பசில் ராஜபக்ச பிரதமராவதற்கு நாட்டிலுள்ள சட்டத்தில் இடமில்லை:- விஜயதாஸ ராஜபக்ச



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
சாதாரண அரசாங்க வேலையில் கூட ஈடுபட முடியாத ஒரு நபரை அமைச்சராக நியமிப்பதோ அல்லது பிரதமராக்குவதோ நாட்டின் சட்டத்துக்கு முரணானது. இதனை எதிர்த்தே பசில் ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளேன் என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீது நம்பிக்கை வைக்கவே முடியாதென்றும்,

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை தற்காலிக பிரதமராக நியமிக்கும் முயற்சிகள் அரசாங்கத்துக்குள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகின்ற நிலையில், அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் சட்ட அங்கீகாரம் குறித்தும் விபரிக்கும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,ஆட்சி மாற்றம் அவசியமாக இருந்த வேளையில் கோட்டாபய ராஜபக்சவின் மீதான நம்பிக்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை இறுதியில் தோல்வியிலே முடிவடைந்துள்ளது. இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் மீது நம்பிக்கை வைத்தோம். அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆனால் அதன் பின்னர் அவரும் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீது நம்பிக்கை வைக்கவே முடியாது.

பொருத்தமில்லாத அதிகாரிகளை பொறுப்பான துறைகளில் நியமித்ததன் மூலமே நாடு பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி கண்டது. இதற்கு முன்னர் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட வேளையிலும் கூட நாட்டை கடன் பொறிக்குள் தள்ளவில்லை. யுத்த காலத்தில் கூட பாரிய கடன் நெருக்கடி நாட்டுக்கு ஏற்படவில்லை. ஆனால் யுத்தத்துக்கு பின்னர் நாட்டை முழுமையாக கடன் பொறிக்குள் தள்ளிவிட்டனர். மஹிந்த ராஜபக்சவினால் தான் நாடு கடன் பொறிக்குள் சிக்கியது என்பதே உண்மையாகும்.

பசில் ராஜபக்ச இன்று நாட்டை நாசமாக்கி வருகின்றார். பசில் ராஜபக்சவுக்கு இந் நாட்டில் சாதாரண அரசாங்கத்தில் பணியாளராகக் கூட வேலை செய்ய முடியாது. அதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை.
அரசியலமைப்பில் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி 20ம் திருத்தத்தை கொண்டுவந்தவுடன் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என இவர்கள் நம்புகின்றனர். ஆனால் 1948ம் ஆண்டில் D.S சேனாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அதுதான் செல்லுபடியாகும் சட்டமாகும். எமது நாட்டின் அல்லது வேறு எந்தவொரு நாட்டின் பிரஜையும் அமெரிக்க பிரஜையாக மாறுவதென்றால் அமெரிக்க சட்டமான 1952ம் ஆண்டு இயற்கையாகவே பிரஜாவுரிமை பெறும் சட்டத்துக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.

அதில் இதற்கு முன்னர் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாடுகளின் சட்டங்களை முழுமையாக நிராகரித்து அமெரிக்க சட்டங்களை முழுமையாக பின்பற்றுவதுடன் அமெரிக்காவுக்கு எதிரான நெருக்கடியான நிலை ஏற்படும்போது ஆயுதம் ஏந்தி போராடுவேன் என சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.

இலங்கையை பொறுத்தவரை, அரசியலமைப்பில் இது நீக்கப்பட்டாலும் கூட பிரஜாவுரிமை சட்டத்தில், யாரேனும் ஒரு நபர், இந்நாட்டில் பதிவு செய்யப்பட்டு பிரஜாவுரிமையை பெற்றிருந்தால், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒரு நபர் உலகில் எந்தவொரு இராச்சியத்திலும் சத்தியப்பிரமாணம் செய்திருந்தால் அன்றிலிருந்து குறித்த நபரின் பிரஜாவுரிமை இந்நாட்டில் நீக்கப்படும் என கூறுகின்றது.

ஆகவே இதற்கமைய பசில் ராஜபக்சவினால் இந்நாட்டில் அமைச்சுப்பதவியை மட்டுமல்ல எந்தவொரு அரசாங்க வேலையில் கூட ஈடுபட முடியாது. இந்நிலையில் அவரின் பதவியும் செல்லுபடியாகாது. இந்த விவகாரம் குறித்து நான் வழக்கொன்று தொடுத்துள்ளேன்.

ஜனவரி 12ம் திகதி இது தொடர்பான விசாரணைக்கு எடுக்கப்படும். ஆகவே சாதாரண அரசாங்க வேலையில் கூட ஈடுபட முடியாத ஒரு நபரை அமைச்சராக நியமிப்பதோ அல்லது பிரதமராக்குவதோ நாட்டின் சட்டத்துக்கு அமைய முரணானது. இவ்வாறான சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளையே இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :