தேர்தலை நடத்துமாறு கோரும் எந்தத் தரப்புக்களிடமும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறை கிடையாதென சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மக்களின் உயிரைவிடப் பெரியதாக எதுவும் இல்லை. உயிர் வாழ்ந்தால்தான் உரிமை பற்றிப் பேசமுடியும் என்பதை தேர்தலைக் கோரும் தரப்பினர் அறிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலை நடத்துமாறு எதிரணியினர் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தின் படுகுழியில் வீழ்ந்த சூழலில்தான், ரணில்விக்ரமசிங்க நாட்டைப் பாரமெடுத்தார். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்குமாறு அழைப்பு விடுத்தபோது, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எவரும் முன்வரவில்லை. ஏன்? குழம்பிய குட்டையில் நல்ல மீன்களைப் பிடிக்கலாம் என்ற சுயநல அரசியலிலே அவர்கள் ஊறியிருந்தனர். ஆனால், ரணில் விக்ரமசிங்க துணிந்து வந்து நாட்டைப் பாரமெடுத்தார். இன்று, படிப்படியாக நிலைமைகள் சீரடைகின்றன. ரூபாவின் பெறுமதி உயர்ந்து டொலரின் பெறுமானம் வீழ்ச்சியடைந்து வருகிறது.சர்வதேச நாணய நிதியம் உட்பட சகல அமைப்புக்களும் உதவி வழங்க முன்வந்துள்ளன. இவ்வுதவிகள் கிடைத்தால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நிலைப்படலாமென இவர்கள் அஞ்சுகின்றனர். இதனால்,
.இவ்வாறு நிகழ்வதற்குள் நிலைமைகளைக் குழப்பவே எதிரணியினர் முயற்சிக்கின்றனர். வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் மனநிலையில் மக்கள் இல்லை. குடும்பத்தை வாழ வைப்பதற்கான சுழற்சியில் தான் இவர்களின் காலங்கள் கழிகின்றன. இந்த நிலையிலா,தேர்தலைக் கோருவது.?
மக்களின் பிணங்களைக் கடந்து சென்றும் அதிகாரத்தை அடைவதுதான் இவர்களின் விருப்பம். இவ்வாறானவர்கள் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு லாயக்கற்றவர்கள். அதிகாரப்பகிர்வின் அடையாளமாக, சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு நிவாரணமாகக் கிடைத்த மாகாண சபைத் தேர்தல், ஆறு வருடங்களாக இழுத்தடிக்கப்படுகிறது.இதுபற்றி, இவர்கள் வாயே திறக்கவில்லை. இத்தேர்தலை இழுத்தடிப்பதற்கு சூழ்ச்சி செய்தவர்களில் முஸ்லிம் காங்கிரஸ் ,தமிழ் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் பிரதானமானவர்கள்.
அதிகாரப்பகிர்வின் அடையாளமான மாகாணசபையை காப்பாற்ற போராட முன்வராத சுமந்திரன் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை அழுத்துகின்றனர். அந்தளவுக்கு இவர்களின் அரசியல் தரம் குறைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். அதிகாரத்தை அடைந்து கொள்ள செலவிடும் பணத்தை, அடிவயிறுடனும் மற்றும் வெறும் வயிறுடனும் வாழ்க்கையின் இறுதி மூச்சைவிடப் போராடும் மக்களுக்கு வழங்குவதுதான், உண்மையான மக்கள் பிரதிநிதியின் உயர் பண்பாக இருக்கும் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment