போராடி பெற்ற வாய்ப்பை மனோ கணேசன் பணத்திற்காக தாரை வார்க்க மாட்டார்- கலாநிதி.வி.ஜனகன் உறுதி...!

பெரும் போராட்டத்துடன் பெறப்பட்ட கொழும்பு மாவட்டத்திற்கான இரண்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை தான் வீணடிக்க விரும்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

வெற்றியடைந்தாலும், தோல்வி கண்டாலும் காலங்காலமாக தன்னுடன் தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் விடா முயற்சியுடன் செயற்பட்டு வருகின்றார்.

எனினும் அவரின் முயற்சியை இனியும் வீணக்கக் கூடாது என்று கலாநிதி வி.ஜனகன் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற இளைஞர் அமைப்புகளுடனான சந்திப்பொன்றின் போது சுட்டிக்காட்டினார்.

வெறுமனே பணத்தை நோக்காகக் கொண்டு அரசியல் செய்வதென்றால் தமக்கு கிடைக்கும் பாராளுமன்ற வரப்பிரசாதத்தை பயன்படுத்தி சிங்கள உறுப்பினர்களைக் கூட தன்னுடன் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று கோடிக் கணக்கிலான நிதியை ஈட்டிக் கொள்ள முடியும்.

எனினும், மனோ கணேசன் அவ்வாறான விஷப் பரீட்சையில் ஈடுபடாமல் கொழும்பிலோ, வடக்கு கிழக்கிலோ தமிழ் பேசும் மக்களுக்கான இருப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ் பிரதிநிதிகளையே தெரிவு செய்து வருகிறார்.

இம்முறையும், கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், இரண்டு ஆசனங்களுக்கான வாய்ப்பை அவர் பெற்றுள்ளதன் காரணமாக அதற்கான முழுமையான ஆதரவை தான் வழங்கவுள்ளதாக கலாநிதி வி.ஜனகன் உறுதியளித்துள்ளார்.

இந்த வாய்ப்பையும் தான் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை மற்றும் உந்துதலின் பேரிலேயே ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி வி.ஜனகன், "முன்னதாக கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் ஒருவரையும், மேலும் ஒருவரையும் எமது கட்சியின் வேட்பாளராக போட்டியிட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் ஊடகத்துறை சார்ந்த ஒருவரையும், முன்னாள் அதிபர் முத்துகுமாரசுவாமியையும் பரிந்துரை செய்து அவர்களுக்கு நான் நிதி ரீதியான பங்களிப்பை வழங்குகிறேன் என்று கூறினேன் ஆனால் ஊடகத்துறை நண்பர் அவரது நிறுவனம் சார்ந்த பிரச்சினை காரணமாக விலகிய நிலையில் முன்னாள் அதிபர் ஓரளவு இணக்கப்பாட்டுக்கு வந்தார்.

எனினும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கு உடன்பாடு ஏற்படாத நிலையில், ஒரு இ​ளைஞரை இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில், எனது முன்னாள் அதிபரும், கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா அவர்களும் என்னை தேர்தலில் களமிறக்குமாறு யோசனை கூறியதன் விளைவான் நான் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன்.

அதன்பின்னர் மனோ கணேசன் எனது அலுவலத்திற்கு வந்து கலந்துரையாடலில் ஈடுபட்டு போது, 2004 ஆம் ஆண்டு மகேஸ்வரனும், நானும் பாராளுமன்றத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இந்த 2020 ஆம் ஆண்டுக்கான வாய்ப்பும் கிடைத்திருக்கின்றது.

எனவே, அந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த வாய்ப்பை வீணடிக்கும் பட்சத்தில் கொழும்புக்கான ஒரு தமிழ்த் தலைமைத்துவத்தை உருவாக்க முடியாமல் போய்விடும் அவர் இன்றும் வலியுறுத்தி வருகின்றார்.

அந்த தலைமைத்துவத்துக்கான ஒரு அடையாளமாக என்னை நியமித்ததாக அவர் கூறினார்.

அதேவேளை, எந்தவொரு கட்சியும் பணத்திற்காகத்தான் செயற்படுகின்றது. ரவி கருணாநாயக்க ஐ.தே.கவில் இணைத்திருப்பது பணத்திற்காகத்தான இல்லையா என்பதை நீங்களே அறிவீர்கள்.

பணம் என்பது கட்சி ஒன்றை நடத்துவதற்கு தேவையான ஒன்றுதான். அதனை ஜனகன் வழங்கினாலும் வேறு யார் வழங்கினாலும் ஒன்றுதான்.

ஆனால். மனோ கணேசன் மட்டும் பணத்தை நோக்காக கொண்டிருக்காமல் தமிழ் பிரதிநித்துவத்தை வலுப்படுத்தவே முயற்சித்து வருகின்றார் என்பது எனக்கு புலப்பட்டதன் பின்னர் நான் அவருக்கு ஆதரவை வழங்க எத்தனித்தேன்.

ஒரு முறை மாத்திரமன்றி மூன்று முறையும் மனோ கணேசனுக்கு தன்னுடன் இன்னொரு தமிழ் பிரதிநிதியை அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியில் வாய்ப்பை பெறுவதற்கு பலர் முயற்சித்தார்கள். அவர்களில் ஒருவருக்கு தனது ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் ஒரு ஆசனத்தை வழங்கி விட்டு பணமீட்டுவதற்கான மிகவும் இலகுவான வாய்ப்பு அவரிடம் இருந்த போதும், அதனை மறுத்துவிட்டார்.

2015 ஆம் ஆண்டும் அதேபோன்ற பிறிதொரு வாய்ப்பு அவருக்கு வந்தது. ஆனால் அந்த சந்தர்ப்பத்திலும் தமிழர் ஒருவரையே தெரிவு செய்தார்.

இந்த நேர்மையான குணத்தை மாத்திரமே நான் அவரிடம் அறிந்து கொண்டேன். அவரின் நோக்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதாக இருக்கவில்லை. எனவே இந்த முறையும் இரண்டு ஆசனங்களுக்கான வாய்ப்பை பெற்றுவிட்டதனால், அது உறுதி செய்யப்படும் பட்சத்தில் நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினேன்.

இதுதான் இந்த முறை பாராளுமன்றத் தேர்தலுக்கு நான் எவ்வாறு உள்வாங்கப்பட்டேன் என்பதற்கான வரலாறு.

எனவே, தேர்தல் களத்தில் இறங்கிய பின்னர் தமிழ் பேசும் மக்களிடையே ஒரு முற்போக்கான கருத்து ஏற்பட்டுள்ளதை உணரக்கூடியதாக உள்ளது" என்றும் கலாநிதி வி.ஜனகன் அந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -