நாட்டை கட்டியெழுப்பியதன் விளைவு ?



விரலுக்கேற்ற வீக்கம் இருப்பது போன்று வரவுக்கு ஏற்ப செலவுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழ்வில் நின்மதி இழந்துவிடுவோம். சிலர் சொத்துக்களை அடகு வைத்து வட்டிக்கு பெற்ற பணத்தின் மூலம் பெருமைக்காக ஆடம்பரமாக வாழ்கின்றனர். இறுதியில் அடகு வைத்த சொத்துக்களை மீட்க முடியாமல் தவிக்கின்றனர்.

அதுபோல் இன்னும் சிலர் லீசிங் அடிப்படையில் ஆடம்பர வாகனங்களை பாவிக்கின்றனர். பின்பு மாதாந்தம் பணம் கட்டுவதற்கு வருமானம் இல்லாமல் தவிக்கின்ற நிலையில், குறித்த வாகனங்களை நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்கின்றன. இது போன்றுதான் இன்று நாட்டின் நிலைமை.

யுத்தம் முடிவுற்றதன் பின்பு நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம் என்று மக்களிடம் காண்பித்துக்கொண்டு நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய அபிவிருத்தி பற்றி கண்டுகொள்ளாமல், கடன்மூலம் ஆடம்பர செலவுகளும், பயனற்ற அபிவிருத்திகளையும், ஊதாரித்தனமான வீண்விரயங்களினால் ஏற்பட்ட பின்விளைவுகளையுமே இன்று நாடு அனுபவிக்கின்றது.

இன்று எமது நாட்டை பார்க்கின்றபோது அபிவிருத்தியடைந்த வெளிநாடுகள் போன்று காட்சி தருகின்றது. மூலை முடுக்குகளெல்லாம் காப்பட் வீதிகளும், நவீன அதிவேக சாலைகளும், உயர்ந்த கட்டிடங்களும், கோபுரங்களும் மற்றும் அலங்காரங்களும் ஆடம்பரமாக காட்சி தருகின்றன.

ஆனால் நாட்டின் அடிப்படை தேவைகளை அல்லது நிரந்தர வருமானத்தை பெருக்கும் திட்டம் பற்றி தூரநோக்கில் சிந்திக்காமல் சுற்றுலாத்துறையை மட்டும் இலக்குவைத்து அதனை அபிவிருத்தி செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டதானது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதனை ஆட்சியாளர்கள் இன்று உணர்ந்திருப்பார்கள்.

எந்தவித இயற்கை வளங்களும் இல்லாத பல நாடுகள் தங்களது கடின முயற்சியின் காரணமாக கைத்தொழில் அபிவிருத்தியடைந்த நாடாக காட்சி தருகின்றது. அங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்காக இனவாதத்தை விதைத்து சமூகங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தவில்லை. நாட்டுமக்கள் என்ற ரீதியில் அனைவரும் நாட்டுக்காக உழைத்தனர். திறமையானவர்கள் இனம்காணப்பட்டு உரிய பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டனர்.

ஆனால் எமது நாட்டின் நிலைமை அவ்வாறல்ல. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக என்னென்ன சூழ்சிகளை கையாள முடியுமோ அவைகள் அனைத்தையும் திறன்பட செய்தனர். ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததன் பின்பு திறமையானவர்கள் உரிய பொறுப்புக்களில் அமர்த்தப்படவில்லை. மாறாக தங்களது சர்வாதிகார ஆட்சிக்கு ஏதுவாக குடும்ப உறுப்பினர்களையும், ஓய்வுபெற்ற படைத்துறை அதிகாரிகளையும் முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தினர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் அதற்காக பல நிபந்தனைகளை ஏற்கவேண்டி இருக்கும் என்பதற்காக சீனா போன்ற நாடுகளிடம் அதிக வட்டிக்கு நிபந்தனையற்ற கடன் பெற்று அப்பணம் வீண்விரயம் செய்யப்பட்டது.

அதாவது கடன் அடிப்படையில் பெற்றுக்கொண்ட பணத்தினைக்கொண்டு நாட்டுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய வழிகளை உருவாக்கியிருக்கலாம். சுற்றிவர கடலால் சூழப்பட்டது எமது நாடு. இங்கே கடல் வளம் உள்ளது. நோர்வே போன்ற நாடுகளின் உதவியுடன் கடற்தொழில் துறையை நவீனமயப்படுத்தியிருக்கலாம். அத்துடன் விவசாய நாடான எமது நாட்டில் செய்கை பண்ணுப்படாத இலட்சக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளது. அவைகளுக்காக நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்துவதற்காக குளங்களை புனரமைப்பு செய்திருக்கலாம்.

அத்துடன் சிறு கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் தரக்கூடிய துறைகளை கண்டறிந்து அதற்கான ஊக்குவிப்புக்களை செய்வதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தினை அதிகரித்திருக்கலாம்.

ஆனால் நாட்டை கட்டியெழுப்புகிறோம், பாரிய அபிவிருத்திகளை செய்கின்றோம் என்று பெரும் எடுப்புடன் விளம்பரம் செய்துகொண்டு மக்களின் வாக்குகளை சூறையாடுதல், அதிக தரகு பணம் பெற்று தங்களது பொக்கட்டுக்களை நிரப்புவதன் மூலம் மக்கள் பணத்தினை கொள்ளையடித்தல் ஆகிய இரண்டு காரணங்களுக்காகவே அதிக கடன் பெறப்பட்டு அதன் சுமையை இன்று நாட்டுமக்கள் அனுபவிக்கின்றனர்.

இதற்கு ஆட்சியாளர்கள் கொரோனா என்னும் தொற்றுநோயை காரணம் கூறி தப்பித்துக்கொள்ள முயற்சித்தாலும் அவ்வாறான ஏமாற்று வித்தைகளை ஏற்கும் மனோநிலையில் இலங்கை மக்கள் இல்லை என்பதுதான் தற்போது நாட்டில் நடைபெற்று வருகின்ற தொடர் போராட்டமாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :