விவசாயிகள் விவசாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.எப்.முபாரக்-
லங்கை மக்களின் பிரதான விவசாயச் செய்கையாக நெல் வேளாண்மை காணப்படுகின்றது. இந்நாட்டின் இருபத்தைந்து மாவட்டங்களிலும் வெவ்வேறு வகையான விவசாயச் தொழிற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் நெல் வேளாண்மைச் செய்கைகள் பிரதானமாகக் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் நெல் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.

இதிலும் இரண்டு போகங்கள் காணப்படுகின்றன. மழையை நம்பி வேளாண்மை செய்வது பெரும் போகம் எனவும், குளத்து நீரை நம்பிய வேளாண்மை சிறு போகம் எனவும் அழைக்கப்படுகின்றது. பெரும் போகம் பெரும்பாலும் நவம்பர் தொடக்கம் ஏப்ரல் வரையிலும் சிறு போகம் மே தொடக்கம் ஒக்டோம்பர் வரையிலும் மேற்கொள்ளப்படும்.

திருகோணமலை மாவட்டத்தில் பெரும் போகம் 42,642 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும், சிறுபோகம் 24,256 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் செய்கைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு விவசாயி மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொண்டு அதை அறுவடை செய்ய சுமார் மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகின்றன. இக்காலப்பகுதியில் அந்த விவசாயி பல்வேறு வகையான துயரங்களை அனுபவிக்கின்றான்.

வரம்பு செதுக்குதல் முதல் நெல் அறுவடை வரை பல ரூபாய் செலவு செய்யப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அறுவடையின் போது கிடைக்கும் இலாபங்களோ மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குப் பல்வேறு வகையான பௌதீக, அரசியல், இயற்கை காரணங்கள் காரணிகளாக உள்ளன.

நெல்லுக்கான விலையில் தளம்பல்:-

தற்போது நாடு முழுவதிலும் சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் போன்ற மாவட்டங்களில் அறுவடை நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் சம்பா, சிவப்பு, பச்சை, கட்டை சிவப்பு போன்ற நெல் வகைகள் காணப்படுகின்றன. இதில் ஒவ்வொன்றுக்கும் அரசாங்கம் வெவ்வேறு வகையான விலைகளை நிர்ணயித்துள்ளது. ஆனால் அரசாங்கம் நிர்ணயித்த விலைகளுக்கு விவசாயிகள் வழங்குவதற்கு முடியாத நிலையில் உள்ளார்கள்.

காரணம் முதலீடுகளைக் கூடுதலாகச்செலவு செய்து பெற்றுக்கொள்ளும் இலாபமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் முதலாளிமார்களின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பத்து ரூபாவையேனும் அதிகரித்து நெல்லை விவசாயிகளிடமிருந்து சுரண்டுகின்ற தன்மை தற்போது மேலோங்கி காணப்படுகின்றது.

இதில் சில விவசாயிகள் வயல் வேலைக் காலங்களில் வயலில் உழுவதற்கும் வரம்பு கட்டுவதற்கும், நெல் விதைப்பதற்கும் கிருமி நாசினிகளை பெற்றுக்கொள்ளுவதற்கும், பசளை வாங்குவதற்கும் வயல் அறுவடை செய்வதற்கும் என பல இலட்சங்களை நெல் முதலாளிமார்களிடமே பெற்றுக்கொள்ளுகின்றார்கள். இதனால் அறுவடை செய்கின்ற நெல்லை முதலாளி மார்களுக்கு கூடிய விலைக்கோ குறைந்த விலைக்கோ வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றார்கள்.

இந்த அவல நிலை மாற்றியமைக்கப்படல் வேண்டும். விவசாயத்தில் முதலாளிமார்களின் போட்டித்தன்மையை குறைக்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பசளை பிரச்சினைகள்:-

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்னமும் விவசாயிகள் பதாகைகளைத் தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார்கள். பசளையைப் பெற்றுத்தருமாறும் நெல்லுக்கான உத்தரவாத விலைகளைக் கோரியும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு சலுகைகளை பெற்றுத்தருமாறும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

செயற்கைப் பசளை வகைகளையும் செயற்கையான கிருமி நாசினி பாவனைகளையும் மேற்கொண்டு பழக்கப்பட்ட விவசாயிகள் திடீர் என இயற்கை உரங்களில் விவசாயம் மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளமை விவசாயத்தைப் பாழாக்கும் செயற்பாடுகள் என விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.
இயற்கையான பசளைக்கு வீட்டுத் தோட்டங்கள் சிறியளவிலான பயிர்ச் செய்கைகளுக்குச் சாத்தியமாகும். ஆனால் ஏக்கர் கணக்கில் வேளாண்மை செய்கைக்கு இயற்கையான உரப்பயன்பாடு ஒரு போதும் சிறந்ததாக அமையாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விளைச்சல் குறைவு வேளாண்மை மஞ்சளாக மாறுதல் வளர்ச்சியின்மை நோய்த்தாக்கங்கள் அதிகரிப்பு எதிர்பார்க்கின்ற விளைச்சல் கிடைக்காமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதிகாரிகளின் அசமந்தப்போக்கு:-

விவசாயிகள் விவசாயத் துறையில் பல்வேறு வகையான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு அவ்வப்போது எதிர்கொண்டு வருகின்றார்கள்.ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குஉரிய நேரத்தில் உரிய முறையில் தீர்வுகள் கிடைக்கப்பெறுவதில்லை.விவசாயத்துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களத்திற்கு சென்று தீர்வு பெற்றுக்கொடுப்பது குறைவு உதாரணமாக கிருமிநாசினி பிரச்சினை, பயர்களிள் புழுக்களின் தாக்கம்,மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றறபோதிலும் அதற்கான தீர்வுகளோ வழிமுறைகளோ பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை எனவும் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் மற்றும் குரங்குகளின் தொல்லை:-

விவசாயத்துறையில் மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.கடந்த வருடத்தில் நாட்டில் 45க்கும் மேற்பட்ட உயிர்கள் யானைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காடுகளை மனிதன் அழித்து வேளாண்மைச் செய்கைகள் மற்றும் தோட்டம்,சேனைப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதால் மனிதன் யானைத் தாக்குதலில் உயிரிழக்கின்றான்.
அதேபோன்று தான் நாட்டின் பேசுபொருளாக குரங்குகளின் தொல்லை காணப்படுகின்றது,குரங்குகள் பயிர்ச்செய்கைகள் செயற்பாடுகளுக்கு மட்டுமின்றி கிராமம் மற்றும் நகர்ப் பகுதிகளிலும் புகுந்து பல்வேறு சேத நடவடிக்கைகளை குரங்குகள் மேற்கொண்டு வருகின்றது.இதனாலும் விவசாயிகள் பாதிப்புக்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
விவசாயிகள் குறைந்த மாதத்தில் அறுவடை செய்யும் புதிய நெல்லினங்களை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயத் திணைக்களம், கமநல சேவைகள் நிலையம், விவசாய விரிவாக்கல் நிலையங்கள் என பெயர்பலகைகள் மாத்திரமே காணப்படுகின்றன. தவிர புதிய நெல்லினங்கள் இல்லை விவசாய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தம்புள்ளைக்கு செல்லுமாறு கூறுகின்றார்கள்.
அரசாங்கம் விவசாயிகளுக்கென்று புதிய விவசாயக் கொள்ளையொன்றை வகுத்து வெளியிட வேண்டும். விவசாயிகளின் காலடியில் சென்று நெல் வர்க்கங்களை அறிமுகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானிய உதவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தத வேண்டியதோடு விவசாயிகளின் கோரிக்கைகளையும் எற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.
அத்தோடு புதிய நெல் வர்க்கங்களை அறிமுகப்படுத்த நடமாடும் சேவைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு போகத்திலும் புதிய நெல்லினங்கள், விவசாய இயந்திர தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டும்.

கிருமி நாசினி பாவனை:-

விவசாயத்துக்கு கிருமி நாசினி பாவனை மிகவும் இன்றியமையாததாக காணப்படுகின்றது. ஒவ்வொரு விவசாயச் செய்கைக்கும் வெவ்வெறு வகையான கிருமி நாசினிகள் தேவைப்படுகின்றன.
வேளாண்மைச் செய்கையில் அரக்கொட்டியான் தாக்கம் நெற்செய்கைக்கு ஏற்படுமாக இருந்தால், அதற்கு எந்தவிதமான கிருமி நாசினியோ மருந்துகளோ செல்வாக்கு செலுத்துவது குறைவு.

கடந்த வருடம் திருகோணமலை மாவட்டத்தில் அறக்கொட்டியான் தாக்கம் வெகுவாக அதிகரித்ததால் அறுவடையில் போது வெறும் பதர்களே காணப்பட்டது. இதற்கு மருந்துகளே இல்லை. நாட்டில் எரிபொருட்கள் டீசல், பெற்றோலுக்கு விலை அதிகரித்ததால் கிருமி நாசினி, பசளைகளும் விலை அதிகரிக்கின்றது. அதேவேளை நெல்லுக்கான விலை அதிகரிக்கவில்லை. அதே நிலை தான் தற்போது காணப்படுகின்றது. விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்க்கப்படல் வேண்டும்.

எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்:-

விவசாயிகள் இரவும் பகலும் பனி குளிர், மழை,வெயில் என்று பராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அரசாங்கம் காலடியில் சென்று பிரச்சினைகளை இனம் கண்டு தீர்த்து வைக்க முற்பட வேண்டும்.
நாட்டின் அன்னிய செலாவாணியை பெற்றுக் கொள்வதற்கு விவசாயிகள் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிறந்த விளைச்சலையும் சிறந்த இலாபத்தையும் பெற்றுக்கொள்வதற்கான அறிவு உர வகைகள், கிருமி நாசினிகள் புதிய வர்க்கத்திலான நெல் வகைகளையும் வழங்க வேண்டும்.

அத்தோடு பாதிப்பில்லாத வகையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யமுடியும். இடைதரகர்களின் போட்டித் தன்மை முதலாளிமார்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி அரசாங்கம் கைக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மேற்கொள்வதன் மூலம், விவசாயத்துறையில் இன்னும் இளைஞர்கள் விவசாயத்தில் கால்பதித்து, நாட்டை விவசாய பசுமை பொருந்திய தேசமாக மாற்றியமைக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :