கடலரிப்பினால் கல்முனைக்கு பாரிய அச்சுறுத்தல்;சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அவசர உதவியைக் கோருகிறது மாநகர சபை



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனைப் பிரதேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களைக் கோரும் தீர்மானமொன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 44ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை (29) பிற்பகல்
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோது மாநகர சபை உறுப்பினர் பொன் செல்வநாயகம் இது தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்திருந்தார். இதனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.குபேரன் வழிமொழிந்தார்.

உறுப்பினர் பொன் செல்வநாயகம் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில்;

கடந்த பல வருடங்களாக எமது கல்முனைப் பிரதேசமானது பருவப்பெயர்ச்சி மழை காலங்களில் கடலரிப்புக்குள்ளாகி வந்தபோதிலும் சாதாரண காலங்களில் வழமை நிலைக்குத் திரும்பி விடும். ஆனால் அண்மைக் காலமாக கடல் சீற்றத்தினால் எமது கல்முனைப் பிரதேசம் பாரியளவில் கடலரிப்புக்குள்ளாகி வருகின்றது. குறிப்பாக பாண்டிருப்பு பகுதியில் கடலரிப்பு மிகக் கடுமையாக காணப்படுகின்றது. இதனால் எனது வட்டாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தென்னந்தோப்புகள் அழிவடைந்துள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 80 தூரமளவில் கொங்கிரீட் வீதியும் கடலில் சங்கமமாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் சிவன் கோவில் மற்றும் விஷ்ணு மடாலயம் போன்றவற்றின் முன்னாலும் கடலரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கல்முனை கடற்கரை பள்ளியில் தொடங்கி பெரிய நீலாவணை சேதனப்பசளை உற்பத்தி நிலையம் வரை பல கோடி ரூபா நிதியில் காபட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்ற கடற்கரை வீதியையும் கடல் விழுங்கும் அபாயம் காணப்படுகிறது. இந்த நிலையை நீடிக்க விட்டால் எமது சொத்துக்கள் கடலால் காவு கொள்ளப்பட்டு, பாரிய அழிவுகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. கடற்கரை பிரதேசம் என்பது விலைமதிக்க இயற்கை முடியாத வளமாகும். அந்த இயற்கை வளங்களை அடுத்த சந்ததிக்கு பாதுகாத்துக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம்.

ஆகையினால், எமது மாநகர சபையானது இது விடயத்தில் விசேட திட்டங்களை வகுத்து, கரையோரம் பேனல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் சூழல் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உதவியுடன் அவற்றை செயற்படுத்தி, இக்கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்- என்று வலியுறுத்தினார்.

இது விடயத்தில் மக்களினதும் வளங்களினதும் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எமது மாநகர சபையானது இது விடயத்தில் அதிக கரிசனை செலுத்தி, சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு, தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்த மாநகர முதல்வர், இத்தீர்மானத்தை சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.

இந்த சபை அமர்வில், உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் சமர்ப்பித்த முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.ஐ.எம்.முஹைதீனுக்கான அனுதாபப் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டதுடன் கிண்ணியா, குறிஞ்சாங்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :