முஸ்லிம் சமூகத்திற்குள் வாக்குகளுக்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களின் நலன் கருதியே பத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம். பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தாளுவதற்கான சதிகளை தொடர்ச்சியாக சிலர் செய்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலையை தோற்றுவிக்கும். இந்நிலையை முதலில் மாற்றியமைக்க வேண்டும். அரச உயர் பதவிகளிலில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இதன் உண்மைத் தன்மை நன்றாக விளங்கும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸின் 2021ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட மதஸ்தலங்கள், கழகங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கான அலுவலக பாவனை பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (13) அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதேச செயலக கேட்போர் கூடங்களில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
அடுத்த தேர்தலை வைத்து நாங்கள் அரசியல் செய்வதாக இருந்தால் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வெறும் வெற்றுக் கோசத்தோடு மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வீதியில் நின்றாலே மக்கள் எம் பின்னால் அணி திரள்வார்கள். இந்த அரசியலை நாங்கள் செய்வதற்கு முற்பட்டால் நம் சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எங்களுக்குள்ளது. நாங்கள் எங்கள் தலையை அடமானம் வைத்துத்தான் சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம். எங்கள் முடிவுகள் பல வெற்றிகளை சமூகத்திற்காக பெற்றுத் தந்ததுள்ளது.
ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் நம் சமூகத்தில் தேங்கி கிடக்கிறது. இவற்றுக்கான தீர்வை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். அதை விட்டு விட்டு மக்களை பலிக்கடாவாக்கி நாம் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது பெரும் அயோக்கியத்தனமானதாகவே நாங்கள் பார்க்கிறோம். மருந்து கசப்பானதுதான் அதை பருகுவதன் மூலமே நமக்கு பிடித்த நோய் நம்மை விட்டு பிரியும் என்றார்.
மேலும் இந்நிகழ்வுகளில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தத்தார்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைசேனை, இறக்காமம், நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேச செயலகங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட கழகங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கான உதவிகள் இதன்போது வழங்கிவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment