தப்பிப்பிழைப்பார்களா?



எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களைத்தவிர்த்து கடந்த ஜனாதிபதி கோட்டாபாய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்ததன் விளைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

அதன் தொடரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஸீர் அஹமட் கடந்த கோட்டாபாய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதோடு, அவை முடியும் வரை தற்காலிகமாக கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.௭ஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை ஜனாதிபதி சந்திக்கும் நிகழ்வில் எந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒழுக்காற்று விசாரணைகள் இன்னும் முடியுறுத்தப்படாத நிலையில் கட்சி சார்பாக கலந்து கொள்ளலாம் எனப்பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தீர்மானங்களை உதாசீனம் செய்து விட்டு தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாது கடந்த கால மோசமான ஆட்சிக்கு ஆதரவு வழங்கி, அந்த ஆட்சியின் அட்டூழியங்களுக்கு துணை போன முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்களால் முஸ்லிம் சமூகம் வெக்கித் தலைகுனிந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் எனப்பலரது வேண்டுகோளின் பேரிலும், அதிருப்தியின் காரணமாகவும் இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை மறுக்க முடியாது.
கடந்த கோட்டாபாய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்ததன் விளைவாக தங்களால் இனியும் கோட்டா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து தங்களின் அரசியல் எதிர்காலத்தை அழித்திட முடியாதென்ற இறுதி நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாசாவிடம் அரசியல் தஞ்சம் கோரியதைக் காண முடிந்தது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதனாலும், தனது கட்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பலப்படுத்தும் நோக்கிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாசா இணைத்துக்கொண்டாலும் இவர்களின் செயற்பாட்டால் வெறுப்புற்ற சாமானிய மக்கள் இதுவரை இவர்களை ஏற்றுக் கொள்ளத்தயாராகவில்லை என்பதை இவர்களுக்கெதிரான விமர்சனங்களே வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
இவ்வாறான தொடரில் தாங்கள் எதிர்க்கட்சிக்குள் தஞ்சமடைந்திருப்பதனால் ஐக்கிய மக்கள் சக்தி தங்களின் அணியாக இவர்களை பாராளுமன்றத்தில் இணைத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்கும் அண்மையில் அறிவித்திருந்தது.

எனவே, முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியாகவிருப்பதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாசா வழங்கிய பாவமன்னிப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கும் பொருந்தும் என நினைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸுடன் முன்னர் வகித்த பதவி நிலைகளில் தொடர்ந்து கொண்டு செல்லலாம். இனி மேலும் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதோடு, அடுத்து வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக போட்டியிட வாய்ப்புக்கிடைக்கும் மக்களும் அதிகளவான வாக்கினை எமக்குத்தந்து வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இம்மூவரின் எண்ணங்களும் இருக்கின்றது.

ஜனாதிபதியூடனான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரின் சந்திப்பில் தாங்கள் அழைக்கப்பட்டதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்த தடைகளெல்லாம் நீங்கி, ஒழுக்காற்று விசாரணைகளும் கிடப்பில் போடப்படும் நாம் தலைவரின் பின்னால் ஒழிந்து கொண்டு அரசியலை முன்னெடுக்கலாம் என்ற எண்ணங்களும் அவர்களின் உள்ளங்களை குளிரச் செய்திருக்கிறது.

ஆனால், வாக்களித்த, ஆதரவளித்த மக்களோ இச்செயலைக்கண்டு நொந்து போயிருக்கிறார்கள்.

இவ்வேளையில் பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையும் அதன் உயர்பீடமும் எந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸூடனான ஜனாதிபதியின் சந்திப்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதற்கு விளக்கமளிப்பதுடன், இவர்கள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எந்தளவில் தற்போதிருக்கிறது அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுவிட்டதா? என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் தார்மீகக்கடமை தலைவருக்கு இருக்கிறதென்பதை உணர்ந்து செயற்பட முன்வருவீர்கள் என கட்சியின் போராளிகள், அபிமானிகளின் எதிர்பார்ப்பாகவிருக்கிறது.

பாரம்பரியமான முஸ்லிம் சமூகத்தின் தாய்க்கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பாக இளம் தலைமுறையினரும், ஏனைய சமூகங்களும் அவதானித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, இவ்வாறான சம்பவங்கள், நிகழ்வுகள் அவர்கள் மத்தியில் பிழையான எண்ணப்பாடுகளைத் தோற்றுவிக்கும். அதே போன்று, முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள், தீர்மானங்கள் அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் கேலிக்கூத்தாகப் பார்க்கப்படுவது வருத்தமளிக்கிறது.

மேலும், கோட்டா அரசாங்கத்திற்கு இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்த சந்தர்ப்பத்திலிருந்து இவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பிலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட உயர்பீடம் தொடர்பிலும் அவநம்பிக்கையான கருத்துக்கள் பலராலும் வெளிப்படுத்தப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் அவைகளை உண்மைப்படுத்துவதாக இத்தகைய சந்தர்ப்பங்கள் அமைந்து விடக்கூடாது.

பலருக்கு முகவரி கொடுத்த இக்கட்சியை முவரியற்ற கட்சியாக தயவு செய்து யாரும் ஆக்கி விடவேண்டாமென இக்கட்சிக்காக தங்களின் உயிர்களைத்தியாகம் செய்த தியாகிகளின் சார்பாக, உடமைகளை, உடல் அவயங்களை எனப்பல்வேறு தியகங்களை மேற்கொண்டு கட்சி வளர்த்த அத்தனை ஆத்மாக்களின் சார்பாக பொறுப்பிலுள்ள, இந்த பொறுப்புக்கள் (அமானிதம்) தொடர்பாக மரணத்தின் பின் பதில் சொல்லவிருக்கும் அனைவரிடமும் இக்கட்சியை நேசிக்கும் அனைத்துள்ளங்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களுக்கும் தங்களின் பொறுப்பினை இனியாவது சரியாகப் புரிந்து கொண்டு கடந்த கால அனுபவங்களில் பாடம் கற்றுக்கொண்டவர்களாக எதிர்காலத் தேர்தல்களை பயன்படுத்த வேண்டும்.

மக்களின் தீர்ப்பே மோசமான அரசியல்வாதிகளுக்கு இறுதியானதாக அமையுமென எதிர்பார்க்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :