ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு இன்று புதன்கிழமை (08) பிற்பகல் 02.30 மணியளவில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமாகி பிற்பகல் 04.45 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இந்த அமர்வுக்கு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 32 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். இவர்களில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 06 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 05 உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தனர்.
மாநகர முதலவரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 03 உறுப்பினர்கள், ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவருமாக 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.
சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 06 உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் மாநகர முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment