கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் அடியார்களுக்கு ,குமுக்கனிலிருந்து வியாழ வரைக்குமான 11 மைல் தூர பிரதேசத்தில் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள தம்பிலுவில் சிவதொண்டர் அமைப்பு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
அமைப்பின் ஆலோசகர் முத்துலிங்கம் கருணாநிதி தெரிவிக்கையில்...
"வழமையாக ஆறு வவுசர்கள் நீர்த்தாங்கிளுடன் இந்த பணியை மேற்கொள்வோம். இம்முறை 8 பவுசர்கள் நீர் தாங்கிகளோடு இந்த பணி மேற்கொள்ளப்படவிருக்கின்றது .
தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை மற்றும் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளோடு இந்த நீர் குமுக்கன் ஆற்றில் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு அடியார்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படவிருக்கிறது." என்றார்.
இதேவேளை, தம்பிலுவில் சிவ தொண்டர் நிலையம் அதன் தலைவர் எஸ். கேதீஸ்வரன் தலைமையிலே நாவலடி என்கின்ற இடத்தில் 25ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பகலில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தது.
மட்டக்களப்பு மாநகர சபையினரும் அங்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.
இதேவேளை, நாவலடியிலிருந்து கதிர்காமம் வரைக்கும் செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி அவர்களுக்கான அரிசி மற்றும் மரக்கறிகளை வழங்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக சிவ தொண்டர் அமைப்பின் ஆலோசகர் கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
கிழக்கின் தென் எல்லையில் உள்ள குமுக்கன் ஆற்றில் ஐந்தடி அளவில் தண்ணீர் செல்வதால் ஆற்றை கடப்பதற்கு குழந்தைகள் முதியவர்கள் ஆகியோருக்குஉதவி செய்யவும் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்றது .
மலையகபகுதியில் பெய்த மழை காரணமாக குமுக்கன் ஆற்றில் 5 அடி நீர் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தையும் ஊவா மாகாணத்தையும் பிரிப்பது இந்த குமுக்கன் ஆறு என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment