ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸின் பார்வையில் மறைந்த டாக்டர் ஜெமீல்.


றைந்த டாக்டர் ஜெமீலை ஒரு ஊடகமாகவும் கருப்பொருளாகவும் ஒரே நேரத்தில் அணுகுவது என்னுடைய நோக்கமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் வெளியிட்டுள்ள ஊடகக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

மறைந்த டாக்டர் எம் ஐ எம் ஜெமீல் அவர்கள் பற்றி ஏ.எல்.ஏ. அஸீஸ், பல்வறு கோணங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இளைஞர் வழிப்படுத்தும், உள்ளடங்கியதும் பன்முகத்தன்மையானதுமான சமூக அமைப்பு

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த மனிதாபிமானியும் சமூக சிந்தனையாளருமான டாக்டர் எம் ஐ எம் ஜெமீல் அவர்கள் செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமையன்று இவ்வுலக வாழ்விலிருந்து நீங்கிக் கொண்டார்கள்.

அவர்களது வாழ்க்கை பல பரிமாணங்களை கொண்டது. எனக்குத் தெரிந்த பார்வை ஒன்றையே நான் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். டாக்டர் ஜெமீல் அவர்களை ஒரு ஊடகமாகவும் கருப்பொருளாகவும் ஒரே நேரத்தில் அணுகுவது என்னுடைய நோக்கமாகும். இந்த மட்டுப்பாட்டுக்குள், இன்றைய காலத்திற்கு மிக முக்கிமான இளைஞர் வலுவூட்டல், இளைஞர் தலமைத்துவம், உள்ளடங்கியதும் பன்முகத்தன்மையானதுமான தேசிய, சமூக கட்டுமானங்கள் பற்றிய கருவூலங்களின் சில அம்சங்களை தொடவேண்டியுள்ளது. அத்தகைய பரிமாற்றம் காலத்தின் தேவையுமாகும்.

அண்மையில் கல்முனைக்கு பிரயாணம் செய்த போது சாய்ந்தமருதில் அன்னாரை சந்திக்க விரும்பினேன். நான் தங்கியிருந்த மேர்சா வீதியிலுருந்து மருத்துவமனை வீதியில் உள்ள அவரது வீடு வரை சென்று பார்த்தேன். எனினும் எனது துரதிஷ்டம் அன்னாரைக் காணக் கிடைக்கவில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு நான் சந்தித்தபோது, அவர்கள் என்னை இருகரம் நீட்டி வரவேற்றார்கள், அப்போது நாட்டிலும் சமூகத்திலும் என்ன நடக்கிறது என்ற கவலையை என்னுடன் பகிர்ந்து கொண்டு இலங்கையின் ஒவ்வொரு மட்டத்திலும் நல்லிணக்க முயற்சிகள் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்கான யோசனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி என்னிடம் கேட்டதுடன் நான் தெரிவித்த கருத்துக்க்ககளில் என்னை மேலும் ஆர்வப்படுத்தினார்கள்.

முக்கியமாக, தனது மனைவியை அழைத்து, எனது வாப்பம்மாவின் குடும்ப வழி என்றும் நானும் அவர்களது மனைவியாரும் உறவினர்கள் என்றும் என்னை 'அறிமுகப்படுத்தினார்கள்'. நான் அவர்களது மனைவியை நேரில் காணக் கிடைத்தது அதுதான் முதல் முறை. இருப்பினும் எனது குடும்ப வட்டத்துக்குள் அவர்களது மனைவியின் பெற்றோர்கள் மற்றும் டாக்டர் ஜெமீல் பற்றியும் பல ஆண்டுகளாக மிகவும் வாஞ்சையுடன் பேசுவதை கேட்டிருக்கிறேன்.

சில மாதங்களுக்குப் பிறகு, அவர்களது அன்பு மனைவி திடீரென உயிர் நீத்த போது, திருமணத்தின் 50 வது ஆண்டு நிறைவை எட்டுவதற்கு இன்னும் கொஞ்ச காலமே இருந்தது. தனது மிகவும் நேசத்துக்குரிய நண்பரை இழந்ததற்காக ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் அவர்களது சமூக ஊடக இடுகையைப் படித்ததும் நெஞ்சுருகியது.

மறைந்த டாக்டர் ஜெமில் அவர்களை ஒரு சிறந்த மனிதர் என்று நான் அழைப்பேன் என்றால், அது அவரது சிறந்த ஆளுமைக்கு ஒரு சாதாரண வார்த்தையாகவே இருக்கும். அவர்கள் அதனையும் தாண்டிய ஒருவர்.

இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் தேவை பற்றி அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு நம்பியும் எதையும் செய்யாத சிலரைப் போலல்லாமல், அவர்கள் அதற்காக தன்னால் முடியுமான வரை தீவிரமாக உழைத்தார்கள். மேலும் அவர்களின் எழுத்துக்கள் சம்பாசணைகள் எல்லாம் அந்த செய்தியை வெளிப்படுத்துவதாகவே இருந்தன.

கிழக்கில் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் இணக்கத்தையும் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நேரிலோ அல்லது தொலைபேசியிலோ நாம் நடத்திய ஒவ்வொரு உரையாடலிலும் விரிவாகப் பேசிய துண்டு.

பல ஆண்டுகளாக தவறான புரிதல்களுக்கு உட்படுத்தப்பட்ட இரு சமூகங்களையும் ஒன்றிணைக்கதக்க சக்தி பெற்றிருந்தவர்கள் குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக அவர்களை மேலும் பிளவுபடுத்துவதற்கு எத்தனிப்பதை யிட்டு டாக்டர் ஜெமீல் அவர்கள் குறிப்பாக கவலை அடைந்திருந்தார்கள். தமிழ் - முஸ்லிம் உறவுககள் பலப்படுத்தப் படுவதன் மூலம் கிழக்கை தேசிய ஒற்றுமைக்கு முன்மாதிரியாக மாற்றியிருக்கலாம், அங்குள்ள சிங்கள சமூகத்துடனும் சேர்ந்து வலுவான உறவைக் கட்டியெழுப்பியிருக்கலாம் என்பது அவர்களது ஆழமான நம்பிக்கையாக இருந்தது.

ஒருவரை ஒருவர் மதித்தல் என்பதில் அவர்கள் ஒரு பரஸ்பரத்தன்மையை வெளிப்படுத்தினார்கள். எனினும் அவர்கள் மீதான எனது மரியாதை பல படிகள் உயர்ந்ததாகவே இருந்தது. அது அவரகளது நேர்மையான வாழ்க்கை முறை, விழுமியம் தழுவிய செயற்பாடுகள், நேரடியான கருத்தியல் பண்பு போன்ற குணாம்சம்களை மையப்பபடுத்தியது. அவரகளது சமூக சுற்றுச் சூழலில் பல முரண்பாடுகளும் ஒவ்வாமைகளும் இருந்தபோதிலும், அவர்களை தனது கொள்கைகளுடன் ஒட்டிக்கொண்டிருக்க செய்தது தனித்துவமான ஆளுமையே ஆகும்.

சமூகம் மற்றும் சமூகங்களுக்கு இடையேயான உறவுகளின் 'ஒன்றிணைக்கும்' அம்சங்களில், அவர்கள் முக்கிய ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள். மேலும் மக்களிடையே 'வேறுபாடு' ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக அவர்கள் உணர்ந்த அனைத்து விஷயங்களிலும் அதற்கு எதிரான ஒரு அமைதியான போர்வீரராக இருந்தார்கள்.

இலங்கை அரசியல் -- உண்மையில் சொல்லப் போனால் கல்முனை சார்ந்த பகுதியில் நடைபெறும் அரசியல் -- மக்கள் மத்தியில் ஆழமான 'காயங்களை' ஏற்படுத்தியது என்ற மாறாத அபிப்பிராயம் அவர்களுக்கு இருந்தது. அதிகாரம் கைவயப்பட்ட அரசியல்வாதிகள் தங்களை அரசியலில் நிலை நிறுத்திக் கொள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடும் பிரிவினைகள் புரையோடிய வடுக்களாக பரிணாமித்து விடுகின்றன.

அத்தகைய அரசியல் எந்த விதமான நன்மையையும் எந்தப் பிரிவினருக்கும் ஏற்படுத்துவதில்லை. மாறாக வடுக்களை குணப்படுத்த வேண்டும் என்ற போராட்டத்தில், அவர்களின் பெயரில் மற்றொரு வகையான அரசியல் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. அதிகாரமிக்கவர்கள் செய்யும் தொகுதி வாரியான பிரித்தாளும் அரசியல், காயங்களை நிரந்தரமாக்குவதற்கும் புரையோடச் செய்வதற்கும் பங்களிப்பு செய்வது பிரித்தாளும் சிந்தனை மேவிய தேசிய அரசியல் சக்திகளுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது. இதனால் போலும், டாக்டர் ஜெமீல் அவர்கள் விளிம்புநிலை சிந்தனைகள் தேசிய மற்றும் பிரதேச நீரோட்டச் சிந்தனைகளாக உருப்பெற வழி வகுக்கும் அரசியல் அதிகாரப் போக்கை விரும்பாதவர்களாக பிற்காலத்தில் தோன்றியதுண்டு.

இறுதி மூச்சு வரை மக்கள் மத்தியில் வாழ்ந்தவர் மருத்துவர் ஜெமீல் அவர்கள். மக்கள் மருத்துவராக, 'சமூகக் காயங்கள்' அல்லது 'சமூக அவலங்கள்' பற்றி அவருக்கு தெளிவான அறிவு இருந்தது. ஆனால் அவர் விரும்பியபடி அவற்றையெல்லாம் தீர்த்து வைப்பதற்கு தேவையான வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்திருக்கவில்லை. பிற்காலங்களில் சமூக அதிகாரமோ அல்லது அரசியல் பொருளாதார சக்தியோ அவர்களிடம் இருக்கவில்லை. இருந்தாலும் தன்னால் முடிந்ததைச் செய்தார்.

தான் பிறந்து வளர்ந்த சாய்ந்தமருது மண்ணின் நிலை பேறான அபிவிருத்தி பற்றி அரசியல் கடந்து கருத்தாடல் செய்ததையும் அதற்காக முன்னின்று செயற்பட இளைஞர்களை உற்சாகப் படுத்தியதையும் அவர்களுடைய சமூக ஊடக பரிமாற்றங்கள் சுட்டி நிற்கின்றன.

பிற்காலங்களில், பரந்த பிராந்தியத்திலும், வேறிடங்களிமும் நிகழ்ந்த அரசியல், சமூக நிகழ்வுகளை தவிர்த்து வந்த ஒருவராகவே டாக்டர் ஜெமீல் அவர்களை நோக்கலாம்.

பிராந்திய அரசியல்வாதிகள் மற்றும் தேசிய அரங்கில் உள்ளவர்கள் பயன்படுத்திய அரசியல் அதிகாரத்தின் 'தீங்கு விளைவிக்கும் தன்மை' (harm-making nature of political power) மீதான வெறுப்பு, அவரது 'நிகழ்ச்சி தவிர்ப்பு' முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதெனலாம்.

எவ்வாறாயினும், சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலின் பரிபாலன சபையானது, சமூகத்திற்கு அவர் ஆற்றிய பல்வேறு பங்களிப்புகளுக்காக, குறிப்பாக 2004 இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எவ்வளவு அர்ப்பணிப்புடனும், தன்னலம் அற்றும் பணியாற்றினார் என்பதை கருத்தில் கொண்டு, அண்மையில் அவரை கௌரவித்தது.

2010 முதல், நான் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் என்னுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்தார்கள். வெளிநாடுகளில் நான் சேவையாற்றிய போதெல்லாம், சர்வதேச அமைப்புகளின் மாநாடுகளுக்கு தலைமை தாங்கிய சந்தர்பங்களில் அல்லது ஊடகங்கள் அவற்றைப் பற்றி செய்திகள் வெளியிட்ட சந்தர்பங்களில், என்னை நேரடியாக தொடர்பு கொண்டு ஊக்கமளித்ததை ஒரு போதும் மறக்க முடியாது. அவை அனைத்தும் மிகக் காததிரமான கருத்தாடல்கள். அவைகளில் சில, தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் எவ்வாறு தொடரப்பட வேண்டும், மற்றும் நாடு நிலையான அமைதியை அடைவதில் மத மற்றும் சமூகத் தலைவர்கள் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதற்கான அவரகளது எண்ணங்களையும் யோசனைகளையும் பிரதிபலித்தன.

இளைஞர் வலுவாக்கம் மற்றும் இளைஞர்களின் தலைமைத்துவம் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை (inclusion and diversity) பற்றிய ஒரு பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்ய ஆர்வமாக இருப்பதாக அவர்களிடம் இருந்து வந்த சில குறுஞ்செய்திகளைப் படிக்கும் போது எனக்குத் தோன்றியது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களையும் உள்ளடக்கியதாக அத்தகைய பயிற்சி இருக்க வேண்டுமென விரும்பினார்கள். வெளிநாட்டு சேவையில் எனது கடைசி பதவிக் காலம் முடிந்து இலங்கை திரும்பியதும் அதைச் செய்ய முன்வந்தேன். துரதிர்ஷ்டவசமாக கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நாடு ஒரே நேரத்தில் எதிர் நோக்கிய பல நெருக்கடிகள் காரணமாக ஸ்திரமற்று போன நிலை என்பன எம்மை அவ்வாறு செயல்பட விடவில்லை.
ஆயினும்கூட, நான் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்; அல்லாஹ் நாடினால் ஏதோ ஒரு நாளில் குறுகிய அளவிலாவது அத்தகைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். உண்மையில் தற்போதைய பொருளாதார சூழ்நிலை மிகப் பெரிய அளவில் அத்தகு முயற்சியை மேற்கொள்ள அனுமதிக்காது.

ஒருவரை ஒருவர் புறந்தள்ளும் தேசிய, பிரதேச கலாச்சாரத்தை (culture of exclusion) புறந்தள்ளி உள்ளடங்கிய பன்முகத்தன்மை நிறைந்த, விளிம்பு நிலை கடந்து பிரதான நீரோட்டத்தில் இணையக் கூடியதும் அதற்குப் பங்களிப்பு செய்யக்கூடியதுமான சமூகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட வேண்டும். அதன் அர்த்தம் சமூக கலாச்சாரத்தை கைவிடுதல் என்பதல்ல. புறத்தொதுக்கும் அரசியல் கலாச்சாரத்தையும் அது உருவாக்கியுள்ள சமூக பரிமாணங்களையும் செயலிழக்கச் செய்தல் என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இலங்கையை பொறுத்தவரை இது ஒற்றைவழிப் பாதையல்ல. புறந்தள்ளும் தேசிய அரசியல் கலாச்சாரமும் சம நேரத்தில் மாற்றம் அடைய வேண்டியுள்ளது. இங்கு தான் இளைஞர்கள் மிகப் பெரும் பங்களிப்பு செய்யக் கூடியவர்களாக உள்ளார்கள். இந்த உணர்தல் தான் இளைஞர்களுக்கான பயிற்சியின் தேவையை அவசியமாக்குகிறது.

எதிர்கால சமூக, அரசியல் தலைவர்களும் பொருளாதார தொழில் துறை முன்னோடிகளும் இத்தகைய புலத்திலிருந்து தான் உருவாக வேண்டும்.

ஆக, உள்ளடங்கிய பன்முகத்தன்மை நிறைந்த இளைஞர் சமுதாயமே அரசியல் ரீதியானதும் வேறு விதமானதுமான பிரிவு மனச்சார்புகளை கடந்து செல்லவும், அவற்றை செயல் இழக்கவும் தகுமானது. டாக்டர் ஜெமீல் அவர்கள் விரும்பாத 'அரசியல் அதிகாரம்' இன்னும் அவர்களை ஒதுக்கி வைக்க முயற்சித்தாலும் மக்களை ஒன்றிணைக்க உதவும் ஒரு முன்னோடிக் கலாச்சாரத்துக்கு அது நிச்சயம் வழிகோலும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அடியானுக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :