தொப்புள்கொடி உறவுகள் தூக்கிப்பிடிப்பது எதை?



சுஐப் எம்.காசிம்-
ந்திய, இலங்கை அரசுகளுக்குள்ள உறவுகளில் அல்லது சர்வதேச மட்டத்துடன் தமிழர் தரப்பு வைத்துள்ள தொடர்புகளில், ஆதாயம் அடையும் இலங்கைச் சக்திகளைப் போன்று முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கிறதா? இவ்வாறு, அரசியல் ஆதாயம் ஏதாவதை அடையுமளவுக்கு இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச வாசல்களைத் தொட்டிருக்கிறதா? இவற்றையே,முதலில் ஆராய வேண்டும்.

அவ்வாறு சர்வதேச எல்லை வரை சென்ற இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறதா? ‘இல்லை’ என்பதுதான் முஸ்லிம் அரசியல் தளத்தின் பொதுவான அபிப்பிராயம். முஸ்லிம்களின் அபிலாஷைகள் சர்வதேச மயப்படுத்தப்படாதமைக்கு, தலைமைகளின் அணுகுமுறைகளிலும் தவறு நடந்திருப்பதாகவே உணர முடிகிறது.

இதில், எங்கு தவறு நடந்திருக்கிறது? என்பதை ஆராய வேண்டிய கடப்பாட்டுக்குள் மூன்றாம் தேசியம் வந்துமிருக்கிறது. இதன் பின்னரும், இந்தக் கடப்பாடுகள் கண்டுகொள்ளப்படாவிடின், அரசியல் அந்தஸ்துக்குப் பொருத்தமான சமூகமாக இந்தச் சமூகத்தை அடையாளப்படுத்த முடியாமல் போகும். எதை, எங்கு ஆரம்பிப்பது? என்பதில் இந்தச் சமூகத்தின் அரசியல், சிவில் தலைமைகளுக்கு தடுமாற்றம் இருக்கிறது. இதனால்தான், மூன்றாம் சமூகத்தின் அரசியல் முகவரிகள் அடையாளம் இழக்கவோ, சபையேறாது போகவோ செய்கின்றன.

இந்தியாவின் இருப்பிடமும், இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழியும் இந்தியாவின் தென்னக மாநிலங்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தவே செய்கிறது. இந்த தொடர்புகள், அரசியலில் பெரிதளவு இல்லாவிடினும் இலக்கிய, மத ரீதியிலானவற்றுடன்தான் பிணைந்து நிற்கிறது. ஆனால், இலங்கை முஸ்லிம் தலைமைகளுக்கு இந்தியாவுடன் குறிப்பாக, தமிழகத்துடன் தேவைப்படுவது அரசியலுறவுதான். என்ன செய்வது? தமிழக அரசியலில் செல்வாக்குச் செலுத்துமளவுக்கு அங்கு முஸ்லிம் கட்சிகள் இல்லையே!. இதனால், தமிழக முஸ்லிம் தலைவர்களுடன் ஆறுதலுக்கான சந்திப்புக்களை அல்லது மரியாதை நிமித்த வரவேற்புக்களை செய்யும் தேவைப்பாடுகள், இலங்கை முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளன. பெரிதாக இல்லாவிட்டாலும் பார்வைக்கு இந்தப் படங்களும், செய்திகளும் இவர்களது அரசியல் வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறதுதான். இந்த பரபரப்புக்குள்தான், இத்தலைமைகளின் இயலாமைகள் ஒளிந்து கொள்கிறதோ தெரியாது!

அகில இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், இங்கு வந்து நடத்திய சந்திப்புக்கள், அவரது பேச்சுக்கள் எல்லாம், பல்லின மதங்கள், பல்வகைக் கலாசாரங்கள் வாழும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சகோதரத்துவமும், விட்டுக்கொடுப்பும்தான் சிறுபான்மைச் சமூகங்களை பாதுகாப்புடன் வாழவைக்கும் என்ற தொனிப்பட இருந்தது. இது, இங்குள்ள சிறுபான்மைத் தலைமைகளுக்கு எடுத்தோதப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம். தனியலகு, கரையோர மாவட்டம் உள்ளிட்ட மொழி, மத, இன அடையாள அரசியல் இந்தியாவைப் போன்று, இலங்கையிலும் பொருந்தாது என்பதுதான் காதர் மொஹிதீனின் பூடகமான கருத்து. இதற்குப் பின்னராவது, முஸ்லிம் தலைமைகள் புதிய வியூகங்கள் வகுக்கும் என எதிர்பார்ப்பதுதான் யதார்த்தம்.
இலங்கையில் முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்ட சமகாலத்தில்தான், இந்தியாவிலும் இந்த முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டது. இங்குள்ள கட்சிகள் மாறி மாறி ஆட்சியாளர்களுடன் அமர்வதைப் போன்று, காதர்மொஹிதீனின் கட்சி, அங்கு அடிக்கடி தாவும் அரசியல் செய்வதில்லை. ஆரம்பித்த காலம்தொட்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடனே பயணிக்கிறது.

தி.மு.கவுடன் இவ்வளவு நெருக்கமுள்ள இந்த முஸ்லிம் லீக், அங்குள்ள முஸ்லிம்களுக்கு செய்பவை என்ன? இங்குள்ள முஸ்லிம்களுக்கு செய்கின்றவை என்ன? எதைச் செய்ய வேண்டுமென்பதற்காக இலங்கை சிறுபான்மை தலைமைகள், காதர் மொஹிதீனின் வருகைக்கு இத்தனை நாட்டம் காட்டுகின்றன. தமிழக அரசியலில், இந்த முஸ்லிம் லீக், இங்குள்ள முஸ்லிம்களின் எந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுத்தது என்ற சிலரின் ஆதங்கமெல்லாம் இனியாவது, குரல் கொடுக்கட்டும் என்ற எதிர்பார்ப்புக்களையாவது ஏற்படுத்தட்டும்.

வடக்கு, கிழக்கில் தாய்மொழிச் சமூகங்கள் மத்தியில் நிலவுகின்ற, சின்னச்சின்ன இழுபறிகளை தீர்ப்பதற்கு, தமிழக முதல்வர் தலைமையில் ஒரு சந்திப்பையாவது இந்திய முஸ்லிம் லீக் செய்வதுதான், இலங்கை விஜயத்துக்கு அவர் செய்யும் கைங்கர்யம். அரசியலால் அல்ல, ஆரம்ப காலத்து உறவின் உரிமையால் இக்கட்சிக்கு இதைச் செய்ய முடியும்தானே!

வடபுல முஸ்லிம்களின் வௌியேற்றம், கொரோனா காலத்தில் முஸ்லிம் ஜனாஸாக்களுக்கு நடந்த கதி, இவைபற்றி ஆறுதலுக்காவது தமிழக சட்டசபையில் ஏதாவது ஒலிக்கச் செய்திருக்கலாம். இந்திய மத்திய, மாநில அரசுகளுக்குள்ள பலத்தில் இந்தக் குரல்கள் எதையும் செய்யப்போவதில்லைதான். சம்பிரதாயத்துக்காக அல்லது “இலங்கை தம்பிக்கு வலித்தது, தமிழக அண்ணனுக்கு கனத்தது” என்ற உறவின் அடையாளத்துக்காக ஒலித்திருக்கலாமே!

இவை, எதுவும் குறைகளுக்காகச் சுட்டிக்காட்டப்படவில்லை. தொப்புள்கொடி உறவுகளின் உணர்வுகளுக்காகவே தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. தமிழ் பேசும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும், அல்லது தமிழ்மொழி பேசுவோர் சிறுபான்மையாக வாழும் தேசங்களிலுள்ள எமது உறவுகளை மொழியால் இணைக்கவாவது, இந்தக் கட்சிகள் எதையாவது செய்யட்டும்.
எனினும், தமிழ் நாடு முஸ்லிம் முற்போக்கு கழகம் அங்குள்ளோருக்கு மட்டுமல்ல, இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கும் குரல் கொடுத்துள்ளமைக்கான பதிவுகள் இருப்பது, எதையாவது எதிர்பார்ப்போருக்கு ஆறுதல்தான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :