இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷன் நியூசிலாந்து அணிக்கெதிரான 4வது, 5வது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இது வரை மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ளது. இதில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிகளின் போது டில்ஷனுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. எனினும் வலி நிவாரணிகளின் உதவியோடு டில்ஷன் அப்போட்டியில் பங்குபற்றியிருந்தார்.
இதனையடுத்து, காயமடைந்துள்ள டில்ஷன் 4வது, 5வது போட்டிகளில் பங்குபற்றமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மூன்றாவது போட்டியில் இலங்கை அணி சார்பாக அதிரடியாக ஆடிய டில்ஷன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருந்தார்.
காயமடைந்துள்ள டில்ஷனுக்குப் பதிலாக அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் சாமர கப்புகெதர அணியில் இணைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment