தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்காக சில சிறுபான்மையின வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் - வேலுகுமார்


சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடி பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், இதற்காக திரைமறைவில் பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்காக சில சிறுபான்மையின வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கட்சி செயற்பாட்டாளர்களுடன் கண்டி அலுவலகத்தில் இன்று (25.06.2020) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" 1952 காலப்பகுதியில் சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து, உணர்வுகளைத் தூண்டியே பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரியணையேறியது. சில பௌத்த தேரர்களும் இதற்கு துணைநின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இதே பாணியிலான வியூகத்தையே ராஜபக்ச தரப்பு கையாண்டது.
ங்கள, பௌத்த மக்கள் மத்தியில் தேசியவாதம் தூண்டப்பட்டது. தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பான தவறான கருத்துகள் பரப்பட்டன. ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலையும் அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினர். எதை எதையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் செய்தே ராஜபக்ச தரப்பு தேர்தலில் வெற்றிபெற்றது.

ஆட்சிபீடமேறிய கையோடு ராஜபக்ச தரப்பு, இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களை ஒடுக்க ஆரம்பித்தது. அரசியல் உரிமைகள் வழங்கப்படாது என்ற தொனியில்கூட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் தலையாட்டி தமிழ் அரசியல் வாதிகள் சிலருக்கு பதவிகளை வழங்கிவிட்டு, தமிழர்களுக்கும் பதவிகளை வழங்கிவிட்டோம் என்ற விம்பத்தை உருவாக்கியது.

இன்று தொல்லியல் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் தமிழ்ப் பேசும் பிரதிநிதிகள் இல்லை. இதன் பின்புலம் என்னவென்பது சிறு பிள்ளைகளுக்குகூட புரியும். அத்துடன் கொரோனாவுக்கு மத்தியிலும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இப்படி சிறுபானமையின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தலைதூக்கியுள்ளன.சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் உணர்வுகளைத் தூண்டி, அவர்களின் வாக்குகளைப் பெற்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பேரினவாத ஆட்சியை அமைப்பதே அவர்களின் இலக்காகும்.

மறுபுறத்தில் சிறுபான்மையின மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் சதிவேலையும் அரங்கேறுகின்றது. இதற்கு சில தமிழ் பேசும் உறுப்பினர்களும் துணைநிற்கின்றமை வேதனையளிக்கின்றது. குறிப்பாக கண்டி உட்பட தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல தமிழ் வேட்பாளர்களை கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலும் களமிறக்கி வாக்குகளை சிதறடிக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாக்குகள் பிரிந்தால் ஒன்று இருக்கின்ற பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும், அவ்வாறு இல்லாவிட்டால் குறையும்.

கண்டி மாவட்டத்தில் எமது வெற்றி உறுதியானபோதிலும் அதனை குழப்பியடிக்க வேண்டும் என்பதில் இனவாதிகள் குறியாக இருக்கின்றனர். எனவே, தமிழ் பேசும் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். சிங்கள, பௌத்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் இந்த அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கும் வகையில் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்." - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -