இந்தக் குழுவினர் 2026 ஏப்ரல் 19ஆம் திகதி புறப்பட்டு, துருக்கியின் அங்காரா நகரில் ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறும் “Sri Lankan New Generation Journalism Training Program” எனப்படும் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையமான TİKA-வின் அனுசரணையில், சர்வதேச செய்தி நிறுவனமான TRT World மூலம் இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வேகமாக மாற்றமடைந்து வரும் ஊடக உலகின் புதிய போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாய்ப்பு, SLMMF அமைப்பின் ஸ்தாபகப் போஷகர் என்.எம். அமீன் மற்றும் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் ஆகியோரின் முயற்சியின் பலனாக கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கைக்கான துருக்கித் தூதுவர் Semih Lütfü Turgut அவர்களின் ஒத்துழைப்பில் இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணத்திற்கு முன் குழுவினரைச் சந்தித்த தூதுவர், அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இந்தப் பயிற்சி பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
இத்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட SLMMF தலைவர் எம்.பி.எம். பைறூஸ், உறுப்பினர்களிடமிருந்து திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களே இந்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய துருக்கித் தூதுவருக்கும், முழுமையான ஆதரவை வழங்கிய TİKA நிறுவனத்திற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
சர்வதேச அனுபவங்களையும் பயிற்சிகளையும் தனது உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலம், சமகால ஊடகத் துறையின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதில் SLMMF தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment