2024 புதிய ஆண்டுக்கான அலுவலக கடமை செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



முனீரா அபூபக்கர்-

@ கோவிட்-19 பரவல் மற்றும் அதன் விளைவாக உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து சோர்ந்துபோயிருக்கும் நாட்டையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மீட்பதற்கான கடினமான சவாலை முறியடிக்க அனைத்து மக்களும் சரியான புரிதலுடன் செயல்பட வேண்டும்...


@ நாட்டை முதன்மைப்படுத்தி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முக்கியமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி...


@ புனரின் நகர அபிவிருத்தி, மலையக தசாப்தம் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தித் திட்டம், இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகள் நிர்மாணம், பண்டாரவளை மொத்த காய்கறி நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் பெரிய மிஹிந்தலை அபிவிருத்தி போன்ற திட்டங்கள் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும்...


கோவிட் -19 பரவல் மற்றும் அதன் விளைவாக உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து சோர்ந்துபோயிருக்கும் நாட்டையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மீட்பதற்கான கடினமான சவாலை வெற்றிகொள்வதற்கு அனைத்து மக்களும் சரியான புரிதலுடன் செயற்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அந்த வேலைத்திட்டத்தில் நாட்டை முதன்மைப்படுத்தி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முக்கியமான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருக்கும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லை, செத்சிறிபாயவிலுள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (1) நடைபெற்ற விழாவிற்கான வாழ்த்துச் செய்தியை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2024 புதிய ஆண்டுக்கான அலுவலக கடமை செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடும் அதன் மக்களும் பல கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் அபாயங்களை எதிர்கொண்டனர். இந்த நிலைமைகள் இயல்பு நிலைக்கு வர சிறிது காலம் எடுக்கும். மக்கள் மிகவும் சிரமப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இன்று நீங்கள் எதிர்கால சந்ததியினருக்காக துன்பப்படுகிறீர்கள். அரசாங்கம் என்ற வகையில், இந்த ஆபத்தான நிலைமை மிகக் குறுகிய காலத்தில் மறைந்துவிடும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நாட்டின் மற்றும் மக்களின் எதிர்கால வளர்ச்சிக்காக சிறப்பான பணியை செய்து வருகிறது. குறிப்பாக இது நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பணியாற்றும் பொறுப்பான நிறுவனம். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த அமைச்சுக்கு 23,412 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வீடமைப்பு அபிவிருத்திக்காக 7,650 மில்லியன் ரூபாவும் கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புக்காக 7,790 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. புனரின் நகர அபிவிருத்தி, மலையக தசாப்த ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம், இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை நிர்மாணித்தல், பண்டாரவளை மொத்த மரக்கறி நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் பெரிய மிஹிந்தலை அபிவிருத்தித் திட்டத்திற்காக 11,450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் மலையகப் பகுதிகளில் பொது உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, மலையக தசாப்தம் போன்று பத்து வருட பல்நோக்கு கிராம அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. அதற்காக 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்கள் உட்பட நாட்டின் 10 மாவட்டங்களில் 89 பிரதேச செயலகங்களில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

திட்டங்களுக்கும் முதலீடுகளுக்கும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. அதை திறம்பட செய்ய ONE STOP UNIT யை ஆரம்பித்தோம். ஒன்லைன் முறைகள் மூலம் தொடர்புடைய திட்டங்களுக்கான ஒப்புதல் அங்கு செய்யப்படுகிறது. இதற்காக 33 நிறுவனங்களை உள்ளடக்கிய விடயத்துக்குப் பொறுப்பான குழு நியமிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டுக்குள் இலங்கை முழுவதிலும் உள்ள அபிவிருத்தி அதிகார வரம்புகளில் இதனை நடைமுறைப்படுத்த நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா பின்வருமாறு தெரிவித்தார்.

நாங்கள் ஒரு சவாலான ஆண்டை எதிர் கொண்டோம். இன்று நாம் மற்றொரு சவாலான ஆண்டில் நுழைகிறோம். கோவிட் வைரஸ் பரவல் காரணமாக, நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அந்தச் சவால்களை நாம் இன்னும் எதிர்கொண்டு வருகிறோம். எங்களுக்கு நல்ல அரசியல் தலைமை கிடைத்தது. எனவே, நாடு மற்றும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விடை காண அரச ஊழியர்களாகிய நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.நெருக்கடியான காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்ள உழைத்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, தேனுக விதானகமகே, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :