கையும் சதி செய்து மென்மேலும் வறுமைக்கு கொண்டு செல்கின்ற ஒரு நிலைமைக்கு உலக சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் வறுமையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பல்வேறு அறிஞர்கள், பொருளியல் விற்பன்னர்கள் திட்டமிட்டிருந்தாலும் இயற்கைக்கு பாதிப்புறாத அபிவிருத்தியும், சமாதான சகவாழ்வும் நிலைத்திருக்க வழி செய்தல் அவசியமாகும்.

இவ்வறுமையானது முழு அபிவிருத்திக்கு தடையாகவும், சமாதானத்திற்கு அச்சுறுத்தலாகவும் காணப்படுகிறது. அந்தவகையில் சமூகத்தின் கட்டமைப்பை குலைத்திடும் மோதலானது ஆழமான ஆணிவேராகவே காணப்படுவதுடன், குறைந்தளவு வருமானம், வருமானமின்மை, அன்றாடம் வாழ்வதற்கே போதுமானளவு ஜீவனோபாயத்திற்கு வழியில்லாத நிலையில், தமது வாழ்வுக்கு அத்தியவசியமானவற்றை பெற்றுக்கொள்ள முடியாதநிலை தோன்றுகிறது. ஆனால் வருமானம் இல்லாதநிலை மட்டும் வறுமையாக இருந்துவரவில்லை. ஏற்றுக் கொள்ளத்தக்க வாழ்க்கைத் தரம் ஒன்றுக்கான தெரிவுகள் மற்றும் வாய்ப்புக்கள் என்பன மறுக்கப்படும் நிலையே வறுமையாக இருந்து வருகின்றது. எனவேதான் வருமானம் சார்ந்த வறுமை என்றும், மாணிட வறுமை என்றும் வேறாக வறுமையை நோக்குவர். ஆதலால்தான் ஐ.நா. மனித அபிவிருத்தி அறிக்கையில் (ருNனுP – 1997) 'வறுமை வருமானம் தொடர்பான விடயத்தில் மட்டும் கவனத்தில் எடுக்கப்படக்கூடாது. அது அதன் அனைத்து வகையான பரிமாணங்களிலும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில் பார்க்கிறபோது வறுமை கொண்டுள்ள பரிமாணங்களை பின்வரும் விடயங்களினுடாக கூறலாம்.       
 குறைந்த ஆயுள் காலம்.
 கல்வியறிவின்மை.
 புறமொதுக்கப்படுதல்.
 பொருள் வளமின்மை என்பனவாகும்.
ஆதலால்தான் வறுமைக்கு இலக்கணம் வகுத்தவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். 'அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் ஆற்றலின்மை, மூலவளங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத நிலை, கல்வி மற்றும் திறன்கள் இன்மை, மோசமான ஆரோக்கிய நிலை, போஷாக்கின்மை, வசிப்பிடமின்மை, நீர் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை, அதிர்;ச்சிகளினால் எளிதில் பாதிப்படையும் நிலை, வன்செயல் மற்றும் குற்றச்செயல்கள், அரசியல் அதிகாரமின்மை மற்றும் குரலொழுப்பும் சக்கியற்ற நிலை போன்ற அனைத்தும் உள்ளடக்கிய ஒரு பன்முகத்தோற்றம் கொண்ட விடயமாகவே வறுமை இருந்து வருகின்றது' எனக்கூறுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் உலக சனத்தொகையின் அரைவாசிப்பேர் நாளொன்றுக்கு இரண்டு அமெரிக்க டொலருக்கும் குறைவான(2000) வருமானத்திலேயே வாழ்கின்றனர். மேலும், 1.3பில்லியன் மக்கள்(2001) தொகையினர் எவ்விதமான ஆதரவற்ற நிலையில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் உலகின் பொருளாதார உயர்ச்சி பொருந்திய நாடுகள் வறுமை நிவாரணங்களையும், வறுமையை இல்லாமல் அல்லது ஒழிப்பதற்கான திட்டங்களையும் வறுமையால் பாதிப்புறுகின்ற நாடுகளில் பல்வேறு செயற்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. ஐ.நாவின் உணவு அல்லது விவசாய அமைப்பானது(குயுழு) நிறுவப்பட்டமை 'கிராமப்புறங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை, விவசாய விருத்தியை மேம்படுத்துவதன் மூலம் வறுமையையும், பட்டினியையும் குறைக்கும் பணியில் ஈபடுவதற்காக வேண்டியே' உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றது. எனினும் சாண் ஏற முழம் இறங்குவது போல் உலகின் பலபாகங்களிலும் யுத்தம், இனமுரண்பாடு, இயற்கையழிவுகள், காலநிலை மாற்றம், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு விடயங்கள் நடைபெற்று வருவதால் உடனடியான தீர்;வை பெறுவது இயலாததாகவே உள்ளதாக கூறப்படுகிறது.  

உலகின் பலநாடுகள் வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுபட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தாலும் நமது நாடான இலங்கையிலும் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் காலாகாலம்  அமுல்படுத்தியே வந்துள்ளன. அதில் முக்கியமானது 'சமூர்த்தி' திட்டமாகும். இதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வறுமையை குறைப்பதற்கு பல்வேறு எத்தனங்கள் எடுத்தாளப்பட்டு வருகின்றமை கண்கூடு. இருப்பினும் மக்களின் ஏகோபித்த முடிவு 'எப்போதுமே இலவசமாய் பார்க்கின்ற ஒரு உணர்வு ஓங்குகின்ற நிலைப்பாடுகளும். சுயமுயற்சிக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளமையும்' வறுமையை விட்டு நீங்குவதற்கு முடியாத காரியங்களாய் உள்ளன. சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னால் இருந்து இன்று வரையும் மக்களுக்கான வறுமை ஒழிப்புக்கள் நடைபெற்று வந்தாலும்கூட இன்று வரையில் கனிசமான அளவினர் இலவசத்தையே எதிர்ப்பார்த்துக் காத்திருப்பது என்றும் வறுமையை கோடிடுட்டுக் காட்டுகின்றன என்பதையே பறைசாற்றி நிற்கின்றன எனலாம்.

எனவேதான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பல்வேறு உபாயங்களையும் கைக்கொண்டு இத்திட்டம் இன்றுவரை நடைபயில்கிறது. இது பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியதாகவும் காணப்படுகிறது கட்டாய சேமிப்பு, சுயவிருப்பு சேமிப்பு, சனசமூக செய்திட்டங்கள், சமுர்த்தி கொடுகடன் திட்டம், துரிதப்படுத்தப்பட்ட கடன் திட்டம், சமுர்த்தி அபிவிருத்திக் கடன் திட்டம், சமுர்த்தி தொழில் முனைவு கடன் திட்டம், சமுர்த்தி குத்தகைத் திட்டம், சமுர்த்தி வங்கிச்சங்க நிகழ்ச்சித்;திட்டம், விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், விழிப்புணர்வுத் தூண்டல் மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், சுய வேலை வாய்ப்பு நிகழ்ச்சித் திட்டம், சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்;திட்டம், மதுப்பழக்கத்தை தடுத்தல், எழுத்தறிவு, சமுர்த்தி கொடி விற்பனை, வாராந்த சந்தைகள், சமுர்த்தி விற்பனை நிலையங்கள், சிறு கைத் தொழில்களின் அபிவிருத்தி, சமூக சமுர்த்தி பாதுகாப்பு நிதியம், சமுர்த்தி புலமைப் பரிசில்கள், சுயவேலை வாய்ப்புத் திட்டங்கள், ஊழியத்தைப் பயன்படுத்தும் செய்திட்டங்கள், மகிந்த சிந்தனையின்கீழ் பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் போன்றன மக்களின் வறுமையை ஒழிப்பதற்கென கொண்டுவரப்பட்டு, தற்போது நடைமுறையில் செயற்பட்டும் வருகின்றன.

இவ்வாறான திட்டங்கள் மக்களின் வாழ்வு நிலையை உயர்த்தியதாக தெரியவில்லை. காரணம் பலவற்றைக் கூறலாம். கடந்த காலத்தில் இடம்பெற்று வந்த இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடியமை, உள்நாட்டுப்போர், இடம்பெயர்வு, அகதி வாழ்வு, பொருட்களின் விலையேற்றம், உள்நாட்டு உற்பத்திக்கான சரியான சந்தை வாய்ப்பின்மை, கற்றலில் ஆர்வம் காட்டாமை, பாடசாலை இடைவிலகல், சுயமாக தொழில் செய்வதில் சோம்பறித்தனம் காட்டுதல், அக்கரையற்ற வாழ்வு, வெளிநாட்டுக்கு பெண்கள் செல்கின்றமையினால் கணவர் தொழில் செய்யாது விடுவது போன்ற பலவாறான காரணிகளை கூறலாம். இது உள்நாட்டு உற்பத்தி செயற்பாட்டுக்கும் உயர்வான வாழ்க்கைத்தரத்திற்கும் இம்மக்கள் செல்வதற்கு தடைகளாக அமைந்தன. இருந்தாலும் உலகின் வறுமை நிலையானது 174 நாடுகளுக்குள் இலங்கைக்கு 84வது இடம் (2000) கிடைத்தது.

எனவேதான் நாட்டின் வறுமை நிலையை குறைப்பதற்குரித்தான திட்டங்கள் இன்றைய சமாதான சூழ்நிலையில் ஏற்படுத்தப்படல் வேண்டும். அதற்கான திட்டங்கள் பல தீட்டப்படுவதற்கு கல்வியை ஒரு திருப்திகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்தல் அவசியமாகும். இன்று கல்வியில் புதிய மறுமலர்;ச்சி கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்போவதாக கல்வியமைச்சர் கூறியுள்ளார். இதற்கமைய நாட்டின் வறுமையை இல்லாதொழித்து, நாட்டின் அபிவிருத்தியின் மீதான கண்ணோட்டத்தில் தாக்கத்தைச் செலுத்தும் உயர் விழுமியமுள்ள கல்விச் செல்வத்தை அடைவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதன் அவசியம் உணரப்பட்டுள்ளன என்பதுதான் உண்மையாகும்.

இன்று பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரிகள் தொழிலற்று பலவருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை, ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கின்ற நிலை, எங்கும் தொழில் பெறமுடியாத போக்கு, தொழிலற்று உலாவுகின்ற படித்த இளைஞர்கள் தப்பான வழிகளில் செல்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்தாதிருக்க கல்வியின் ஊடாக அதன் நோக்குகள் நிறைவேறக்கூடியவாறான தொழில் கல்விகளையும், வேலைவாய்ப்புக்கு உரித்தான திட்டங்ககளையும் தீட்டுதலின் அவசிப்பாடு உணரப்பட்டுள்ள நிலையில் சரியான திட்டமிட்ட அடிப்படையில் பொருளாதார மேம்பாடுகள் கருதியதாக அமைய வேண்டும் என்பதையே இன்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆதலால்தான் 'கல்விச் செயற்பாடுகள் ஒரு சமுதாயத்தில் இல்லாத நிலை தோன்றுகின்றபோது வறுமையின் தோற்றம் ஆரம்பமாகிறது'. அந்தவகையில் அடிப்படையான கல்;வியறிவு முக்கியமானது என்பதை பலர் வலியுறுத்துகின்றனர். கல்வி வாய்ப்புக்கள் பெறமுடியாத போது எழுத்தறிவின்மை தோன்றுகிறது. இன்றைய உலகமயமாக்கள் காரணமாக உலகம் கிராமமாகி சுருங்கிய நிலையில் பார்க்கப்படுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் உதவியின்றி இருக்க முடியாது. அவ்வாறு பின்ணிப் பிணைந்து காணப்படுகிறது. இவற்றுக்கெல்;லாம் கல்விதான் அடிப்படையாக அமைகிறது.

உண்மையில் இலங்கையின் தேசிய கல்விக் குறிக்கோளின் எண்ணக்கருக்களுக்குள் தனிநபருக்கும் சமுதாயத்திற்கும் பொருத்தமுடைய பெரும்பாலான தேசிய இலக்குகளை அடைவதற்கு தனிநபர்களுக்கும், குழுவினருக்கும் உதவும் நோக்கை இத்தேசிய குறிக்கோள்கள் நிறைவேற்றுதல் வேண்டுமென எதிர்பார்க்கப் படுகிறது.  உதாரணமாக 'தேசத்தைக் கட்டியெழுப்புதல், தனிநபரினதும், தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தைப் போஷிக்கக்கூடியதும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்;கும் பங்களிக்கக்கூடியதுமான ஆக்கப் பணிகளுக்குரித்தான கல்வியை ஊட்டுவதன் மூலம் மனித வளத்தை அபிவிருத்தி செய்தல்' என்பதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நோக்கை அடைந்திடும் போது வறுமை இல்லாதொழிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்படுமல்லவா? எனவேதான் அனைவரினதும் வாழ்வு திறம்பட ஓங்குவதற்குரித்தான, பொருளாதார சுபிட்சத்தை ஏற்படுத்தக்கூடியவாறு கல்வி அமையப் பெறல் வேண்டும் என்பதைத்தான் இந்த இலக்குகள் வலியுறுத்தி நிற்கின்றன.

அதுமட்டுமன்றி கல்விப்புலத்தில் காணப்படும் அடிப்படையான தேர்ச்சிகளில் காணப்படுகின்ற 'வேலை உலகிற்குத் தயார் செய்தல்' என்கிற ஒரு விடயமும் காணப்படுகிறது. மாணவர்களுக்கு ஆரம்ப முதலிருந்தே கல்வியினூடக அவர்களது சக்தியை உச்ச நிலைக்கு கொண்டு வருவதற்கும், அவர்களது ஆற்றலை போஷிப்பதற்கும் வேண்டிய தொழில்சார் திறன்களை நாட்டினதும், உலகத்தினதும் பொருளாதார விருத்திக்குப் பங்களிப்புச்செய்ய வேண்டும் என்பதாக கூறப்படுகிறது. மேலும் தத்தமது விருப்புக்கும், உளச் சார்புக்கும்,   ஆற்றல்களுக்கும் பொருத்தமானவாறு வேலையைத் தெரிவுசெய்து கொள்வதுடன், அது பயனளிக்கக் கூடியதும் நிலைபேறுடையதுமான ஜீவனோபாயத்தில் ஈடுபடக்கூடியவாறான கல்வியை பெறுவதன் ஊடாக வறுமையை ஒழிக்கும் கல்வித்துறையின் ஏற்பாடுகள் அமைதல் வேண்டும்.

எனவே, சிறப்பான எதிர்காலத்தை நோக்கியதாக அவர்களது செயற்பாடுகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி வறுமையுற்றவர்கள் வெளியே நகர்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு அரசு திட்டங்களை காலத்திற்கு ஏற்றவாறு உட்புகுத்தி ஊழியச் சந்தைக்குகந்தவர்களாக மிளிரச் செய்வதற்கும் ஏற்புடையதான அனைத்துச் சுதந்திரத் தாகமுடைய ஒழுங்கு முறைகளில், எவ்வித சுரண்டலுமற்ற நிலையினை மேம்பாடடையச் செய்கின்ற உட்கட்டுமானங்களையும் ஒழுங்குபடுத்தி நாட்டிலிருந்து வறுமை எனும் சமுதாய நோயை நாளைய சந்ததிக்கு விட்டுவைக்காது தூரமாக்கின்ற பணிகளில் கல்விமீதான கண்ணோட்டம் மிகமிக அவசியமாகும். 



-----------------------------------------------------------------
எஸ். எல். மன்சூர் (கல்விமாணி),
அட்டாளைச்சேனை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :