இஸ்லாமிய உலகின் முன்னனி நாடாக விளங்கும் துருக்கி அதன் அடுத்த தலைமுறைக்கான தலைவரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது. துருக்கியை ஒரு பிராந்திய வல்லரசாக மாற்றிய தற்போதைய பிரதமர் அர்துகான் அவர்கள் அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்தவுடன் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளார். புதிய தலைமைகளுக்கு இடம் வழங்குவதும் தனிநபர்களது செல்வாக்கில் கட்சியின் எதிர்காலம் தங்கியிருக்கக்கூடாது என்பதுமே அர்துகானின் இந்த முடிவுக்குக் காரணமாகும்.அதன்படி துருக்கியின் ஆளும்கட்சியின் அடுத்த தலைவராக வருவதற்கு தகுதிவாய்ந்தவர் யார் என ஆராய்ந்த அர்துகான் அவர்கள், அப்பொறுப்பைச் சுமக்க மிகவும் தகுதியான ஒருவர் தனது கட்சிக்கு வெளியில் இருப்பதை இணங்கண்டார். தனது கட்சிக்குள் இருக்கும் அனுபவசாலிகள் அறிஞர்களைவிடவும் துருக்கியின் சவால்களை எதிர்கொள்ள மிகத் தகுதியான தலைவராக நுஹ்மான் குதுல்மஸ் அவர்களை இணங்கண்டுள்ளார்.
நுஹ்மானும் அர்துகானும் முன்னால் நண்பர்கள். இருவரும் பேராசிரியர் நஜ்முதீன் அர்பகான் அவர்களின் மாணவர்கள். மில்லி கோரஸ் என்கிற அர்பகான் அவர்களது அரசியல் இயக்கத்தில் பயிற்றப்பட்டவர்கள். 2001 இல் சில கருத்துவேறுபாடுகள் காரணமாக அர்துகான் அவர்கள் அர்பகானின் கட்சியிலிருந்து விலகி தற்போதைய நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை அமைத்தார். அதன்மூலம் 2002 தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானார். அவரது ஆட்சிக்காலம் துருக்கியின் பொற்காலம் எனும் அளவுக்கு பாரிய மாற்றங்களை நாட்டில் நிகழ்திக்காட்டினார்.
நுஹ்மான் தொடர்ந்து அர்பகானுடனேயே இருந்து பின்னர் 2008 இல் சில கருத்துவேறுபாடுகள் காரணமாக பிரிந்து "மக்கள் குரல்" என்ற கட்சியை அமைத்தார். எனினும் அவரது கட்சி அதிக மக்கள் செல்வாக்கைப் பெறவில்லை. நுஹ்மான் அவர்கள் ஒரு முகாமைத்துவத் துறை பேராசிரியர், ஒரு சிறந்த அரசியல் போராளி. நுஹ்மான் துருக்கியின் மிகவும் செல்வாக்குமிக்க அறிஞர் குடும்பத்தில் பிறந்தவர். அர்துகான் அவர்கள் பலமுறை நுஹ்மானை தனது கட்சியில் இணையுமாறு அழைப்புவிடுத்திருந்தார். கடைசியாக இவ்வருடம் 2012 ஜூலையில் தன்னோடு இணையுமாறு அழைத்திருந்தார். அதனை ஏற்ற நுஹ்மான் குர்துல்மஸ் தனது மக்கள் குரல் கட்சியைக் கலைத்துவிட்டு அவரது ஆதரவாளர்கள் சகிதம் அர்துகானுடன் இணைந்தார்.
துருக்கியை வழிநடாத்தக்கூடிய திறமையும் அறிவும் நுஹ்மானிடம் இருப்பதை அவதானித்த அர்துகான் அவர்கள், நுஹ்மான் எதிர்க்கட்சி ஒருவராக இருந்தும் அவரைத் தனது கட்சிப் பொறுப்புக்கு நியமித்துள்ளமை அர்துகானின் சிறந்த தலைமைத்துவப் பண்பையும் இஸ்லாமிய பண்பாட்டையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
துருக்கியை இஸ்லாமியமயப்படுத்தும் அர்துகானின் திட்டங்களை நுஹ்மான் குர்துல்மஸ் தொடர்ந்தும் கொண்டுசெல்வார். அதன்மூலம் 2023 இல் துருக்கியை ஒரு உலக வல்லரசாக மாற்றும் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment