ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நாட்டு நீதியமைச்சர் செய்யத் மொர்தெஸா பக்திஅரி இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். ஈரான் நீதியமைச்சில் இச்சந்திப்பு சனிக்கிழமை (22) இடம் பெற்றுள்ளது.
பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இருநாடுகளிடையேயும் பேணப்பட்டுவரும் சிறப்பான இராஜதந்திர உறவை அமைச்சர்கள் இருவரும் மகிழ்ச்சிதெரிவித்தனர்.
இரு நாடுகளும் அணிசேராநாடுகள் அமைப்பின் உறுப்புநாடுகள் எனக் குறிப்பிட்ட ஈரானிய நீதியமைச்சர்,தமது நாடு தற்பொழுது அவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிப்பதையும் சுட்டிக்காட்டினார். பொதுவான விடயங்களில் ஈரானும், இலங்கையும் பரஸ்பரம் ஒத்துழைத்துவருவது பற்றியும் அவர் பெருமிதமடைந்தார்.
இலங்கையைப் பொறுத்தவரை உமாஓயா அபிவிருத்தித்திட்டம்,கிராமிய மின் விநியோகத்திட்டம் என்பவற்றுக்கான ஈரானின் பாரிய பங்களிப்பிற்கும், இலங்கையின் எரிபொருள் தேவையை நிறைவு செய்வதற்காக அந்நாடு தமது நாடடிற்கு சலுகை விலையில் எரிபொருள் விநியோகம் செய்தமைக்கும் அமைச்சர் ஹக்கீம் நன்றி தெரிவித்தார்.
ஈரானுக்கு உலக அரங்குகளில் இலங்கை குரல் கொடுத்தமைக்கு அந் நாட்டு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
சட்ட உதவி மற்றும் குற்றவியல்,குடியியல் (சிவில்) நீதித் துறைகளில் உடன்பாடு காண்பது பற்றியும்,சட்டவிரோதமாக தமது நாடுகளுக்குள் பிரவேசிப்பவர்களை வெளியேற்றுவது தொடர்பில் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வது பற்றியும் ஆராயப்பட்டது.
இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்புமையத்தின் பயன்பாடு பற்றி ஈரானின் வர்த்தகமன்றத்தினருக்கும்,தொழில் சார்நிபுணர்களுக்கும் அறியச் செய்யுமாறு அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். அதுபற்றி அணிசேரா நாடுகளின் அமைப்பிற்கும் தெரியப்படுத்துவது பெரிதும் பயனளிக்குமென்று ஈரான் அமைச்சர் அபிப்பிராயம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி,,அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏச்.எம் சல்மான் ஆகியோரும் அமைச்சர் ஹக்கீமுடன் ஈரான் சென்றுள்ளனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

0 comments :
Post a Comment