கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லீம்களின் உடல்கள் நல்லடக்கம் தனிநபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்



பாறுக் ஷிஹான்-
கேபிள் இணைப்புகள் ஊடாக தொலைக்காட்சி உரிமம் உள்ள நிறுவனங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கோரானா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார ஒழுங்கமைப்புடன் கல்முனை மாநகர சபையின் 32 ஆவது அமர்வு புதன்கிழமை மாலை சபா மண்டபத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபை ஆரம்ப நிகழ்வாக சமய ஆராதனை மற்றும் 28.10.2020 அன்று இடம்பெற்ற கூட்டறிக்கையை அங்கீகரித்தல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முதல்வரின் உரையுடன் நிலையியற்குழுக் கூட்டத் தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
தொடர்ந்து சுகாதார திண்மக்கழிவகற்றல் குழுக்கூட்ட அறிக்கை தொடர்பில் குழுவின் தவிசாளரும் உறுப்பினருமான அப்துல் றஹீம் பஷீறா உரையாற்றியதுடன் அங்கீகரித்தல் விடயமாக சபை உறுப்பினர்களிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆராயப்பட்டது.
அத்துடன் இதனை தொடர்ந்து ஏனைய மாநகர சபை உறுப்பினர்களின் ஒழுங்கு பிரச்சினை மற்றும் முறையீடுகளிற்கான பதில்கள் இடம்பெற்றன்.

தொடர்ந்து கல்முனை மாநகர சபை எல்லைப்பகுதியில் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் கம்பங்கள் நடப்பட்டுள்ளதாகவும் அதற்கான வாடகை பெறப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து கருத்துரைத்த கல்முனை மாநகர சபை முதல்வர் மாநகர சபை எல்லைக்குள் பொருத்தப்பட்டிருந்த கேபிள் இணைப்புகள் உரிய நடைமுறைகளுடன் இயங்கி வருகின்றன. இதனை சட்டவிரோத கேபிள் இணைப்புகள் என கூறி அதை கடந்த காலங்களில் அகற்றுவதற்கு யாழ். மாநகர சபையும் நடவடிக்கை எடுத்திருந்தது.எனினும் நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.யாழ். மாநகர மேயர் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.தனியார் கேபிள் இணைப்புகள் தொலைத் தொடர்பு அணைக்குழுவிற்கு வருடாந்தம் கோடிக்கணக்கான கட்டணங்களை செலுத்தி உரிமங்களை பெற்று செயற்படுகின்றன.இதனால் மாநகர சபையின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக கம்பங்கள் நடப்பட்டுள்ளதை இங்கு கூற முடியாது .

மேலும் இணைப்பிற்காக அந்த நிறுவனம் நாட்டுகின்ற கம்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வருடம் தோறும் 300 ரூபா வாடகையாக செலுத்துகின்றனர்.மேற்குறித்த நிறுவனங்களிடம் வரி விதிப்பதென்றால் சபையில் தீர்மானம் எடுக்க வேண்டும்.அதற்கு எமக்கு அதிகாரம் இருந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.மாநகர சபை சட்ட வரையறைக்குள் தான் நாம் வரிகளை விதிக்க முடியும் என்றார்.
இதே வேளை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் அன்பு முஹைதீன் றோசன் அக்தர் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம்களின் உடல்கள் அவர்களது மத அனுஷ்டானங்களின் படி அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியதுடன் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விடயத்தில் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதாக சுட்டிக்காட்டி இருந்தார்.

இப்பிரேரணையை வழி மொழிந்து உரையாற்றிய கல்முனை மாநகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பீ.எம். ஷிபான்

எமது உரிமைகள் பற்றி குரல் கொடுத்தல் அவற்றில் எந்த ஒரு நியாயமுமில்லை என்ற விடயத்தை மிகவும் வெற்றிகரமாக மக்கள் மயப்படுத்துவதில் சிங்கள இனவாதிகள் வெற்றி கண்டுள்ளனர். சிங்கள இனவாதிகள் காலத்துக்கு காலம் ஆட்சியை கைப்பற்றவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் சிறுபான்மையினரையே துரும்பு சீட்டாக பயன்படுத்தினர். நடப்பிலும் அதனை வெற்றிகரமாக செய்து வருகின்றனர். முதலாவதாக தமிழர்களை காலத்துக்கு காலம் சீண்டி பார்த்தனர். அதன் வெளிப்பாடே முப்பது வருட கால யுத்தம். 2009 யுத்த வெற்றியின் பிற்பாடு கடந்த தசாப்தமாக முஸ்லிம்களையே இவர்கள் துரும்பு சீட்டாக பயன்படுத்தி வருகின்றனர் என கூறினார்.
தொடர்ந்து சாய்ந்தமருது சுயேற்சைக் குழு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம்களின் உடல்கள் அவர்களது மத அனுஷ்டானங்களின் படி அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கக ஜனாதிபதி பிரதமர் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு அறிக்கையூடாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்ததுடன் சபையில் ஏகமனதாக குறித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிளருமான றிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பிலும் அவரின் விடுதலை வேண்டி நோன்பு பிடித்து பிரார்த்தனை செய்த குறிப்பாக தாய்மார்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத்
நன்றி தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பீ.எம். ஷிபானும் எங்களுடைய கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சிறைவாசம் அனுபவித்து 37 நாட்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் அல்ஹம்துலில்லாஹ். உலகிலே புகழ்பூத்து சோபித்த தலைவர்கள் சிறை செல்வதொன்றும் புதிதான விடயமல்ல. ஆகவேதான் புரட்சிகரமான அரசியலை மெருகூட்ட சிறைவாசம் ஒரு அந்தஸ்தாக மாறிவிட்டது என குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் மாநகர சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட மின்குமிழ் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன் குறைந்த விலையில் தன்னால் மின்குழிழ்களை கொள்வனவு செய்து தர முடியும் என கூறி ஒழுங்கு பிரச்சினை ஒன்றினை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் தவறுகள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டுவது உறுப்பினர்களின் பொறுப்பு.எனினும் அதனை அணுகி அதற்கான பிரச்சினையை நாம் தீர்வு காண முற்பட வேண்டும்.சபையை குழப்பும் நோக்கத்துடன் ஈடுபட முயல கூடாது.குறித்த மின்குழிழ் தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
தொடர்ந்து கார்த்திகை மாதம் தமிழினத்திற்கு புனித மாதம் ஆகும் எனவும் மாவீர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரர் சந்திர சேகரம் ராஜன் குறிப்பிட்டதுடன் திண்மக்கழிவு ஒழுங்காக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதுடன் கல்முனை பன்சல வீதியில் ஒரு மாதத்திற்கு முன்னர் இடி மின்னல் காரணமாக சுற்றுச்சுவர் உடைந்து விழுந்துள்ளது எனவே இவ்விடயம் குறித்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என கூறினார்.
சபையின் ஒழுங்கு சில நேரங்களில் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் அதனை இனிமேலாவது சீராக கொணடு செல்ல முதல்வர் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஆரிகா காரியப்பர் மற்றும் உறுப்பினர் ஏ.ஆர் அமீர் கூறினர்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய முதல்வர் சபையின் ஒழுங்குகள் சீராக இடம்பெற சகல உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்களின் நலனை அக்கறை கொண்டு எமது சபை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை சகலரும் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறி சபை நடவடிக்கைளை முடிவிற்கு கொண்டு வந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :