இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும் .- டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 20

இலங்கையில் தாதியர் சேவையின் வரலாறு.

மன்னர் பாண்டுகாபயா (கி.மு. 437 முதல் 346) காலத்திலிருந்து நோயுற்றவர்களுக்காக மருத்துவமனைகள் காணப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்புகள் காணப்பட்டபோதும் தாதியர் சேவை பற்றிய நேரடியான குறிப்புகள் இல்லை.
உலகில் தாதியர் ஆரம்பத்தில் போர்க்களத்தில் அல்லது போர் கால சூழலில் சேவையாற்றும் அனுபவமிகு பெண்களாக இருந்தனர். அந்த வகையில் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (1820-1910) எனும் ஆங்கிலேயப் பெண்மணி அனைவராலும் அறியப்பட்டு அவர் ஞாபகார்த்தமாக தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் முதல் தாதியராக அறியப்படும் ருஃபைதா அல் அஸ்லாமியா (கி பி 620) என்பவர் தான் நபி ஸல் காலத்தில் போரில் அடிப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். தந்தை சஆத் (பனு அஸ்லம்) ஒரு மருத்துவர் என்பதால் மகள் ருஃபைதா இயல்பாகவே மக்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்வதில் மிக்க ஆர்வமுடையவராக இருந்தார் என சொல்லப்படுகிறது .

முதன்மையாக படையினருக்காக,1800 இல் நிறுவப்பட்ட இலங்கையின் முதல் ஆங்கில மருத்துவமனை பின்னர் ஆங்கிலேயர்களுகாகவும் அவர்களுக்கு வேலை செய்த பொதுமக்களுக்காகவும் 1820 இல் திறக்கப்பட்டது (டி சில்வா, 1978).
1858 இல், இலங்கையில் பொது சுகாதாரத்தைப் பேணுவதற்காக சிவில் மருத்துவத் திணைக்களம் உருவாக்கப்பட்டபின் உருவாக்கப்பட்ட

முதல் இரண்டு மகப்பேறு மருத்துவமனைகளான டி சொய்சா மற்றும் லேடி ஹவலோக் என்பன தாதியர்களுக்கான தேவையை நன்கு உணர்த்தியது.

மருத்துவமனை அடிப்படையிலான தாதியர் பயிற்சிக் கல்வி

கொழும்பு பொது வைத்தியசாலையில் தாதியர் கல்லூரியைத் தொடங்கும் நோக்கத்திற்காக, ஒரு இயக்குனரும் சில தாதியர்களும் இங்கிலாந்திலிருந்து 1878 இல் பிரிட்டிஸ் சிலோனுக்கு வந்தனர்.

அக்டோபர், 1878 இல் பொது மருத்துவமனையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட தாதியர் கல்லூரிக்கு படித்த ஒழுக்கமான இளம் பெண்கள் மாணவிகளாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

மருத்துவமனைக்கு தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் பல சிரமங்களை எதிர்கொண்டது. இறுதியில், கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளை பயிற்சி செவிலியர்களாக சேர்ப்பதில் ஆர்வம் காட்டப்பட்டு பணியமர்த்தப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு ஊதியம் போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகளை அரசு முழுமையாக பொறுப்பேற்றது. ஆரம்பகால தாதியர்களின் பெயர்கள் ரெவெரன்ட் சிஸ்டர்(மரியாதைக்குரிய சகோதரி), மதர் சூப்பீரியர், ரெவெரன்ட் மதர், நெர்சிங்க் சிஸ்டர், நெர்ஸ், ஸ்டறுவர்ட், என பல்வேறு வகையிலும் தரத்திலும் இருந்தது.

மேலும் சில வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி மற்றும் ஏழைகளின் இலவச நோயாளர் விடுதி என இரு வகை விடுதிகள் காணப்பட்டது போலவே, ஏழைகளுக்கான தாதியர், பணம் செலுத்துபவர்களுக்கான தாதியர் என இருவகை தாதியர்களும் காணப்பட்டனர்.
ஆரம்பத்தில் தாதியர்களுக்கு எந்த தொழில்நுட்ப பயிற்சியும் அளிக்கப்படவில்லை.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 14 மணி நேரம் கொண்ட பகல் நேர ஷிப்ட் மற்றும் 10 மணி நேரம் கொண்ட இரவு ஷிப்ட் என வேலை இரு ஷிப்ட் வேலை நேரம் இருந்தது.
மொத்த நோயாளிகளின் மற்றும் தாதியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கடமையிலிருந்த தாதியர் அளவு இருந்தது. அநேக வைத்தியசாலைகளில் இரவு நேர கடமையில் தாதியர் இருக்கவில்லை.



தாதியர்களாக பயிற்சி பெற்ற கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளை கொண்ட பிரிவினரே ஏழை நோயாளர் விடுதிகளுக்கு பொறுப்பாக விருந்தனர். Mother Superior அல்லது Rev. Mother அத்தியட்சகர் Superintendent தரத்தில் காணப்பட்டனர். அதற்கு அடுத்த தரத்தில் Matron பதவி காணப்பட்டது. பொதுவாக செவிலியர்களை சிஷ்டர் என அழைக்கும் வழமை இங்கிருந்துதான் வந்திருக்கிறது.
அந்தவகையில் இலங்கையில் "மருத்துவமனை அடிப்படையிலான தாதியர் பயிற்சிக் கல்வி" யானது பிரிட்டிஷ் தாதியர் தொழிற்பயிற்சி மாதிரியை தழுவியது.
1900 களில் மருத்துவமனை அடிப்படையிலான தாதியர் மற்றும் மருத்துவமாது பயிற்சி நெறியின் ஒரு பார்வை

1900 ஆம் ஆண்டுக்கான முதன்மை சிவில் மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவமனைகளின் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அவர்களின் நிர்வாக அறிக்கையின் பிரகாரம் கொழும்பு கண்டி குருநாகல் ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றிய திருச்சபையை சேர்ந்த செவிலிய சகோதரிகளில் (Nursing Sisters) மூவர் அங்கிலிகன் திருச்சபையையும் 17 பேர் கத்தோலிக்க திருச்சபையையும் ஒருவர் சுப்பிரின்டன் தரத்திலும் இன்னும் 24 பேர் மேற்றன் தரத்திலும் 47 பேர் தாதியர் தரத்திலும் காணப்பட்டனர்.

மேலும் பெண்களுக்கான லேடி ஹேவ்லாக் மருத்துவமனையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ,டாக்டர் மிஸ் எம். என். ஷர்மன், M B(Lond) .

லேடி ஹேவ்லாக் நர்சிங் பயிற்சி பாடசாலை மற்றும் மருத்துவ மனை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"1900ம் ஆண்டில் 21 கட்டணம் செலுத்தும் நோயாளிகள் இருந்தனர், இவர்களில் 10 பேர் ஐரோப்பியர்கள், 6 பேர் பர்கர்கள் மற்றும் 5 சிங்களவர்கள். இது முன்னைய ஆண்டைவிட மூன்றில் ஒரு வீத அதிகரிப்பைக் காட்டுகிறது(1899 இல் 14 பேர் ).
மேலும் டாக்டர் மிஸ் ஆலிஸ் டி போயர், எல்.ஆர்.சி.பி.(Edin) இங்கிலாந்திலிருந்து திரும்பி, 1900 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஹவுஸ் சர்ஜனாக தனது நியமனத்தைத்தொடர்ந்தார் எனவும், மேலும் ஜூன் 15, 1900 அன்று, மிஸ் லூயிசா வோலன் மேட்ரனாக மீண்டும் பணியில் சேர்ந்தார்". என்றும் தெரிவிக்கிறார்.
அதேவேளை டி சொய்சா மகப்பேறு இல்லத்தின் மருத்துவ அத்தியட்சகர் டொக்டர். எம். சின்னத்தம்பி, எம்.டி., (புரூக்ஸ்). எப்.ஆர்.சி.எஸ். அவர்களின்1900 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில்

"மருத்துவச்சிகளுக்கான பயிற்சி நிறுவனமாக இந்த மருத்துவமனை 1900 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் முந்தைய ஆண்டுகளில் ஐரோப்பியர்கள், பர்கர்கள் மற்றும் பூர்வீகவாசிகள் சம அடிப்படையில் அனுமதிக்கப்பட்டனர்" என்கிறார்.
கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் ஐரோப்பியர்கள் மற்றும் பர்கர்கள், பயிற்சியின் பின் "பெண்களுக்கான மாதாந்திர செவிலியர்"(Ladies Monthly Nurse) என்ற சான்றிதழ் பெறுவர்களின் கட்டணங்கள் காரணமாக ஏழை வகுப்பினர் அவர்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டது என்கிறார் .

இது ஒரு வகையில் இந்த நிறுவனத்தை நிறுவிய டீ சொய்சா என்பவரின் நோக்கங்களுக்கு எதிரானது, ஏழை வகுப்பினருக்கு மட்டுமே கிடைக்கும் பூர்வீக மருத்துவச்சிகளின் அனுமதி எண்ணிக்கையை அதிகரிக்க

பூர்வீக செவிலியர்களுக்கு உதவித்தொகையை ஒதுக்குவது நல்லது என்று கருதப்பட்டது.
மேலும் அவரது அறிக்கையில் "ஐரோப்பிய மற்றும் பர்கர் மருத்துவச்சி மாணவர் போன்று குறைந்தபட்சம் ஒரு சிறிய தொகையான ரூ. 50 நுழைவுக் கட்டணமாகவும், ரூ. 10 சான்றிதழ் கட்டணமாகவும் பரிட்சாத்த முறையில் அறவிட தீர்மானிக்கப்பட்டு,

இந்த முறை மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது, இந்த பத்து மாதங்களில் ஆறு உதவித்தொகை பெறும் மருத்துவச்சி மாணவர் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் நான்கு பேர் தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சான்றிதழ்களைப் பெற்றனர்". என குறிப்பிடுகிறார்.



பயிற்சி நிறுவனத்தின் பணியாளர்களாக ஒரு மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் ஒரு மேட்ரன் காணப்பட்டனர் என்கிறார் .



மேற் குறிப்பிட்ட அறிக்கை மூலம் அன்றைய மருத்துவ மனை சார்ந்த பயிற்சி நெறி பற்றி ஓரளவு அனுமானிக்க முடிகிறது.

நிறுவனமயமாக்கப்பட்ட தாதியர் பயிற்சி

முதல் "நிறுவனமயமாக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் கொண்ட தாதியர் பயிற்சி" ஆனது 1939 இல் கொழும்பில் சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைக்கப்பட்ட தாதியர் பாடசாலையை நிறுவியதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் யாழ்ப்பாணம் கிறீன் வைத்தியசாலையில் சேவையாற்றிய அமெரிக்க மிஷனரி மருத்துவர்களின் அமெரிக்க துணைவியர் சிலரால் 1900 களில் மானிப்பாயில் நிறுவன மயப்படுத்தப்பட்ட "வில்லியம் எஃப் பியர்ஸ் தாதியர் பாடசாலை" நிறுவப்பட்டதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஞாபகப் படுத்துதல் இங்கு பொருத்தமென நினைக்கிறேன்.

இது கொழும்பில் 1939 இல் நிறுவப்பட்ட நிறுவன மயப்படுத்தப்பட்ட தாதியர் கல்லூரியை விட ஐந்து தசாப்தங்களுக்கு முந்தியது.

நிறுவன மயப்படுத்தப்பட்ட தாதியர் கல்லூரி திட்டம் முந்தைய மருத்துவமனை அடிப்படையிலான பயிற்சியை விட அந்தஸ்து மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மாணவர் தொகையை அதிகரிக்க வழிசெய்தது .
மூன்று ஆண்டு பொது தாதியர் பாடத்திட்டமானது, மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மனநல மருத்துவம் மற்றும் தாய்வழி நர்சிங் போன்ற பாரம்பரிய மருத்துவ மாதிரி பாடங்களை அடிப்படையாகக் கொண்ட 20 கோட்பாட்டுப் பாடங்களைக் கொண்டுள்ளது.

தற்போது, ​​இலங்கை முழுவதிலும் உள்ள 11 தாதியர் பாடசாலைகள் சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் 3 வருட பொது தாதியர் கல்வித் திட்டத்தை வழங்குகின்றன, மேலும் ஒவ்வொரு வருடமும் 1,000க்கும் மேற்பட்ட தாதியர்கள் இந்தத் திட்டத்தை நிறைவு செய்கிறார்கள்.

ஆரம்பத்தில் தாதியர் பயிற்சிக்கு மேலதிகமாக மருத்துவிச்சி ( மருத்துவ மாது) பயிற்சி திட்டமும் தனியாகவும் இணைந்தும் இருந்தன.

மருத்துவமனை அடிப்படையிலான, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தாதியர் மற்றும் மருத்துவச்சி பயிற்சி திட்டங்கள் இலங்கையில் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் பங்களித்தன என டாக்டர் ஊரகொட குறிப்பிடுகிறார்.
தற்போதைய அதிக தொகையில் தாதியர் பணியாளர்கள் காணப்பட்டும் கூட, இலங்கையில் தாதியர்களின் கடுமையான பற்றாக்குறை உள்ளது.

இந்த பற்றாக்குறை இலவச சுகாதார சேவையின் தரத்தில் குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது .

1997 இல், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையின் 11வது தாதியர் கல்லூரியாக தேசிய தாதியர் கல்லூரியை நிறுவியது.

தாதியர் கற்கைக்கான கல்வித்தரம்

இலங்கையை பொறுத்தவரை தாதியர் பயிற்சிக்கு தொடக்க காலத்தில் எந்தவொரு கல்வித்தரமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பின்னர் அது படிப்படியாக உயர்த்தத்தப்பட்டு சாதாரண தர சித்தி என வரையறுக்கப்பட்டு,

1992 இல் க.பொ.த (உயர்தரமாக) உயர்த்தப்பட்டது.

தற்போது உயர்தர விஞ்ஞான பிரிவில் சித்தியடைந்த மாணவர்களை மாத்திரமே உள்வாங்கி அவர்களுக்கு 3 வருடம் தாதியர் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி அளித்து தேர்ச்சி பெற்று வெளியேறுபவர்களுக்கு முன்னர் வழங்கிய சாதாரண சான்றிதழுக்கு பதிலாக தற்காலத்தில் "டிப்ளோமா" சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இதேவேளை தற்போதுள்ள தாதியர் பாடத்திட்டம், 1995 இல் திருத்தப்பட்டு 1999 இல் அங்கீகரிக்கப்பட்டது. அனைத்து தாதியர் பாட புத்தகங்களும் ஆங்கிலத்தில் கிடைத்தாலும், தாதியர் பள்ளிகளில் போதனைகள் இன்னும் சிங்கள மற்றும் தமிழ் மொழியிலேயே நடைபெறுகிறது. இந்த நிலைமை இலங்கை தாதியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் மற்றும் தாதியர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக காணப்படுகிறது (டி சில்வா, 1978).
இதை கருத்தில் கொண்டு தாதியர் கல்வியை பல்கலைக்கழக மட்டத்திற்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மைக்காலமாக Z ஸ்கோர் வெட்டுப்புள்ளி மூலம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவதனாலும் எதிர்காலத்தில் அனைத்து தாதியர் கல்லூரிகளையும் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தி அனைத்து தாதியருக்கும் BSc (Nursing) பட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாலும் எதிர்காலத்தில் அனைத்து தாதியரும் பட்டதாரி தராதரத்தை கொண்டிருப்பர் என எதிர்பார்க்கலாம்.

பொதுவாக பெண்களுக்குரிய தாதியர் சேவையில் ஒரு சிறு தொகை ஆண்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. அந்த சிறிய தொகையில் பெரும்பகுதியை நமது பிராந்தியத்திலுள்ள ஆண் தாதிய உத்தியோகத்தினர் இடம்பிடித்திருப்பது நமது பிரதேச வைத்தியசாலைகளில் பெண் தாதிய உத்தியோகத்தினரின் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாகவும் அமைகிறது. மற்றைய பிரதான காரணமாக எமது பிரதேச பெண்கள் இரவுநேர கடமையில் ஈடுபட நாட்டமின்மையாகும். இது பட்டதாரி அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

எமது பிராந்தியத்தை பொறுத்தவரையில் எமது அட்டாளைச்சேனை மண்ணை சேர்ந்த M.A.M. சுபைடீன் (RN) (லங்கா மெடிக்கல் ) 70 களின் தொடக்கத்திலும் அப்துல் ஹமீது தாஜுன்நிஸா(RN) 80 களின் தொடக்கத்திலும் பதிவு செய்யப்பட்ட தாதிய உத்தியோகத்தினராக கடமையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது . இவர்கள் இருவரும் யாழ்ப்பாண தாதியர் கல்லூரியில் கல்வி பயின்றவர்கள்.
தொடரும்......

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :