கடந்த காலங்களிலே மிகவும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசக் கூடிய ஆளுமை மிக்கவரான அல்ஹாஜ் கே.எம்.முஹைதீன் (லெப்பை ஹாஜியார்) அவர்களை கல்குடா சமூகம் இழந்து நிற்கிறது. கல்குடா சமூகத்துக்கு இந்த இழப்பு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் கே.எம்.முஹைதீன் (லெப்பை ஹாஜியார்) அவர்களின் மறைவையொட்டி, அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எமது கட்சியின் தவிசாளர் அமீர் அலி அவர்களுக்கு கடந்த காலங்களிலே பக்கபலமாக நின்று செயற்பட்டவர். கட்சியின் வளர்ச்சிக்காக பல முனைப்புகளை எடுத்தவர். பள்ளிவாசல் தலைவராக, ஒரு சிறந்த போராளியாக இருந்த அவர், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக இருந்து கல்குடா மக்களுக்கு சேவை செய்தவர்.
அவருடைய இழப்பு கல்குடா மக்களுக்கு மாத்திரமல்ல, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் பேரிழப்பாகும்.
விடுதலைப் புலிகள் காலத்திலே, அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த கிழக்கு முஸ்லிம் சமூகத்துக்கு, விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் அரிய பல பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
அதுபோன்று, அரசியல், சமூகப் போராட்டத்திலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட, ஒரு சுயநலமற்ற மனிதனாக நான் அவரைப் பார்க்கின்றேன். எப்பொழுதுமே, கல்குடாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலே குறியாக இருந்தவர்.
அவரை இழந்து நிற்கின்ற மட்டக்களப்பு முஸ்லிம் சமூகத்துக்கும் மற்றும் அவருடைய குடும்பதினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தினை கட்சியின் சார்பிலும், தனிப்பட்ட ரீதியிலும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நான் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு செல்லும் போதெல்லாம், அவரை சந்தித்துவிட்டு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். அதுபோன்று, அண்மையில், நான் மட்டக்களப்புக்கு சென்றிருந்த வேளை, அவரது இல்லத்துக்கு சென்று, அவரை சந்தித்து, அவரோடு உரையாடி சுகம் விசாரித்து விட்டு வந்த அந்த நிகழ்வினை இத்தருணத்தில் மீட்டிப் பார்க்கின்றேன்.
இன்றைய தினம், வரவு செலவு திட்டத்தின் இறுதிநாள் என்பதினால், அவரது ஜனாஸாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதை எண்ணி, நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். அன்னாரை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்வானாக. நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்திப்போம்.”
0 comments :
Post a Comment