கதிர்காம பாதயாத்திரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும்! காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!




வி.ரி சகாதேவராஜா-
மூவின மக்களும் சங்கமிக்கின்ற ஐக்கிய புனித பூமியான கதிர்காமம் ஆடிவேல் விழாவை முன்னிட்டு நடைபெறும் புனித பாதயாத்திரை இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும்.

இவ்வாறு கோரும் தீர்மானம் காரைதீவு பிரதேச சபையில் அனைத்து தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் 54 ஆவது மாதாந்த அமர்வு கடந்த புதன்கிழமை பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

அச்சமயம் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முன்மொழிந்தார். மாளிகைக்காடு சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் வழிமொழிந்தார். ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இப் பிரேரண இலங்கையின் ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு தீர்மானப் பிரதிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

பிரேரணையை முன்வைத்து பேசுகையில் மேலும் உரையாற்றுகையில்..

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் விழாவை ஒட்டிய பாதயாத்திரை இம்முறை பலத்த சோதனைகளுக்கு உள்ளாகி இருந்தது. அது மட்டுமல்ல இந்த பாதயாத்திரை அதன் புனிதத்துவத்தை இழந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு பல அசாதாரண சம்பவங்களும், அனர்த்தங்களும் இடம்பெற்றிருக்கின்றன .

இப் பாதயாத்திரை முறையாக சீரமைக்கப்பட வேண்டும். புனிதத்துவமாக
மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதன் கலாச்சாரம் பாரம்பரியம் பண்பாடுகள் பேணப்பட வேண்டும் என்று அடியார்கள் பலர் ஆணித்தரமாக கருத்துக்களை என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.

இம்முறை, வரலாற்றில் என்றும் இல்லாத அளவிலே யால சரணாலய பகுதியில் உள்ள வியாழ ஆற்றிலே திடீரென ஐந்து அடிக்கு காட்டாற்று வெள்ளம் வந்து பெரும் அனர்த்தத்தை அடியார்களுக்கு ஏற்படுத்தியது .

இது ஒரு தற்செயலான செயல் அல்ல. இது முருகனின் சோதனை. புனித பயணத்தை மாசுபடுத்துபவர்களுக்கு கற்பித்த பாடம் என்றெல்லாம் பல அடியார்களும் பல கருத்துக்களை கூறினார்கள்.

ஏனைய சமய யாத்திரை மற்றும் விரதங்கள் போன்று அரசாங்கத்தினால் இதற்கான அத்தனை சலுகைகளும் இந்த யாத்திரை க்கும் வழங்கப்படவேண்டும். அது மாத்திரம் அல்ல பாதயாத்திரை செல்வோரின் வயது கட்டுப்பாடுகள் நடைமுறை விதிகள் என்பன முறைப்படி கட்டமைக்கப்பட வேண்டும். இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

இனிவரும் காலங்களில் ஆசார பூர்வமாக பக்தி முக்தியாக புனிதமாக கட்டுக் கோப்பாக நடைபெற வேண்டும் என்றார்.

முன்னாள் அமைச்சர் மனோகணேசன் இதனை வர்த்தமானி பிரகடனம் செய்வேன் என்று காட்டுப் பாதை திறக்கப்படும் போது அவர் கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாறிவிட்டது. எனவே இதனை நாம் நிறைவேற்ற வேண்டும். என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :