வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்புமுனீரா அபூபக்கர்-
வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டன

இதற்கமைய வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.இந்த
நீர் சுத்திகரிப்பு நிலையதிட்டம் வடக்கு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் அவர்கள் சுத்தமான குடிநீருக்காக இதுவரை காலமும் அனுபவித்து வந்த துயரங்களுக்கும் முடிவு கட்டியுள்ளது.

வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச்சிக்குளம், வவுனியா தெற்கு ஆகிய செயலாளர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

"அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்" என்ற அரசாங்கத்தின் எண்ணக் கருவின் கீழ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின்படி அந்த அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவு சமூக நீர் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டன. இதன் மொத்த திட்ட மதிப்பு 211 மில்லியன் ரூபாவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில், முதல் கட்டமாக, 26 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 16,480 குடும்பங்கள் பயனடைவார்கள்.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டவை என்று மீள்குடியேற்ற பிரிவு தெரிவிக்கிறது.

நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிப்பு செய்யும் போது நீரிலிருந்து அதிக உப்புகளை நீக்குகிறது. நனோ சுத்திகரிப்பின் மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும் நீக்கப்படும்.

இத்திட்டத்தை பெற்றுக்கொண்ட சில கிராமங்களின் மக்கள் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்துகையில்,


உருத்திரபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரான ராமச்சந்திரன் இத்திட்டம் தொடர்பில் கூறுகையில்,

நாங்கள் இந்தக் குடிநீர் திட்டத்தை நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.இத்திட்டம் 2021 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது கிட்டத்தட்ட 4 மில்லியன் ரூபா நிதிச் செலவில் இந்த நிர்மாணப் பணி ஆரம்பிக்கபட்டு இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது.என்னைப் பொறுத்தளவில் உருத்திரபுரம் கிழக்கில் குடிநீர் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினை.
கிணறுகளிலே நீர் இருந்தாலும் கோடை காலங்களில் குடிக்கக் கூடிய சூழலில் இந்த நீர் இருப்பதில்லை.நீண்ட தூரங்களுக்கு மக்கள் சென்று அந்த நீரைப் பெற்று வரக் கூடிய சூழலே இப்போதும் இருந்து வருகிறது.

இன்று அந்த நிலைமை மாற்றமடைந்து மக்கள் அந்த இடத்திலேயே நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இத்திட்டம் மக்களிடம் கையளிக்கப்படக்கூடிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி க்கு நாங்கள் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அதே நேரத்தில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நாங்கள் இந்த இடத்தில் மனமார்ந்த நன்றிகளைச் சொல்ல வேண்டும்.ஏனெனில் அவருடைய கடும் முயற்சியினால் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வு க்கும் இந்த இடத்தில் விசேட நன்றிகளையும் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

செல்வா நகர் முதியோர் சங்கத்தின் செயளாலரான க. பூமிநாதன் கூறுகையில்,

தற்போது இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செல்வா நகர் பின்தங்கிய கிராமத்திற்கு ஏற்படுத்தித் தந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாவட்ட செயலகம், பிரதேச செய்லகம், ஏனைய கிராமிய மட்ட அமைப்புகளுக்கும் இத்திட்டத்திற்கு உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது சங்கத்தின் சார்பிலும் செல்வா நகர் மக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டம் கிடைக்கப் பெற்றது மிகவும் மகிழ்ச்சி தருகின்றது.இங்கு சுத்தமான நீர் இல்லாததால் இப்பகுதி மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் இத்திட்டத்தின் மூலம் நீங்கிவிடும் என்றார்.
பெண்கள் RDS இல் பொருளாளராக இருக்கும் சுந்தரராசா அகல்யா தனது கருத்தை முன் வைக்கையில்,

எங்களது கிராமத்தில் நிறைய பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் குடிநீர் பிரச்சினைதான். இந்த நனோ தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்பட்ட பில்டரின் மூலம் இந்த நோய்க்கான தீர்வையும் காணலாம். எங்கள் மக்கள் இந்த நோயிலிருந்து விடுபட இது ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வழிகாட்டலின் கீழும் மற்றும் திலீபன்எம்.பி., ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் மூலம் எங்களுக்கு 40 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட இந்த நிதித் தொகையினை எங்களது இந்தக் கிராமத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். இது பெரியளவில் எங்கள் கிராம மக்களுக்கு ஒரு உதவியாக அமையும் .எனவே இதற்கு உதவிய அனைவருக்கும் இந்த நேரத்தில் மக்கள் சார்பாகவும் பிரதேச செயலகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

செல்வா நகர் செல்வ செழிப்பு நீர் வழங்கல் சங்கத்தின் தலைவர் மு. சிவபாலன் கூறுகையில்,
அனைவருக்கும் குடிநீர் வழங்கல் தேசிய திட்டத்தின் கீழ் எங்களுடைய செல்வா நகர் செல்வச் செழிப்பு நீர் வழங்கள் சங்கத்துக்கு பாரிய இத்திட்டத்தை வழங்கிய இன்றைய அரசாங்கத்துக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அது போல இந்தத் திட்டத்துக்கு எங்களுக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழஙகிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் இந்த வேளையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள் . அதற்கு ஒப்பாக இன்று முதல் எங்கள் கிராம மக்கள் அசுத்த குடிநீரினால் ஏற்படும் நோய் களில் இருந்து விடுபட்டு வாழ்வார்கள் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :