நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தவறினால், கூகுள் வரைபடம் கூட நிறுத்தப்படும்:- ஹர்ஷ டி சில்வா



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறினால், நாட்டின் கூகுள் வரைபடம் கூட நிறுத்தப்படும் நிலைமை ஏற்படுமென்றும், அடுத்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக $4.843 Billion ( ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபா ) கடனாக செலுத்த வேண்டியுள்ள நிலையில் எமது கையிருப்பில் வெறும் $140 Million ( சுமார் 3,200 கோடி ரூபா ) உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சு மற்றும் பிரம்புகள், பித்தளை மட்பாண்டங்கள்,மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில்:-

மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கையிருப்பு தொகையை நேற்று மத்திய வங்கி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கையிருப்பானது $1.587 Billion ( சுமார் 36 ஆயிரத்து 400 கோடி ரூபா ) எனவும் முன்னைய மாதத்தை விடவும் 30% குறைவடைந்துள்ளது எனவும் கையிருப்பிலுள்ள திரவ நாணயம் $1.009 Billion ( சுமார் 23 ஆயிரம் கோடி ரூபா ) எனவும் இது 40% குறைவு எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது. அப்படியென்றால் கையிருப்பில் உள்ள திரவ நாணயமாக $1 Billion ( 23 ஆயிரம் கோடி ரூபா ) மட்டுமே உள்ளது.

இந்நிலையில் நாட்டிலுள்ள வங்கிகளிடமிருந்து மத்திய வங்கி பெற்றுக்கொண்ட குறுகியகால கடன்களாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துக்கு மாத்திரம் $114 Million ( சுமார் 2,600 கோடி ரூபா ) செலுத்த வேண்டியுள்ளது. ஏனைய கடன்களாக $1.137 Billion ( சுமார் 26 ஆயிரம் கோடி ரூபா ) அதற்கு வட்டியாக $194.7 Million ( சுமார் 4,460 கோடி ரூபா ) செலுத்த வேண்டியுள்ளது. எனவே கையிருப்பிலுள்ள நிதியில் இவற்றை செலுத்தினால் ஜனவரி மாதத்தில் வெறுமனே $140 Million ( சுமார் 3,200 கோடி ரூபா ) மட்டுமே மிஞ்சும். அடுத்த வருடம் ஆரம்பிக்கும் போது எம்மிடம் பணமே இருக்காது. இவ்வாறன நெருக்கடி நிலை ஒருபோதும் நாட்டில் ஏற்பட்டதே இல்லை. அடுத்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் $4.843 Billion ( ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபா ) மொத்தமான கடனாக செலுத்த வேண்டியுள்ள நிலையில் இப்போது எமது கையிருப்பில் வெறும் $140 Million ( சுமார் 3,200 கோடி ரூபா ) உள்ளன. இது நாட்டில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தப்போகின்றது. ஆகவே அரசாங்கமும் நிதியமைச்சரும் பொறுப்புடன் செயற்படாமல் போனால் 2 கோடியே 20 லட்சம் பேருக்கும் உணவு இல்லாது, மருந்துகள் இல்லாது, எரிபொருள் இல்லாது பாதிக்கப்படும் நிலையே ஏற்படும். எனவே அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன? அரசாங்கம் சர்வதேச முதலீடுகளையும் நிதியுதவிகளையும் நாட்டுக்குள் கொண்டுவருவதாக கூறியது ஆனால் ஒரு ரூபாவையும் நாட்டுக்குள் கொண்டு வரவில்லை. அரசாங்கத்தின் 'ரோட் மெப்' திட்டத்தில் பல காரணிகளைக் கூறினாலும் அதில் எதுவுமே வெற்றியளிக்கவில்லை. இப்போது நாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் உள்ளது. ஏனென்றால் கையிருப்பில் உள்ள பணத்தில் கடனை மட்டுமே செலுத்த முடியும்.

ICUவில் அனுமதிக்க வேண்டிய பிள்ளையை வைத்தியரிடம் ஒப்படைக்காது வீட்டில் கசாயம் கொடுத்து குணப்படுத்துவேன் எனக் கூறுவது முட்டாள்தனமாகும். ICUக்கு ஒப்படைக்க வேண்டிய பிள்ளையை போன்றே இன்று நாடும் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

அவர்களை பாதுகாக்க சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும். இல்லையேல் மக்களுக்கு ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் யார் பொறுப்புக்கூறுவது. நாடு பெற்ற கடனை செலுத்த முடியாது போனால் நாடே முழுமையாக வீழ்ச்சியடையும். பொருளாதார நெருக்கடி நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டின் கூகுள் வரைபடம் கூட நிறுத்தப்படும். இதுவே சிறிய உதாரணமாகும். ஆகவே இதனை விளங்கிக் கொள்ளுங்கள். எமக்கிருக்கும் ஒரே தீர்வு சர்வதேச நாணய நிதியமாகும். அதனை தவறவிட்டுவிட வேண்டாம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :