சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செயிட் அலிஸாஹிர் மெளலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவரது அரசியல் அலுவலகத்தில் சந்தித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் நாட்டின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி, அவரது வெற்றிக்காக முழுமையாக உழைப்பதற்கு திடசங்கற்பம் பூண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செயிட் அலிஸாஹிர் மெளலானா தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு ஏறாவூர் நகர பிதாவாகத் தெரிவான அவர், அதே ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்டு, முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஐ.தே.க சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கருணா அம்மானுக்கு உதவி செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிளவுக்கு துணைபோனார் எனும் குற்றச்சாட்டு எழுந்தபோது 2006 ஆம் நாட்டை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் புகுந்திருந்தார்.
அரசு- புலிகள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தாயகம் திரும்பிய அவர், 2011 ஆம் ஆண்டு ஏறாவூர் நகர சபை தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் ஏறாவூர் நகர பிதாவாக தெரிவாகியிருந்தார். பின்னர் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்ததுடன் நல்லாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.
இறுதியாக 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, அக்கட்சியில் இரண்டாவது இடத்திற்கு வந்திருந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஹாபிஸ் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததைத் தொடர்ந்து அலிஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment