நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களை திறப்பதற்கு இடமளித்தமை இயலாமை.-வேலு குமார்



"நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களை திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே." என ஜனாநாயக மக்கள் முன்னனணியின் பிரதி தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக மேலும் பின்வருமாறு தெரிவித்தார்..

மலையக மக்களின் அரசியல் மற்றும் நிர்வாக அதிகார பகிர்வு தொடர்பாக அதிகம் பேச வேண்டிய, அதிகம் அக்கறை காட்டவேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். இவ்வாறான சூழ்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களை திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே ஆகும். கடந்த நல்லாட்சியில், தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் தேங்கிக்கிடந்த அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டது. அதன் போது, அரசியல் அதிகார பகிர்வு, அரச நிர்வாக அதிகார பகிர்வு இரண்டையும் சமநிலையாக பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இலங்கையின் மிகப்பெரிய இரண்டு பிரதேச சபைகளாக இருந்த நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை, நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகளை, அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வுட் என 6 பிரதேச சபைகளாக தரம் உயர்த்தினோம். அதன் மூலம் மலையக மக்களின் நீண்டகால அபிலாஷையாக இருந்த, அரசியல் அதிகார பகிர்வை நாம் பெற்றுக்கொடுத்தோம். அதனை தொடர்ந்து, அரச நிர்வாக அதிகார பகிர்வாக பிரதேச செயலகங்களை அதிகரிப்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டது. அதற்கான அரச வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. அதன் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் இருந்த 5 பிரதேச செயலக பிரிவிகளை 10 பிரதேச செயலக பிரிவுகளாக அதிகரிப்பதற்கு வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

2019 ஆட்சி மாற்றத்தின் பின், கடந்த இரு வருட காலத்தில், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றைய அரசாங்கத்தின் இரண்டு பாதீடுகள் முன்வைக்கப்பட்டுவிட்டது. எனினும் அரச தரப்பில் உள்ளவர்கள், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு அவசியமான நிதியையும் ஏனைய வளங்களையும் பெற்றுக்கொள்வதற்குரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று, புதிய பிரதேச செயலகம் தொடர்பாக சமூகத்தில் கேள்விகள் எழ தொடங்கிவிட்டது. இதனை மூடி மறைப்பதற்காக, இன்று தாலவாக்கலையில் உப பிரதேச செயலக காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பிரதேச செயலகமொன்று உருவாக்கப்படுவது தடுக்கப்பட்டிருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களின் தசாப்தகால பிரச்சினையாக இப்பிரச்சினை உள்ளது. இதனை தீர்ப்பதற்கு பதிலாக இன்னும் பல தசாப்தங்களுக்கு இழுபறி நிலைக்கு தள்ளும் செயற்பாடே இவ் உப பிரதேச செயலக காரியாலயம் ஆகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த அரசாங்கத்தில் புதிய பிரதேச செயலக பிரிவுகளை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதன் படி அரச வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை, தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள், அழுத்தம் கொடுத்து, நடைமுறை படுத்துவது மட்டுமே உள்ளது. அதை கூட செய்ய அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு இயலுமை இல்லையா? அல்லது, அவர்களின் வழமையான அசமந்த போக்கா இந்நிலைக்கு காரணம்? அல்லது வழமைபோல மக்கள் பிரச்சினையை இழுத்தடிப்பு செய்து அரசியல் லாபம் ஈட்டும் இன்னுமாறு நடவடிக்கையா? என்பதையே நாம் மக்கள் முன் கேள்வியாக முன்வைக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :