ஊர், சமூக விடயங்களில் மிகக் கரிசனையோடு செயற்பட்டவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்; -முன்னாள் கிழக்கு மாகாண சபை குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் அனுதாபம்



அஸ்லம்-
மது சாய்ந்தமருது பிரதேசம் மிகப்பெரும் சொத்து ஒன்றை இழந்திருக்கிறது. வைத்தியத்துறையில் அரைநூற்றாண்டு காலத்திற்கு மேல் சேவையாற்றியது மாத்திரமல்லாமல் தனது இறுதி மூச்சு வரை ஊர் சமூக விடயங்களிலும் மிகக் கரிசனையோடு செயலாற்றி வந்த டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

வயது முதிர்ச்சி என்றபோதிலும் மிக அண்மைக்காலம் வரை மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி வந்த டொக்டர் ஜெமீல் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டொக்டர் ஜெமீல் அவர்கள் எமது ஊரின் ஒரு முதுசமாகவே திகழ்ந்தார். ஊர் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒரு பாத்திரத்தை அவர் வகித்து வந்தார். அவரது இந்த வகிபாகத்தை வேறு எவராலும் எளிதில் நிரப்பி விட முடியாது. ஊரு நலன் சார் விடயங்களிலும் அவரது வகிபாகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வந்தது.

எமது சாய்ந்தமருது பிரதேசத்தில் சாதாரண ஒரு மருந்தகமாக இயங்கி வந்த கிளினிக் நிலையத்தை தனது அயராத முயற்சி காரணமாக பல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தி, அதன் அபிவிருத்தியில் மிகப்பெரும் கரிசனையுடன் ஈடுபட்டு, அதனை கட்டியெழுப்பிய பெருமை அவரையே சாரும்.

அங்கு தனது சேவைக்காலம் நிறைவுற்ற பின்னரும் அரச வைத்திய சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் கூட இவ்வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் அவர் எப்போதும் கவனம் செலுத்தி வந்தார்.

எமது சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நமபிக்கையாளர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் முக்கிய பல பணிகளை அவர் நிறைவேற்றியிருந்தார். குறிப்பாக பள்ளிவாசல் கட்டிட நிர்மாணத்தை பூர்த்தி செய்து, திறப்பு விழா நடத்தியமை, சாய்ந்தமருது பிரதேசத்தின் அனைத்து துறைகளினதும் வரலாறுகளை தொகுத்து, ஆவணப்படுத்தி, நூலாக வெளியிட்டமை, ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பைத்துஸ் ஸக்காத் எனும் நிதியத்தை ஸ்தாபித்து, ஒரு தசாப்த காலத்திற்கு மேல் தலைமைத்துவம் வழங்கி, வெற்றிகரமாக முன்கொண்டு சென்றமை மிகப்பெறுமதியான வரலாற்றுச் சேவைகளாகும்.

இவை தவிர சுனாமி அனர்த்தத்தினால் உயிர், உடமை, வீடு, வாசல்களை இழந்த மக்களுக்காக நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பதிலும் அவர்களுக்காக கரைவாகு பகுதியில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் பள்ளிவாசல் தலைவர் என்ற ரீதியில் மிகவும் பொறுப்புடன் காரியமாற்றியிருந்தார்.

இக்காலப்பகுதியில், நான் கல்முனை மாநகர சபை உறுப்பினராகவும் பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்தவன் என்ற ரீதியில் கரைவாகு சுனாமி வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்காக அரசில் அங்கம் வகித்திருந்த எமது கட்சியினதும் தலைமைத்துவத்தினதும் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வதற்காக டொக்டர் ஜெமீல் அவர்கள் என்னுடன் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார்.

அன்று தொட்டு என்னுடன் மானசீகமான உறவைப் பேணி வந்த அன்னார் பொதுவாக ஊர் சம்மந்தப்பட்ட எந்தவொரு விடயமாயினும் என்னுடன் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு வந்ததுடன் எனது அரசியல் முன்னேற்றத்தில் பின்புலமாகவும் செயற்பட்டு வந்தார். அவரது ஆலோசனைகள் எவையும் தட்டிக்கழிக்க முடியாதளவுக்கு மிகவும் பெறுமதியாக இருக்கும். எந்தவொரு விடயம் தொடர்பிலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் மிகவும் தெளிவாக எடுத்துரைப்பார்.

எல்லோருடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழக்கக்கூடிய வசீகரமான குணம் அவரிடம் இயல்பாகவே காணப்பட்டிருந்தது. பள்ளிவாசல் தலைமை என்ற ரீதியில் அவர் மிகவும் நிதானமாகவும் பக்க சார்பின்றியும் மனச்சாட்சிக்கு விரோதமின்றியும் நடுநிலை தவறாமல் சிறப்பாக பணியாற்றியிருந்தார்.

பொதுவாக வைத்தியத்துறையினருக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் பொது அமைப்பினருக்கும் ஊர்ப்பிரமுகர்களுக்கும் அவர் ஒரு உதாரணபுருஷராகத் திகழ்ந்து, எம்மை விட்டும் பிரிந்துள்ளார். அவரது சேவைகளும் முன்மாதிரியான செயற்பாடுகளும் என்றும் நினைவுகூரத்தக்கவை.

வல்ல இறைவன் அன்னாரது அனைத்து சேவைகளையும் ஆத்மீக பணிகளையும் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக- என்று ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :