"கோத்தாகோகம"வின் போராட்டத்தினால்நீண்டநாள் தலையிடிக்கு தலையணையை மாற்றியிருக்கிறார் கோத்தா



நூருல் ஹுதா உமர்-
"கோத்தாகோகம"வின் தீவிர போராட்டங்களினால் என்றும் இல்லாதவாறு பலத்த ஆட்டம் கண்ட இலங்கை அரசாங்கம் தலையிடியான பிரச்சினைக்கு தலையணையை மாற்றிய கதையாக புதிய அமைச்சரவை ஒன்றை கடந்த திங்கட்கிழமை அமைத்தது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து பல ஊகங்களுக்கு மத்தியில் வெளியான அமைச்சரவை இறுதியில் புஷ்வாணமானதுதான் வேடிக்கை. அதிக அதிசிரேஷ்டங்கள் ஓரங்கட்டப்பட்டு புதியவர்கள் பலரும் அமைச்சரானார்கள். அமைச்சரவை பதவியேற்பு விழாவில் அமைச்சரவைக்கான பிரதானி பிரதமர் மஹிந்த ராஜபக்ச அப்ஷன்ட் ஆனபோதே அரசின் உள்வீட்டு பிரச்சினையின் ஆழம் வெளிப்படையாக தெரிந்தது.

மக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் நாடாளுமன்றம் மற்றும் அத்தியாவசிய அரச சேவைகளை முன்னெடுத்து செல்வதற்காக ஜனாதிபதியினால் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், தினேஸ் குணவர்தன, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர்கள் மாத்திரம் அமைச்சர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்ச்சியான சந்திப்புக்கள் இடம்பெற்று வந்தன. இதன்போது புதிய அமைச்சரவை உருவாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு எவ்வித அமைச்சுப் பொருப்புக்களையும் வழங்க வேண்டாம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் வீரசேகர, ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ என ஆளும் கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார். 20க்கு ஆதரவளித்தோரில் முஸ்லிம் எம்.பிக்கள் பலரும் மௌனம் காத்திருந்த நிலையில் அமைச்சரவை நியமனம் திங்கட்கிழமை மௌனமாக நடந்து முடிந்தது.

இவைகளெல்லாம் இப்படி இருக்க அமைச்சரவை நியமனத்தில் பின்னர் மிகப்பெரிய சர்ச்சைகள் ஆளும் தரப்பிலும், எதிர்தரப்பிலும் வெடிக்க ஆரம்பித்தது. நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அமைச்சு பதவிக்கு மேலதிகமாக பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். வீடுகளுக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக விமல் வீரவன்சவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதை மெய்ப்பிக்கும் விதமாக பல எம்.பிக்கள் கருத்துக்களை வெளியிட்டும் வந்திருந்தனர். அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் தாம் உள்ளிட்ட 40 பேர் எதிர்க்கட்சித் தலைவரின் குழுவல்ல என்றும் எதிர்க்கட்சியில் சுயேட்சைக் குழுவாகச் செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பல காரணமாக அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். புதிய அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தான் நம்பவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி உறுதிபட தெரிவித்தார். அதையும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களின் போராட்டம் நியாயமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் இதன் மூலம் அவர் தெளிவாக அரசுக்கு பல எச்சரிக்கைகளை அந்த உரையில் விடுத்தார் என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த பிரச்சினைகள் இப்படி உருவெடுக்க என்ன காரணம்? அமைச்சு பதவி என்றாலே புடரியில் கால் பட சிரேஷ்ட அரசியல்வாதிகள் ஓடுவதன் பின்னணி என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்தால் மக்களின் உணர்வுகளுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாக தெரியவில்லை என்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தனைப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளாரென்பதும் தெளிவாகிறது. 11 நாட்களாக காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு பாரிய தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கும் பாரிய தட்டுபாடு, மின்சார துண்டிப்பு , எங்கு பார்த்தாலும் மக்கள் வரிசையில் நிற்கும் காட்சிகள், எந்த பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு விலை உயர்வு என இவ்வாறு நாட்டு மக்களுக்கு சுமைக்கு மேல் சுமை அதிகரித்துள்ளதையும் வரலாறு காணாத ஒரு பொருளாதார நெருக்கடியை அரசின் செயற்பாட்டால் மக்கள் எதிர்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இவை அனைத்துக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளார் அதனால் அவர் பதவிதுறக்க வேண்டி போராட்டம் நடக்கிறது.

மக்களின் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கின்ற சூழலில் அமைச்சரவை மாற்றுகிறோம், அரச அதிகாரிகளை மாற்றுகிறோம் எனக் கூறி அரசாங்கம் மக்களின் போராட்டத்திற்கு தீர்வுக்காணாமையானது,அரசாங்கத்தின் முதிர்ச்சியற்ற தன்மையையே வெளிக்காட்டுகிறது. மக்களின் கோரிக்கை ஒன்றாகவும் அதற்கு அரசாங்கம் வழங்கும் பதில் வேறொன்றாகவும் உள்ளது. இது தலைவலிக்கு மருந்து வாங்க சென்றால் மூட்டு வலிக்கு மருந்து கொடுப்பது போன்ற ஒரு செயற்பாடாகும். ஜனாதிபதி செயலகத்திற்கே ஜனாதிபதியால் செல்ல முடியாத சூழல் இருக்கும் தருணத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு ஜனாதிபதி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க போகின்றார் என்பது கேள்விக்குறியானதொரு விடயமாக மாறியுள்ளது. எனவே மக்களின் போராட்டங்களுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையிலையே இந்த அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

கஜானா காலியான நாட்டில் ஏன் இந்த அமைச்சரவை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யும் நிலைக்கு மாற்றம்பெற்றுள்ளது கோத்தா அரசின் அமைச்சரவை. 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் திங்கட்கிழமை பதவியேற்றுள்ளது. அதில் இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவையில் இந்தியாவை திருப்திப்படுத்த டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஜனாதிபதி, பிரதமரின் குடும்பத்தை சேர்ந்த சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை. மட்டுமின்றி உயிர்த்தோழர்கள் போன்று செயற்பட்ட சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனம் வழங்கடவில்லை. இருப்பினும் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரான காஞ்சன விஜேசேகரவிற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கபப்ட்டுள்ளது.

இதேவேளை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டம், கனக ஹேரத் – நெடுஞ்சாலை, நாலக கொடஹேவா – ஊடகத்துறை, சன்ன ஜயசுமண – சுகாதாரம், பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா, திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில், விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை, ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம், ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல், இராஜாங்க அமைச்சராக இருந்த விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு, தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம், பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் என அமைச்சுக்கள் வழங்கப்பட்டது. இருந்தாலும் இதில் உள்ள பலரும் அனுபவம் குறைந்த திறமையற்ற ஆளுமை குறைந்தவர்கள் என்பது வரலாறு இலங்கைக்கு கற்பிக்க போகும் செய்தி.

இந்த சம்பவங்கள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தில் நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது என்பது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என பிரதமர் எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் நம்புகிறது.

ஏழ்மையின் உச்சத்தில் தவிக்கும் நாட்டில் இராஜாங்க அமைச்சர்களையும் தாராளமாக நியமித்தார் சனாதிபதி கோத்தா. இருக்கிற பிரச்சினைக்கு மேலதிகமாக இன்னும் பல பிரச்சினைகளை தானாக உருவாக்கும் கோத்தா தனது தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கொண்ட சம்பவம் தான் இந்த அமைச்சரவையும், இராஜாங்க அமைச்சர்கள் நியமனமும். சண்டைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சுதந்திர கட்சியை மேலும் மேலும் சூடாக்கி பார்க்கும் கோத்தா, இராஜாங்க அமைச்சர் நியமனத்தில் மீண்டும் "கை"யை வம்பிழுக்கலானார். அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான கல்விமான் சுரேன் ராகவனுக்கு அமைச்சுப் பதவியை வழங்கி அழகுபார்த்த கோத்தா நெருக்கடி நிலையை சந்திக்க தயாராகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

27 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சராக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டார். முன்னதாக சுதந்திர கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார். இந்நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் இரண்டாவது உறுப்பினரும் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளார். அமைச்சு பதவியை பொறுப்பேற்றமையினால் சாந்த பண்டார, கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் கடந்த வாரம் நீக்கப்பட்டார். அவரை இராஜாங்க அமைச்சிலிருந்து பதவிவிலக்க சுதந்திர கட்சி கோரிவந்த நிலையில் சுதந்திர கட்சியின் இரண்டாவது விக்கட்டையும் கோத்தா ஆட்டமிழக்க செய்துள்ளமை "கை"க்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.

புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும் என புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
“எமது வரலாற்றில் முதல் முறையாக, நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், ஒரு அரசாங்கமாக நாங்கள் பல பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம். அரசாங்கத்தின் முதன்மையான கவனம் நாட்டை முன்னோக்கி வழிநடத்துவது மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதாகும், மேலும் நாங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு உழைக்க வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, புதிய உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவது மற்றும் ஏற்றுமதி செயல்முறையை வலுப்படுத்துவது புதிய அமைச்சரவையின் நோக்கமாகும். இதில் நெடுஞ்சாலைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனை சவால்கள் வந்தாலும் வளர்ச்சியையும் முதலீட்டையும் கைவிட முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” என்றார். இருந்தாலும் இவைகளெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதை காலம்தான் பதில் கூற வேண்டும். ஏனேனில் கஞ்சாவை ஏற்றுமதி பயிராக அங்கீகரிக்க போராடிய டயானா இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். (ஒருவேளை அங்கீகாரம் வழங்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை)

முஸ்லிம் அரசியலில் அமைச்சர் பதவி


முஸ்லிம் சமூகத்திலிருந்து புதிய அமைச்சரவையில் யார் அமைச்சர்? யார் இராஜாங்க அமைச்சர் ? யார் அரசின் பக்கம் தாவுவார் என்று இலங்கை முஸ்லிம் அரசியல் கடுமையாக கண்ணில் விளக்கெண்ணெய் ஊத்திக்கொண்டு காத்திருந்த நிலையில் 20க்கு ஆதரவளித்த ஹரீஸ், பைசால், முஷாரப், நசீர் அஹமட், தெளபிக், அலிசப்ரி ரஹீம், இசாக் ஆகியோர்களில் யார் அமைச்சை பெறுவார்கள். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அமைச்சராவாரா ? என்று எல்லோரும் காத்திருந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர்களில் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட் சுற்றாடல் துறை அமைச்சராக பதவியேற்றார். இது தொடர்பில் ஆத்திரமடைந்த மு.கா தலைமை ரவூப் ஹக்கீம் முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என அறிக்கை விட்டார். இருந்தாலும் கட்சியிலிருந்து அவரை நீக்கி தனது விரலால் தனது கண்ணையே குத்திக்கொள்ள ஹக்கீம் எம்.பி மடையனல்ல என்கின்றனர் ஹக்கீம்- ஹாபீஸ் உறவின் அந்தரங்கம் தெரிந்தோர்கள்.

இருந்தாலும் ஹக்கீம் அவரது அறிக்கையில் மேலும் ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது. கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் வெள்ளிகிழமை (22) உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது நடக்குமா என்பதையும், அதன் பின்னால் வரும் பிரச்சினைகளையும் காலம்தான் எமக்கு எடுத்து கூற வேண்டும்.

மறுபுறத்தில் மதில்மேல் பூனை போல நடப்பதெல்லாம் அவதானித்துக்கொண்டு தன்னுடைய சகாக்களை தொலைபேசியில் அழைத்து நாட்டுநடப்புக்களை ஆலோசித்துக்கொண்டு அமைதியாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் மற்றும் ஒருவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இரண்டு கைகளையும் தூக்கி நான் மக்கள் பக்கமே என்று வெளிப்படையாக சரணடைந்தார். மட்டுமின்றி அமைச்சரவை பதவியை தாங்கி வந்த பல அரச உயர்மட்ட அழைப்புக்களையும் நிராகரித்த அவர் அரசியலில் காய் நகர்த்தும் தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்தார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைச்சர் பதவியை அவர் மறுத்து விட்டதாக அறிவித்தார். இதன் மூலம் அவரது ராஜதந்திர அரசியலை அறியலாம்.

புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பு ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு அரச மேலிடங்களிலிருந்து மூன்று தடவைகள் உத்தியோகபூர்வ அழைப்புகள் விடுக்கப்பட்டும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், மக்களின் பிரதிநிதி என்றவகையில் மக்கள் பக்கமாக நின்றே செயற்பட வேண்டும் என்று தீர்மானித்ததன் அடிப்படையில் அரச தரப்பின் அழைப்புகளை முற்றாக தான் நிராகரித்ததாக ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார். நாட்டில் இன்று எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனைத் தீர்க்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நான் மக்கள் பக்கமாக நின்றே செயற்படுவேன். இதேவேளை, எம்போன்றோர் தொடர்பில் இன்று பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன . ஆனால் உண்மை நிலைமையை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிலைப்பாட்டிலையே அனுராதபுர மாவட்ட எம்.பி இசாக் ரஹ்மானும் இருந்துகொண்டிருக்கிறார்.

ஹாபீஸ் அமைச்சரான செய்தியறிந்து முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், தோல்வியடைந்த அரசில் பதவிகள் பொறுப்பெடுப்பதானது துரோகத்தனமான கண்டனத்துக்குரிய செயற்பாடாக பார்க்கிறோம். எமது நாட்டின் மக்களும், இளைஞர்களும் காலிமுகத்திடலில் நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பல நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் மொட்டுக்கு முட்டுக்கொடுப்பதானது சமூகத்திற்கு செய்யும் பலத்த அநீதியாகும் என்று தன்னுடைய கண்டனத்தை பதிவுசெய்தார். மட்டுமின்றி நசீர் அஹமத்துடன் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்.பி ஆசனத்தை பெற காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், கல்குடாவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்ற ஹாபிஸ் நசீர் அஹமடின் செயல் மிகப்பெரும் அநியாயம் என்றும் கட்சியின் தீர்மானத்திற்கெதிராக ஹாபிஸ் நசீர் அஹமட் அமைச்சுப்பதவி ஏற்றிருப்பது கட்சிக்கும் கட்சித்தலைமைக்கும் செய்திருக்கின்ற மிகப்பெரும் அநியாயமாகும் என்றும் தன்னுடைய கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இவைகள் தவிர்ந்து கட்சிமட்டத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பாரிய விமர்சனத்தை அவரது அமைச்சு பதவியேற்பு சம்பவம் நிகழ்த்தியுள்ளது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபிக் இருக்கிற இடம் தெரியாம இருந்திட்டு போவம் எனும் நிலையில் இருப்பதையும், திகாமடுல்ல மாவட்ட எம்.பி பைசால் காசிம் சத்தமே இல்லாமல் இருப்பதையும் பார்க்கும் போது அடுத்த தேர்தல் விரைவில் மனக்கிறது மட்டும் தெரிகிறது.

கட்டுபோப்பை மீறியமைக்காக மக்கள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அரசிடமிருந்து நெசவுக் கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். புத்தளம் மாவட்ட அலிஸப்ரி ரஹீம் பூனை சாஸ்திரம் பாத்துக் கொண்டிருப்பது அவரது எதிர்கால அரசியலை கேள்விக்குட்படுத்தியுள்ளது எனலாம். காதர் மஸ்தான் கிராமிய பொருளாதார, பயிர்ச்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எனும் பதவியை அடைந்து கொண்டார். ஆரம்பத்தில் கோத்தா அரசினால் இனவாத ரீதியாக நிராகரிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் மீண்டும் சலுகைகளுக்கு சோரம் போனதனால் சில பதவிகளை பெற்றுக்கொண்டது. முஸ்லிங்கள் அடர்த்தியாக வாழும் அம்பாறையில் முஸ்லிம் அமைச்சர் பதவி அதாஉல்லாவுடன் பறிபோகி விமலவீர திஸாநாயக்க வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார். நிறைய முஸ்லிம் இணைப்பாளர்களை கொண்டுள்ள அவரது சேவைகள் முஸ்லிம் பிரதேசங்களுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிஜத்தில் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் யாரும் இல்லாத கடையில் யாருக்கு கோத்தா இவ்வளவு டீ ஆத்துகிறார் என்கின்றனர் இணையவாசிகள். தன்னுடைய கூட்டாளிகளான விமல், வாசு, கம்மம்வில போன்றோரின் நட்பை மதித்து அமைச்சை நிராகரித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா.

தலையிடிக்கு தலையணையை மாற்றியிருக்கும் கோத்தா அரசின் அமைச்சரவை "கோத்தாகோகம"வின் போராட்டக்காரர்களின் தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் நீடித்து நிற்குமா ? நீடித்து நின்றாலும் நாட்டுக்கு நன்மை பயக்குமா ? இல்லை யாரும் இல்லாத கடையில் யாருக்கு கோத்தா இவ்வளவு காலமும் டீ ஆத்தினார் என்பதை காலம் தீர்மானிக்குமா? சர்வதேச நாணய நிதியமாவது கோத்தாவை காப்பாற்றுமா? எதிரணி பலமற்ற இலங்கையில் ரணில் மட்டுமல்ல ஜனநாயகமும் பலமிழந்தே உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :