1)1957. 12.25: பெரு வெள்ளம்
2) 1978. 11.23: புயல்
3) 2004.12.26 : சுனாமிப் பேரலை.
1957 இன் பெரு வெள்ளம் ஏற்பட்டதும் ஊரில் இருந்த பெரும்பாலான மண் குடிசைகள் நீரில் கரைந்து மூழ்கின. வெள்ள நீரைக் கடலுக்குள் அனுப்ப எடுத்த முயற்சிகளும் கடல் கொந்தளிப்பால் வெற்றிதரவில்லை. வெள்ளத்திற்குள் அகப்பட்ட பெண்கள், பிள்ளைகள், முதியோர், தோணிகள் மூலமே காப்பாற்றப்பட்டனர். கடைகளில் சிக்கிய பொருட்களும் தோணி மூலமே வேறிடங்களுக்கு மாற்றப்பட்டன. இரவு முழுக்க வீட்டுக்குள் மேசையின் மேல் தங்கியிருந்த நான் காலை 10 மணியின் பின்னரே வெளியேறினேன். அப்போதுவெள்ளம் எனது நெஞ்சு அளவுக்கு இருந்தது. அயலில் இருந்த பல வீடுகள் தரைமட்டமாகிக்கிடந்தன.
உரில் உள்ள பல முன்னணி பிரமுகர்கள், இளைஞர்கள், தோணிச் சொந்தக்காரர்கள் இணைந்து மக்களுக்கு உதவி செய்தனர். அரச நிறுவனங்களும் உதவி செய்தன. அரச நிவாரணப் பொருட்கள் ஹெலிக்கொப்ரர் மூலம் கொண்டு வரப்பட்டன. இவற்றை இறக்கி விநியோகிப்பதில் சாய்ந்தமருது சிரேஷ்ட பாடசாலைச் (கல்முனை சாஹிரா) சாரணர்களான நாங்கள் முக்கிய பங்களிப்புச் செய்தோம்.
இவ்வெள்ளப் பெருக்கின் போது சாய்ந்தமருது மத்திய மருந்தகத்திற்குச் செல்லும் பாதையில் இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 1973 வரை இம்மருந்தகம் சோபையிழந்து காணப்பட்டது. 1957இல் அடிக்கல் இடப்பட்ட பிரசவ விடுதிக்கான கட்டமும் கட்டப்படவில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடு மீண்டும் 1974இல் மர்ஹும் M. C. அகமதுவினால் செய்யப்பட்டு பின்னர் 1979ஆண்டில் அமைச்சர் A. R. மன்சூர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இப் பெரு வெள்ளத்தினால் கற்றுக் கொண்ட பாடம் எதிர்காலத்தில் வெள்ளத்தின் போது கரைந்த போகாத வகையில் செங்கல் கொண்டு வீடுகள் கட்ட வேண்டும் என்பது.
1978.11.23 இல் புயல் வீசுவதற்கு சில மணிநேரத்திற்கு முன் தான் நான் சியம்பலாண்டுவ வைத்திய சாலையிலிருந்து சாய்ந்தமருது வைத்திய சாலைக்கு மாற்றலாகி வீடு வந்து சேர்ந்தேன். அன்று வீசிய புயல் ஊரில் இருந்த பெரும்பாலான தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்தன. அத்துடன் மின் கம்பங்கள் பலவும் குடை சாய்ந்தன.பல சுற்றுமதில்கள் விழுந்து நொறுங்கிக் கிடந்தன. மருந்தகத்தைச் சுற்றிக்கட்டப்பட்ட புதிய சுற்று மதிலும் விழுந்து கிடந்தன. இப் புயலின் பின்னரே தோணாவுக்கு மேற்கே இருந்த பகுதிக்கு மின்சாரம் கிடைத்தது. இதற்கு உதவியவர் முன்னாள் அமைச்சர் மர்ஹும் A. R. மன்சூர் அவர்கள். அவ்வேளை நான் அம்பாரை மாவட்ட சபையின் சா. ம. உப அலுவலகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாகக் கடமையாற்றினேன்.
இப் புயல் மூலம் கற்றுக்கொண்ட பாடம் வீடுகளுக்கு அருகில் உயர்ந்த மரங்களை நடக்கூடாது என்பது.
2004.12.26ம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலை சாய்ந்தமருதை முற்றாகப் புரட்டிப் போட்டுள்ளது. அதன் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. சுனாமியின் பின்னரான நடவடிக்கைகளில் ஊரின் சகல மட்டங்களிலும் உள்ளவர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு நிவாரண நடவடிக்கைகள் பலவற்றிலும் பங்களிக்க முன்வந்தனர். பெரிய பள்ளிவாசல் தலைமையில் அனர்த்த முகாமை சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு ஊரின் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் எனப் பலரும் ஒத்துழைப்பு நல்கினர். அக்கால கட்டத்தில் கொழும்பிலும் வெளியூரிலும் தொழில் புரிந்த இப்பிரதேசத்தைச் சேர்ந்த பல பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சிரேஷ்ட நிர்வாகிகள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற பலரும் ஊருக்கு வந்து ஒத்துழைத்தனர்.
ஆயினும் சில அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கால் பல நல்ல திட்டங்கள், முன்னெடுப்புகள் நிறைவேறாமல் போனது மிக மனவருத்தமான சம்பவமாகும். (உ+ம்: தோணா அபிவிருத்தி)
பல தசாப்தங்களாக சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஊர் தற்போது தகுதியான தலைமைத்துவம் இல்லாது தவிக்கின்றது.
எனவே சுனாமி அனர்த்தம் உட்பட பல இயற்கை அனர்த்தங்களின் போதும் மக்களின் சீரான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் ஒவ்வொரு ஊரிலும் சிறந்த ஒரு தலைமத்துவ சபை அவசியம் என்பது நாம் கற்றுக்க கொண்ட பாடமாகும்.
இச் சபை ஒரு அனர்த்த முகாமை சபையாகவும் நிரந்தரமாக இயங்க வேண்டும்.பள்ளிவாசல்கள் நிர்வாக சபை வேறாக இயங்க வேண்டும். தலைமத்துவ சபையின் நிர்வாகம் மூன்று பிரிவாக இருக்க வேண்டும்.
1.ஆலோசனை சபை
2. நிர்வாக சபை
3. தொண்டர் சபை
அக்கறையுள்ளவர்களின் கவனத்திற்கு.
Dr. M. I. M. ஜெமீல்.
0 comments :
Post a Comment