தகவல் தொழில் நுட்பத்தையும் ஆங்கிலத்தையும் கட்டாயப்படுத்தி அதனை இலகுவாகவும் இலவசமாகவும் வழங்குவதன் ஊடாக நாட்டில் சிறந்ததொரு இளைஞர் படையணியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர் தெரிவித்தார்
இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் நிலையம் நடத்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கற்கை நெறிகளை பின்பற்றி பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு NVQ4 சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் சாய்ந்தமருது இளைஞர் நிலையத்தின் பொறுப்பாளர் எம்.பி.எம்.ஹாறுன்அவர்களது தலைமையில் 30.12.2021 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமூகத்தையும் பல்கலைக்கழகத்தையும் இணைக்கும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேலைத் திட்டத்தின் கீழ், இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் நிலையத்தால் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கற்கைகளை கற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்வியின் பால் ஈர்க்கச் செய்யும் முகமாக அவர்களது சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வை பல்கலைக்கழக சூழலில் நடத்துவதற்கு அனுமதி வழங்கினோம் என்றும் இவ்வாறான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இந்தப் பல்கலைக் கழகத்துக்கு புதிதான ஒரு ஒரு விடயமாகும் என்றும் தெரிவித்தார்.
இன்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
அதி மேதகு ஜனாதிபதி அவர்களது கல்வியை மேம்படுத்தும் கொள்கைகளுக்கு ஏற்ப, தகவல் தொழில்நுட்பம் அதேபோன்று ஆங்கிலத் துறை போன்றவற்றை விருத்தி செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் குறிப்பாக கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் ஒரு ஆணைக் குழுவை நியமித்துள்ளார் என்றும் அதில் நானும் ஒரு அங்கத்தவராக உள்ளேன் என்றும் அண்மையில் கூட இது விடயமாக ஒரு சந்திப்பு இடம்பெற்றது என்றும் உபவேந்தர் றமீஸ் அபூவக்கர் தெரிவித்தார்.
தற்போதுள்ள கல்விமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்வது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் குறிப்பாக ஆங்கிலக் கல்வியையும் தகவல் தொழில் நுட்பத்தையும் விருத்தி செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும் தகவல் தொழில் நுட்பத்தையும் ஆங்கிலத்தையும் கட்டாயப்படுத்தி அதனை இலகுவாகவும் இலவசமாகவும் வழங்குவதன் ஊடாக நாட்டில் சிறந்ததொரு இளைஞர் படை அணியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு பட்டப் படிப்புகளையும் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வேலைத்திட்டங்களும் இடம்பெற்றுவருகின்றன என்றும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று சான்றிதழ்களை பெறும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்த சான்றிதழ்களுடன் நிறுத்தி விடாது தொடர்ந்து கற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடியதாக அமையும் என்றும், மாணவர்கள் அவர்கள் சார்ந்துள்ள துறைகளில் மட்டும் பாண்டித்தியம் பெற்றால் போதாது என்றும் மேலதிகமாக மொழியாற்றல் மிக முக்கியமானதாக அமைய வேண்டும் என்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல், தலைமை தாங்கும் திறன் போன்றவற்றிலும் தங்களது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் முன்பு போல் இல்லாது தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலக் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, குறித்த கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களை உருவாக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு முகம் கொடுக்கும் விதத்தில் மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் மற்றும் அடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர்கள் விரிவுரையாளர்கள் மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment