இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும் .- டாக்டர் கியாஸ் சம்சுடீன்தொடர் 16

சுதேசிகளின் நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களும் நோய் பரவலும்

1950, மற்றும் 60 காலப்பகுதியில் (வன்னி பிரதேசத்தில்) நிகழ்ந்த பெருந்தொற்று காரணமாக அதிகரித்த இறப்புவிகிதத்திற்கு போதிய வைத்திய வசதிகள் இல்லாததுதான் காரணம் என ஒவ்வொரு வருடாந்த நிருவாக மருத்துவ அறிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டாலும் மருத்துவ வசதிகளை உயர்த்துவதற்கான தற்கான ஏற்பாடுகள் பெரிதாக நடைபெறவில்லை .
முன்னர் பூர்வீகவாசிகளிடையே மிகவும் பரவலாக இருந்தபெரியம்மை நோய் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் அதை பெற்றுக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் காட்டாத சிங்களவர்களிடையே மிகவும் குறைந்துவிட்ட போதும் , இந்த தடுப்பு நடவடிக்கையை பிடிவாதமாக ஏற்க மறுக்கும் முஸ்லிம்கள் மத்தியில், பெரியம்மை நோய் அவ்வப்போது பரவலடைந்தது . இந்தச் சமயங்களில் அவர்கள் புறநகர்ப் பகுதிகளில் பிராத்தனையில் ஈடுபட்டனர் என டாக்டர். டேவியின் அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் டாக்டர். டேவியின் அறிக்கையின் படி, "காலரா போன்ற தொற்றுநோய்கள் பொதுவாக இந்தியாவில் இருந்து மலபார் கூலிகள் மற்றும் மன்னாரைக் கடக்கும் யாத்ரீகர்களால் இறக்குமதி செய்யப்படுகின்றன, அங்குதான் அது எப்போதும் முதலில் பெருந்தொற்றாகும்.

முக்கியமாக இது யாழ்ப்பாண பூர்வீக மக்களிடத்தில் கொண்டு செல்லப்படுகிறது." என குறிப்பிடுகிறார்.

அந்த அறிக்கையின்படி 1864 இல் 3578 நோயாளிகள் இருந்தனர் ; 1865 இல், 2727; மற்றும் 1867 இல், 5926 இறப்புகளுடன் 10,541 நோயாளிகளும் காணப்பட்டனர்.

இதன் விளைவாக 1867 ஆம் ஆண்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, இது நோய் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க கடுமையான விதிமுறைகளைக் கொண்டிருந்த இந்த சட்டத்தினால் , எதிர்காலத்தில் வெளியிலிருந்து உள்நாட்டிற்குள் நோய் பரவுவதை தடுக்கும் என்று நம்பப்பட்டது.

இந்த "மலபார் கூலியாட்கள் வயிற்றுப்போக்கு மற்றும் அது தொடர்பான நோய்களுக்கு பெருமளவில் பலியாகின்றனர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் இதனால் இறக்கின்றனர்." மலேரியா காய்ச்சலும் அவ்வப்போது இவர்களின் வருகையின் போது காவிக்கொண்டுவரப்பட்டு அவர் களையும் சுதேசிகளையும் அழிக்கிறது." என குறிப்பிட்டிருந்தார்.

(Report of Dr. Charsley, Blue Books, 1867, vol. xlviii).

அரச மருத்துவக் கல்லூரி அமைக்கும் யோசனை.

சிலோனில் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த மருத்துவக் கல்லூரி அமைக்கும் யோசனை கவர்னர் சேர் ஜார்ஜ் ஆண்டர்சனுடையது (1852), எனினும் அது வெறும் யோசனையாகவே இருந்தது.

அதே சமயம் நாட்டையும் அதன் மக்களையும் பற்றிய நெருக்கமான அறிவைப் பயன்படுத்திய ஒரு பயனுள்ள அதிகாரி டாக்டர் எலியட்டின் மரணமும் நாட்டு மக்களுக்கு ஒரு பேரிழப்பாக இருந்தது .

மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தவோ அல்லது நடைமுறைக்குக் கொண்டுவரவோ வற்புறுத்தும் ஒரு சக்தியை இல்லாமல் செய்ததுடன் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு மருத்துவக் கல்லூரியை முன்னரே பெற்றிருக்ககூடிய வாய்ப்பு தவற விடப்பட்டிருந்தது.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததற்கு மருத்துவர்கள் பற்றாக்குறையும் மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக்கல்லூரி இல்லாததும் ஒரு காரணம் என்று எலியட்டும் வெகுவாக நம்பினார் .

"கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த மருத்துவ உதவியாளர்களில் மூவரை ஆசிரியர்களாக நியமிக்கலாம்.

உடற்கூறியல், இயற்பியல், மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேற்றியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்ட ஆய்வுகளுடன், ஆய்வுப் படிப்பு, உடற்கூற்று அறை, மருத்துவமனை, மருந்தகம் மற்றும் ஆய்வகம் ஆகியவற்றில் நடைமுறைக் கற்பித்தலைக் கொண்டிருக்கும் என்றும்,

சிவில் மற்றும் இராணுவத் துறைகளில் உள்ள தொழில்முறை வல்லுநர்களால் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்படலாம். மேலும்

சித்தியடைந்த அனைத்து பயிலுனர்களுக்கும் உரிமங்கள் License அல்லது டிப்ளோமாக்கள் வழங்கப்படும்.

படிப்பு நான்கு வருடங்களாக இருக்க வேண்டும். பன்னிரண்டு மாணவர்களை அரசு தனது சொந்த செலவில் பள்ளியில் பராமரிக்கலாம்.

ஆசிரியர்களின் சம்பளம், பன்னிரண்டு மாணவர்களுக்கான பராமரிப்பு மானியங்கள் மற்றும் பிற குழுவிற்கான ஆரம்ப செலவுகளுக்கு 500 பவுண் போதுமானது" என்ற கருத்தையும் எலியட் ஆளுநர் சேர் ஹென்றி வார்டின் காலத்தில் முன்வைத்திருந்தார்.

இது போன்ற ஒரு திட்டத்தின் கீழ், நாட்டின் பல்வேறு பொதுப் பணிகளுக்கு திறமையான மருத்துவப் பணியாளர்களை அரசு உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் . ஆனால் இத்திட்டம் காலனித்துவ அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட போது , அது கைவிடப்பட்டது.

ஆனால் கீட் மற்றும் மேயர் ஆகியோரை அரசு செலவில் கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பும் புதிய திட்டத்தையும் இந்தச் செலவுகளை இந்த இரண்டு அதிகாரிகளும் பணியில் அமர்த்திய பிறகு திருப்பிச் செலுத்துவார்கள் என்ற நிபந்தனையின் கீழ் இலங்கைக்கான ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

நிலையான ஸ்தாபனங்கள் கட்டளைச் சட்டத்தின் விளைவாக 1858 இல் மருத்துவத் துறை மறுசீரமைக்கப்பட்டது. முதன்மை அதிகாரியின் சம்பளம் ஆண்டுக்கு 750 பவுண் ஆகவும், இரண்டு காலனித்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் தலா 400 பவுண் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

கல்வி மற்றும் சுகாதாரம் இரண்டிலும், பொதுப் பணிகளுக்கான ஸ்கின்னர் அல்லது பெய்லி போன்ற ஆற்றல் மிக்க அதிகாரிகள் சேர் ஹென்றி வார்ட் இடம் இருக்கவில்லை.இதனால் அவர் அந்த யோசனைகளை கருத்திலேடுக்கவில்லை.

தொடரும்.......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :